கொள்ளை கொள்ளும் அழகுடன் கொல்லிமலை..

0

கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத சுத்தமான காற்று, கற்கண்டு போன்ற தண்ணீர், கண்கொள்ளா பசுமை, மூலிகை சுவாசம் போன்றவற்றை தருகிறது கொல்லிமலை.    மலைகளில்தான் மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட மலைகளில் சீரான தட்ப வெப்பத்துடன் அதிக மூலிகைகளைத் தன்னகத்தே கொண்ட மலைதான் கொல்லிமலை.

நாமக்கல் மாவட்டதில் கிழக்கு தொடர்ச்சி மலையில் 1300 மீட்டர் உயரத்தில் 280 சதுர கி.மீட்டர் பரப்பளவில், விரிந்து, பரந்து, அடர்ந்த மூலிகை காடுகளுடன் கொல்லிமலை அமைந்துள்ளது.

8

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் கொல்லிமலையும் ஒன்று. இந்த ஒன்றியம் தற்போது தனி தாலுகாவாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி முற்காலத்தில் கொல்லிமலையை ஆட்சி செய்தார். அப்போது இருந்தே இந்த ஊராட்சிகள் அனைத்தும் நாடுகள் என அழைக்கப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.

வல்வில் ஓரி மன்னனுக்கு அரசு சார்பில் செம்மேடு பஸ்நிலையம் அருகே சிலை அமைக்கப்பட்டு உள்ளது. குதிரையில் கையில் வாளை ஏந்தியவாறு மன்னன் காட்சி அளிக்கிறார். இவரது நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1500 மீட்டர் உயரம். மலை உச்சியில் இருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் பச்சைப்பசேல் காட்சி. காரவள்ளி என்ற இடத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, கொல்லிமலையின் உச்சிக்கு செல்ல வேண்டும். மரம், செடிகளுக்கு இடையே வாகனங்கள் ஊர்ந்து செல்லும் போது, இயற்கை காற்று தேகத்தை தழுவுவது ஆனந்த அனுபவம்.

5 6

கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சிற்றருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அரப்பளீஸ்வரர் கோவில், வியூபாயிண்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் அற்புத பகுதிகள்.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஏறத்தாழ 140 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி கொட்டியது போல தண்ணீர் கொட்டுகிறது. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த குற்றாலம் அருவியில் கூட, சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். ஆனால் இந்த அருவியில் மழைக்காலங்களில் அதிக அளவிலும், கோடைகாலங்களில் குறைந்த அளவிலுமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

இந்த அருவிக்கு அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து செங்குத்தான 1000 படிகளில் இறங்கி செல்ல வேண்டும். முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செல்ல முடியாது என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அரப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள சிற்றருவியில் இவர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இங்கு நீராடும் சுற்றுலா பயணிகள், அரப்பளீஸ்வரரை தரிசித்து விட்டு, ஓய்வு எடுப்பதற்கு வசதியாக கோவில் முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பகுதியாக வாடலூர்பட்டியில் உள்ள படகு இல்லம் திகழ்கிறது. இந்த படகு இல்லத்தில் ஏற்கனவே 4 படகுகள் இருந்தன. தற்போது ரூ.2 லட்சம் செலவில் மேலும் 3 புதிய படகுகள் வாங்கி, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது.

கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து படகு சவாரி செய்யாமல் திரும்புவது இல்லை. மகளிர் சுயஉதவி குழு மூலம் இப்படகு இல்லம் பராமரிக்கப்படுவதால், மிக குறைவான கட்டணத்திலேயே சவாரி செய்ய முடிகிறது. அத்துடன் படகு இல்லத்தின் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவும் நிறுவப்பட்டு உள்ளது.

சுற்றுலா பயணிகள் மத்தியில் இங்குள்ள மாசில்லா அருவிக்கு பெரும் வரவேற்பு உண்டு. மாவட்ட நிர்வாகம் உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதி, காத்திருப்போர் அறை போன்றவைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த அருவியில் பெண்கள் ஆனந்தக்குளியல் போட்டபடி இருக்கிறார்கள்.

அரியூர் கிராமத்தில் இருந்து உற்பத்தியாகும் இந்த அருவி, ஏறத்தாழ 4 கி.மீ. தொலைவுக்கு மரம், செடிகளுக்கு இடையே ஊர்ந்து வந்து, 20 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. இயற்கை அழகுடன் கூடிய இந்த அருவியில் மூலிகை கலந்த தண்ணீர் கொட்டுவது பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. பிரசித்தி பெற்ற மாசிபெரியண்ணன் கோவில் அருகே இந்த அருவி அமைந்திருப்பதால் இதற்கு மாசில்லா அருவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

கொல்லிமலையின் அடிவார பகுதியான காரவள்ளியில் கொத்துக் கொத்தாக பலா காய்கள் காய்த்து தொங்குகின்றன. இது கொல்லிமலையின் இயற்கை அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பலாப்பழ சீசன் களைகட்டும். இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஊர் திரும்பும்போது பலாப் பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் வழியில் கோரக் சித்தர் உள்ளிட்ட சில சித்தர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. அரசு மூலிகை பண்ணையில் உள்ள கருநெல்லி, ஜோதிப்புல் போன்ற மூலிகையையும் பார்க்கலாம்.

இங்குள்ள மலைப்பாறைகளில் விளையும் ஆட்டுக்கால் போன்ற வடிவத்தில் இருக்கும் முடவாட்டுக்கால் சூப் சாப்பிட்டு களைப்பை போக்கிக்கொள்ளலாம். இங்கு விளையும் காபி, தேயிலை, மிளகு, பலா, அன்னாசி, வாழை, பப்பாளி போன்றவைகளை உண்டும் மகிழலாம், தேவைக்கு ஏற்ப குறைந்த விலைக்கு வாங்கிவந்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்தும் சந்தோஷப்படலாம்.

இந்தியா முழுவதும் காணப்படும் நிலவாகை தென்னிந்தியாவில் திருநெல்வேலி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலவாகையானது இந்தியாவின் மூலிகை ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிக்கிறது.  இதனுடைய இலை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

கொல்லிமலை என்பது ஒரு தொடர்ச்சியான மலை என்பதால் ஒரு குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் பார்க்கவேண்டிய இடங்கள் பரந்து, விரிந்து உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகை என்பது மிக, மிகக் குறைவாகவே இருப்பதால், இங்கு வாகன வசதி கிடையாது. பஸ்சில் வந்தால் நிறைய இடங்களை பார்க்க முடியாது. ஆகவே வாடகை அல்லது சொந்த வாகனங்களில் வருவது மேலானதாகும்.

வழித்தடம் :

நாமக்கல்லில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொல்லிமலைக்கு நாமக்கல், சேலம், ராசிபுரம், சேந்தமங்கலம் போன்ற இடங்களில் இருந்து பஸ்கள் விடப்படுகின்றன. 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் வளைந்து, நெளிந்து, மேகம் வந்து மலை முகடுகளை தொட்டு, தொட்டு செல்லும் இயற்கை காட்சியை பார்த்தபடி சென்றால் சுமார் 2 மணி நேர பயணத்திற்குள் கொல்லிமலையை அடையலாம்.

 

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions