கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை

0

கடல் மட்டத்தில் இருந்து 8,100 அடி உயரத்தில் எழில்கொஞ்சும் பேரழகு கொண்ட கொழுக்குமலை

1l

தேனி

தேனி மாவட்டம், போடி அருகே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,100 அடி உயரத்தில் உள்ள கொழுக்குமலை பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. இதனை அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எழில்மிகு கொழுக்குமலை தேனி மாவட்டம், போடி அருகே மேற்குதொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்து உள்ளது தான் எழில்மிகுந்த கொழுக்குமலை. இது தமிழக–கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு ரசிப்பதற்கு பல இடங்கள் உள்ளது என்று சொல்வதை விட, பார்க்கும் இடங்களை எல்லாம் ரசிக்கலாம் என்பதே மிகச்சரியாக பொருந்தும்.

தலைதூக்கி மேக கூட்டங்களை பார்த்து ரசிப்பது அழகு. அதே மேகக்கூட்டங்கள் மலைகளை தழுவிக் கொண்டு ஓய்வு எடுக்க, அதனை மற்றொரு உயரமான மலையின் மேல் இருந்து ரசித்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையை நேரில் காட்சியாக கொடுக்கும் இடம் தான் இது. பறந்து விரிந்த கடலானது, பனிப்பாறை போன்று உறைந்து கிடப்பதை பார்ப்பது போன்று இருக்கும், இப்பகுதியில் மேகக்கூட்டங்கள் தரையிறங்கி இருக்கும் காட்சி. இந்த காட்சிகளை காலை நேரங்களில் சூரியன் உதிக்கும் வேளையில் பார்த்து ரசிக்கலாம்.

1kஉலகில் உயரமான இடத்தில் தேயிலை சூரியன் உதித்தபிறகு, அதன் வெப்பத்தால் மேகங்கள் துயில் கலைந்து, மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் செல்வது போன்று மெதுவாக வான் நோக்கி செல்லும் பரவசக் காட்சிகளை இவ்விடத்தில் இருந்து பார்த்து ரசிக்கலாம். இந்த இடமானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,100 அடி உயரத்தில் அமைந்து உள்ளது.

இந்த மலையில் விளையும் தேயிலை தான், உலகில் மிக உயரமான இடத்தில் விளையும் தேயிலை என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு இயற்கை முறையில் தேயிலை விளைவது கூடுதல் சிறப்பு ஆகும். தேயிலை தோட்டங்களை ரசித்தபடி, சுற்றிலும் தாழ்ந்து நிற்கும் மலைகளை பிரம்மிப்போடு பார்த்து ரசிப்பதற்காக இங்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். அத்துடன், வடமாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மலையேற்றமாக இங்கு வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். போடி அருகே குரங்கணியில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரம் மலையேற்றமாக இங்கு சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை அழகினை ரசித்துச் செல்கின்றனர்.

மிரட்டும் மீசைப்புலி அதேபோன்று கொழுக்குமலையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் மீசைப்புலி என்ற மலைப்பகுதி உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,661 அடி உயரத்தில் உள்ளது. இங்கு மலையேற்றமாக மட்டுமே செல்ல முடியும். இங்கு செல்வதற்கும் சுற்றுலா பயணிகளிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. இந்த இடமானது அழகிலும், பிரம்மிப்பிலும் சுற்றுலா பயணிகளை மிரட்டி வருகிறது.

அரசு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா தலமாக அறிவிக்காத நிலையிலும், இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஓணம் பண்டிகை அன்று சுமார் 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். அந்த அளவுக்கு இந்த இடம் பிரசித்தி பெற்று வருகிறது. எனவே இதனை அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்றும், சுற்றுலா துறை சார்பில் மலையேற்றம் அழைத்துச் சென்று அரசுக்கு வருவாயை பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அங்குள்ள தேயிலை தோட்ட நிர்வாகங்கள் சார்பிலும் சுற்றுலாத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அதிகாரி ஆய்வு

கொழுக்குமலையை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, தேனி மாவட்ட சுற்றுலா அலுவலர் மருதுபாண்டியன் இந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொழுக்குமலை, மீசைப்புலி மலைப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார். சுற்றுலா பயணிகள் தங்கும் வசதி, உணவு வசதி, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுகுறித்து சுற்றுலா அலுவலர் மருதுபாண்டியன் கூறுகையில், ‘தேனி மாவட்டத்தில் மலையேற்ற சுற்றுலா வளர்ச்சிக்கு தேவையான இடங்கள் அதிக அளவில் உள்ளன. குரங்கணியில் இருந்து சென்ட்ரல், டாப்ஸ்டேஷன் வழியாக மலையேற்றம் செய்யவும், குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு மலையேற்றம் செய்யவும் வசதிகள் உள்ளன. தற்போது தனியார் சிலர் மூலம் மலையேற்றம் நடந்து வருகிறது. அரசு சார்பில் மலையேற்றம் நடத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடமும், மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடமும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

1mகொழுக்குமலை செல்வது எப்படி? குரங்கணியில் இருந்து மலையேற்றமாக சுற்றுலா பயணிகள் பலர் நடந்து சென்று வருகின்றனர். இதற்கு ஆன்–லைன் மூலம் முன்பதிவு செய்து தனியார் சிலர் மலையேற்றம் அழைத்துச் செல்கின்றனர். அரசு சார்பில் இதற்கான திட்டம் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. அதேபோன்று கொழுக்குமலைக்கு ஜீப்பிலும் பயணம் செய்யலாம். போடி அருகே போடிமெட்டில் இருந்து கேரள மாநிலம் பூப்பாறை, ஆனையிரங்கல் அணை வழியாக சூரியநல்லி பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு இருந்து கொழுக்குமலைக்கு தேயிலை தோட்டங்களை கடந்து செல்ல வேண்டும். சூரியநல்லி வரை பஸ் அல்லது காரில் செல்லலாம். அங்கு இருந்து ஜீப்புகளில் தான் செல்ல முடியும். இந்த பாதை கரடு முரடானது என்பதால் மற்ற வாகனங்களில் செல்ல முடியாது. அதேபோன்று அதிக இழுவை திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களிலும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர். இந்த மலைக்கு ஒருமுறை சென்று வந்தாலே புதிய அனுபவமாக இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் கிடையாது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions