மாஞ்சோலை: ஒரு பயணக்குறிப்பு – பெலிக்ஸ்

0

பின்னோக்கிச் செல்லும் மரங்களும் தாலாட்டுப் பாடும் ஜன்னலும் அதன் கம்பிகளுக்கு இடையில் விரியும் உலகமும் என பயணங்கள் தரும் அனுபவம் அலாதியானது.தொடர்வேலைப்பளுவின் காரணமாக சென்னையின் சிக்னல்களுக்கு இடையே சிக்கித்தவித்த எனக்கு உயிர்வளியாக அமைந்தது மாஞ்சோலைப் பயணம்…
mancholai1

மாஞ்சோலையைப் பற்றி ஓரிருமுறை செய்திகளில் படித்தது உண்டு.நேரில் காணும் வாய்ப்பு ஊர்க்குருவிகளின் மூலம் கிடைத்தது.இன்றைய இணைய யுகத்தில்,watsapp குறுஞ்செய்தி மூலமாக ஊர்க்குருவிகள் அறிமுகம் கிடைத்தது.புதிய நண்பர்களுடன் மாஞ்சோலைக்கு பயணம் செய்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.எனது நிழற்படவி மற்றும் இரண்டு நாட்களுக்கான உடைகளை எடுத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு (3-ஜூலை-15 )அனந்தபுரி இரயிலை பிடித்தேன்.இரயிலின் தடதட ஓசைக்கு மத்தியில் சிறிய அறிமுகத்துடன் ஊர்க்குருவிகளின் தோழர்களோடு பறக்கத் தொடங்கியிருந்தேன்.

manjolai nalumukku

காலை 8.30 மணியளவில் திருநெல்வேலியை அடைந்தோம்.திருநெல்வேலியை அடைந்தவுடனே கால்கள் அனிச்சையாக இருட்டுக்கடையை நோக்கி நகரத் தொடங்க அதற்காக மாலைவரை காத்திருக்க வேண்டும் என்று தெரிந்ததும் அனைவருக்கும் ஒரு ஏமாற்றமே.தோழர் பாலாஜி ஏற்பாடு செய்திருந்த இடத்தில் அனைவரும் குளித்துவிட்டு மாஞ்சோலையை நோக்கி பயணம் தொடங்கியது. காலமின்மையால் பயணத்தில் காலை உணவை முடித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.மாஞ்சோலைக்கு செல்வதற்குமுன் வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டியது அவசியம்.ஊர்க்குருவிகளின் ஏற்பாட்டாளர்கள் அனுமதியினை பெற்றிருந்தனர்.மாலை 5மணிக்குள் மலைஅடிவாரத்துக்கு திரும்பிவிடவேண்டும் என்பது வனத்துறையின் உத்தரவு.நாங்கள் மலை ஏறத்தொடங்கவே நண்பகல் 12மணியானது,உற்சாகமாக பயணிக்கத் தொடங்கினோம்.இத்தனை மரங்களுக்கு இடையில் இதமாக அணில்போல சென்றுகொண்டிருந்த போது சென்னையின் வெப்பநிலையை மனதால் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.
manjolai3

மலை பயணத்தின் போதுதான் தெரிந்தது,வனத்துறையின் கட்டுப்பாட்டின் அவசியமும், அதன் நன்மையையும்.மற்ற மலைவாழ்தளங்கள் போல் இல்லை மாஞ்சோலை மலை,மக்கள் போக்குவரத்து முறைபடுத்தப்பட்டிருப்பதால் உயிரினங்கள்,செடிகள்,மரங்கள்,பறவைகள் பாதுகாக்கப்படுகிறது. இன்றளவும் அடர்ந்த காடுகள் தாண்டியே மாஞ்சோலையை அடைய வேண்டியுள்ளது.சில மாதங்களுக்கு முன் தமிழகத்தின் ஒரு காட்டுப்பகுதியில் மர்மமாக இறந்து கிடந்த யானையையும்,காட்டெருமைகளையும் உடல்கூறுசோதனை செய்து பார்த்தபோது அதன் குடலில் இருந்தது,நெகிழிகள்.காடுகளுக்கு சுற்றுலா செல்லும் நம்மவர்கள் விட்டுச்சென்ற நெகிழியைத் தின்று இறந்திருக்கின்றன அவை.அந்த பிரச்சனைகள் எதுவும் இங்கு இல்லாமல் இருந்தது.மாஞ்சோலை காக்காச்சி,நாலுமுக்கு,குதிரைவெட்டி போன்ற இடங்களைக் கொண்டது.

mancholai2

திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மருக்கு உதவி செய்ததன் பொருட்டு சிங்கம்பட்டி ஜமீன் பரிசாகப் பெற்ற நிலத்தை பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற நிறுவனத்திற்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார். இரயத்துவாரி நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகும் இந்நிறுவனம் அரசுடன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டு தேயிலைத் தோட்டத்தை நடத்தி வருகிறது. ஊட்டி,கொடைக்கானல் போல் இங்கு தனிப்பட்ட யாரும் ஒரு சதுர அடி இடம்கூட வாங்க முடியாது.அதனால் இந்த வனப்பகுதியில் தங்கும் விடுதிகள் கிடையாது ஆகையால் மாலையே மலையில் இருந்து கீழே இறங்க வேண்டியது கட்டாயமாகிறது. அடுத்த களக்காடு முண்டந்துறை மலைப்பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,நீரோடைகள்,அடர்ந்த காடுகள்,காட்டுக்கோழிகள்,மயில்கள் பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்வை அளித்தது.களக்காடு முண்டந்துறை வனப்பகுதியானது புலிகள் காப்பக வனப்பகுதியாகும்,ஆனால் எங்கள் கண்களில் புலியைக் காணமுடியவில்லை,அடர்ந்த உட்பகுதியில் புலிகள் இருக்கும் போல.
manjolai4

நேரமின்மை காரணமாக எங்கள் குழு நேராக நாலுமுக்குவை அடைந்தது,அங்கு எங்களுக்கு ஜான் அவர்களால் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அசைவ உணவு பிரியர்களுக்கு சுவையான கோழிக்கறி உணவும்,சைவ உணவு பிரியர்களுக்கு வழக்கமான காய்கறி உணவும் பரிமாறப்பட்டது.உணவின் சுவை பிரபலமான உணவகங்களையும் தோற்கடித்து அம்மாவின் கைப்பக்குவத்தை ஞாபகப்படுத்தியது.
manjolai5

மதிய உணவை முடித்துக்கொண்டு நான் சிறிதுதூரம் நடந்து சென்று அவ்விடத்தை எனது நிழற்படவியால் பதிவு செய்து கொண்டிருந்தேன்.பின்னர் நாங்கள் அனைவரும் தேயிலை தோட்டத்தை அடைந்தபோது,அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடத்தில் உரையாடவாய்ப்புக் கிடைத்தது. தேயிலை செடியை பற்றியும்,இலைகள் பறிப்பு பற்றியும்,தேயிலையை உலர்படுத்தி,தொழிற்சாலைக்கு செல்வது பற்றியும் விளக்கினார்கள் தொழிலாளர்கள்.அவர்களைத் தொழிலாளர்கள் என்று சொல்வதே உறுத்தலாக நெருடுகிறது,உழைப்பவர்களைத் தொழிலாளியாகவே வைத்திருப்பதுதான் உலகமயமாதல் செய்த பெரிய சாதனை.

manjolai2

இப்போதெல்லாம் தேயிலையை கைகளால் பறிக்கவேண்டியதில்லை.தேயிலை பறிக்க பிரத்யேகமான கத்திரிக்கோலைப் பயன்படுத்துகின்றனர்.கத்திரிக்கோலில் பை இணைக்கப்பட்டுள்ளது.கத்திரிக்கோலால் வெட்டப்படும் தேயிலையானது பைகளில் விழுந்துவிடுகிறது.பின்னர் மொத்தமாக வேறு பெரிய பைகளில் மாற்றிவிடுகின்றனர்.

தேயிலை தோட்டத்து தொழிலாளர்களுடன் பேசியபொழுது அவர்கள் படும் சிரமம் மனதை கனக்க செய்தது.தங்கும் இடத்தில் கழிவறை வேண்டி, காலை சிற்றுண‌விற்கு இரண்டு இட்லி கூடுதலாகக் கேட்டு என போராட்டம் நடத்துகின்ற நிலையில் மக்கள் இருக்கின்ற இடத்தில்தான் நாமும் எனக்கு சுதந்திரமே இல்லை என 66Aவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் (66A வும் நமக்கு வேண்டியதே). இங்கு வேலைசெய்கிற யாரும் தங்களது வாரிசுகளை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஆக்க விரும்பவில்லை,தங்களது பிள்ளைகளை படிக்க வைத்து வெளிஊர்களில் வேலைபார்க்க அனுப்பி உள்ளனர்.தேயிலை தோட்டத்து தொழிலாளர்கள் வேலைப்பொழுதில் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை அரிய நேர்ந்தது.விஷப்பூச்சிகள்,பாம்புகள்,தேனீக்கள் மற்றும் காட்டு எருமைகள் சிலநேரங்களில் சிறுத்தைகள் என அவர்கள் கூறியபோதே மனதை பயமுறுத்தியது. தேயிலை தோட்டம் அமைந்துள்ளது வனப்பகுதிக்கு நடுவிலே என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுடன் உரையாடியது மகிழ்வை அளித்தாலும் அவர்கள் படும் சிரமம் மனதுக்கு வலியை உண்டு பண்ணியது.’தேயிலையும் மரமாகும் அதை வளர்ப்பதில்லை;உயரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை’ என்ற வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வந்தன.
manjolai6
மனத்தில் நேரங்கள் உறைந்துகிடந்த அந்த ரம்மிய அழகிலும் கடிகார முட்கள் எப்போதும் போலவே நகர மாலையில் மனம் இல்லாமல் கீழே இறங்கத் தொடங்கினோம்.இரவு மணிமுத்தாறில் ATree என்ற NGO அமைப்பின் அலுவலகம் மற்றும் தங்கும் விடுதியில் எங்களுக்கு தங்க வசதி செய்யப்பட்டிருந்தது.ATree அமைப்பானது,வனங்கள் பாதுகாப்பு தொடர்புடைய‌ ஆய்வுகள், வழிமுறைகளை கண்டறியும் அமைப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.அந்த வனப்பகுதியை பாதுகாப்பதில் அவர்களுக்கும் ஒரு பங்கு இருப்பது அறிந்து அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டோம்.

இரவு மாஞ்சோலை தேயிலை தோட்டத்து தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றியும் அதில் ஏற்பட்ட உயிர்ப்பலிகள் பற்றியும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.அதைப் பார்த்த அனைவரது மனதும் கனத்தது.அன்று தொழிலாளர்களோடு இருந்த அரசியல் கட்சிகளும்;அரசியல்வாதிகளும்,அன்று போராட்டத்திற்கு எதிராக இருந்த அரசியல் கட்சிகளோடு இன்று கூடியிருப்பது அரசியல் எதார்த்தத்தை உணர்த்தியது. இரவு உணவுக்கு பின்னர் தோழர் வினோத்,அரவிந்த்,மகேந்திரன்,மதுவனேஷ், தினேஷ் அவர்களோடு நிகழ்கால அரசியல், இளந்தமிழகம் அமைப்பு பற்றியும் விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது.விவாதம் அதிகாலை 3மணிவரை சென்றது. விவாதத்தின் மூலம் எனது மனதில் தோன்றியது “நம் மக்களுக்கு இன்னும் ஒரு சுதந்திரம் தேவை தற்போது உள்ள அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளிடமிருந்து”.
5,ஜூலை,15
manjolai1

பயணத்தின் இரண்டாம் நாள்,காலை 7மணியளவில் அனைவரும் பனைகாடு நோக்கி பயணித்தோம்.மணிமுத்தாறின் அருகாமையில் உள்ள ஒரு கிராமத்திற்கு பதநீர் குடிப்பதற்காக சென்றோம்.அனைவரும் ருசியான பதநீர் அருந்திவிட்டு அவர்களிடமே கருப்பட்டியும் வாங்கிக்கொண்டு மணிமுத்தாறு நீர்வீழ்ச்சியை நோக்கி பயணித்தோம்.சென்னையில் ஓரிரு வாளி தண்ணீரில் அரை உடல் நனைய அவசரமாக குளித்துவிட்டு அலுவலகம் செல்லும் நாங்கள் அனைவரும் நீர்வீழ்ச்சியில் அவசரமில்லாமல் இயற்கை அழகை ரசித்தபடி 2மணிநேர அருவி குளியலை அனுபவித்தோம்.

அருவியில் குளித்த களைப்புடன் காலை உணவை முடித்துவிட எங்களுடன் உரையாட மனித உரிமைஆர்வலர் சுரேஷ் அவர்கள் வந்திருந்தார்.திரு.சுரேஷ் அவர்கள் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போராட்டங்கள்,பிரச்சனைகள் அதன்மேல் உள்ள வழக்குகள் பற்றியும் அப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் அவர்கள் மேல் உள்ள வழக்குகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.திரு.சுரேஷ் அவர்கள்,கூறிய செய்திகள் அனைவருக்குள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.சாதிகளை ஒழிக்கவேண்டிய நிர்பந்தத்தை உணர்த்தியது.

சென்னையை நோக்கி கிளம்பும் நேரம் வந்துவிட்டது.அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு மணிமுத்தாறில் இருந்து திருநெல்வேலியை நோக்கி பயணித்தோம்,அரசு பேருந்தை பிடிப்பதற்காக.திருநெல்வேலி சென்றுவிட்டு அல்வா இல்லாமல் திரும்புவதா? தோழர் பாலாஜியின் உதவியினால் அனைவரும் அவரவர் தேவைக்கு ஏற்ப இருட்டுக் கடை அல்வா வாங்கிக்கொண்டு சென்னைக்கான பேருந்தில் ஏறினோம்.

காலையில் வீடுவந்து அவசர அவசரமாக அலுவலகத்துக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரத்தில் இல்லாத மரத்தில் குருவிகளைத் தேடிக்கொண்டிருந்த மனது இன்னொரு பயணத்தில் ஊர்குருவிகளுடன் சுற்ற சிறகை பட படவென அடித்துக்கொண்டது………

— பெலிக்ஸ்

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions