தஞ்சை மாவட்டத்தில் கருகிய நெற்பயிர்களை ஆடு, மாடுகள் மேயும் அவலம்

0

தஞ்சை மாவட்டத்தில் கருகிய நெற்பயிர்களை ஆடு, மாடுகள் மேயும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கருகிய நெற்பயிர்கள்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டு களாக குறுவை சாகுபடி முழுமையாக நடைபெறவில்லை. ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டுமே குறைந்த பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி விட்டது. மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதும் ஆர்வத்துடன் உழவு பணி மேற்கொள்வது, நாற்றங்கால் தயாரிப்பு உள்பட ஆயத்த பணிகளை செய்தனர். சிலர் நாற்றுகளை பிடுங்கி நடவு பணிகளையும் மேற்கொண்டனர்.

ஆனால் தமிழகத்திற்குரிய தண்ணீரை வழங்க கர்நாடகஅரசு மறுத்ததால் மேட்டூர் அணையில் தண்ணீர் அளவு குறைந்தது. இதனால் சம்பா சாகுபடிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக ஆறுகளிலும், வாய்க்கால்களும் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது. தண்ணீர் இல்லாததால் சம்பா நெல் நாற்றுகள் எல்லாம் கருகிவிட்டன. நடவு செய்த பயிர்களும் கருகி ஆடு, மாடுகளுக்கு தீவனமாக பயன்பட்டு கொண்டிருக்கிறது. தஞ்சையை அடுத்த வாளமரக்கோட்டையை சேர்ந்த விவசாயி சம்பத் என்பவர் குத்தகை நிலத்தில் 9 ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி மேற்கொண்டார். தற்போது 60 நாட்கள் பயிராக வளர்ந்துள்ளது. வடசேரி வாய்க்காலில் வந்த தண்ணீரை நம்பி தான் இந்த பகுதியில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. ஆனால் வாய்க்காலில் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகிவிட்டன.

மாடுகள் மேய்ந்தன

நேற்று ஆடுகளும், மாடுகளும் வயலுக்குள் இறங்கி கருகிய பயிர்களை மேய்ந்தன. அதேபோல் சூரக்கோட்டை பகுதியில் காய்ந்த நாற்றுகளை மாடுகள் மேய்ந்தன. இதை பார்த்த விவசாயிகள், இன்னும் 30 நாட்கள் தண்ணீர் வந்திருந்தால் கருகிய பயிர்கள் மகசூலாக மாறியிருக்கும் என கண் கலங்கினர். இதேபோல சூரக்கோட்டையை சேர்ந்த விவசாயிகள் மாரியப்பன், மதியழகன் ஆகியோர் தலா 2 ஏக்கரில் நடவு செய்வதற்கு தேவையான நாற்றுகளை தயார் செய்து இருந்தார். விவசாயிகள் மதியழகன் 3 ஏக்கரில் நடவு செய்வதற்கு தேவையான நாற்றுகளை தயார் செய்து இருந்தார். தண்ணீர் இல்லாததால் இந்த நாற்றுகள் முழுமையாக கருகிவிட்டன. சூரக்கோட்டையை சேர்ந்த ஆனந்தம், முருகேசன் ஆகியோர் தலா 4¼ ஏக்கரில் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.

50 நாட்கள் பயிராக வளர்ந்து கதிர் பிடிக்கக்கூடிய நிலையில் உள்ளது. தற்போது வாய்க்காலில் தண்ணீர் வராததால் நெற்பயிரை காப்பாற்ற 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த தண்ணீர் விலைக்கு வாங்கப்படுகிறது. தண்ணீர் முறையாக கிடைக்கவில்லை என்றால் 8½ ஏக்கரில் சாகுபடி செய்யப் பட்டுள்ள நெற்பயிர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஆற்றுபாசனத்தை நம்பி சாகுபடி செய்யப்பட்டு கருகிய நிலையில் உள்ள நெற்பயிர்களை ஆடு, மாடுகள் மேயும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions