காவிரி மேலாண்மை வாரியம் கோரி நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு

0

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் திருவாரூரில் அளித்த பேட்டி:

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியாலும், தற்கொலை செய்து கொண்டும் கடந்த 4ம் தேதி முதல் இதுவரை 10 விவசாயிகளுக்கு மேல் உயிர் இழந்து உள்ளனர்.

அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்தை தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும்.கர்நாடக அரசு காவிரி நதிநீர் பிரச்னையில் எந்த ஒரு தீர்வுக்கும் வராமல் தமிழக விவசாயிகளுக்கு அநீதி இழைக்கின்றது. இது ஒருபுறம் இருக்க மத்திய அரசோ உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து விட்டது. இந்த சூழ்நிலையில் காவிரி பாசன பகுதிகளில் போதிய நீர் இல்லாமலும், மழை இல்லாமலும் சம்பா பயிர்கள் கருகி வருகின்றன.

உடனடியாக மத்திய அரசு கர்நாடக அரசை வலியுறுத்தி சம்பா பயிரை பாதுகாக்க காவிரியிலிருந்து நீரை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ம் தேதி டெல்லி நாடாளுமன்றம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

அதன் பின்னரும் உரிய நடவடிக்கையை பிரதமர் மோடி எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions