ஒரு பெண் துணிவுடன் இருக்கிறாள்

0

நன்றி குங்குமம் தோழி

உடல் மனம் மொழி

-சக்தி ஜோதி

திருமணமான முதல் நாளிலேயே, ஆண் தன்னுடைய முதல் காதலைப் பற்றியும் தன்னுடைய பெண் சினேகிதிகள் பற்றியும்  மனைவியிடம்  பகிர்ந்து கொள்கிறான். தன்னுடைய வளரிளம் பருவத்தின் குறும்புத்தனங்களையும் மனைவியிடம் சொல்லிவிடுகிறான். ஆனால், பெண்ணுக்கு பால்யம் உண்டு என்பதையும் அவளுக்கும்  வளரிளம் பருவத்தில் ரகசியங்கள் உண்டு என்பதையும் அவன் உணர்வதேயில்லை.பெண் எப்பொழுதும் தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத ரகசியங்களுடன் வாழ்ந்து மடிகிறாள்.ஒரு பெண் தன் வாழ்நாள் முழுக்க ரகசியங்களை  சுமந்து கொண்டிருப்பதற்குத்தான் மிக அதிகமான மன உறுதி தேவைப்படுகிறது.

ஒருவேளை அவளின் ரகசியம் எதையேனும் தெரிந்துகொள்ள நேர்கையில் ஆணின் மனம் என்னவாக இருக்கும்; அவன் அறிந்துகொண்ட ரகசியத்தோடு நின்றுவிடாமல் அந்த ரகசியத்தின் பின் அலைகிறவனாக அதனால் சலனமடைகிறவனாகவும் ஆகிவிடுகிறான். ஆணின் ரகசியத்தை அறிந்துகொண்ட பெண் அத்தனை சலனமடைவதில்லை. ஆனால், ஆணிடம் ஏதோ ரகசியமிருக்கிறது என நினைக்கிற பெண் பதற்றமுடையவளாகவே இருக்கிறாள். உண்மையில் இருவருக்குமே தனித்தனியாக அந்தரங்கமாக சில விஷயங்கள் இருக்கத்தான் செய்யும் என்பதை இருவருமே ஏற்றுக் கொள்வது அவசியமாகிறது.

மிகவும் நெருக்கமான கணவன்-மனைவியாக வாழ்பவர்களுக்கு மத்தியில்கூட ஒரு சிறிய இடைவெளிகட்டாயமாக இருக்கும். இந்த இடைவெளிதான் அவர்களுக்கிடையே மனநெருக்கத்தை உருவாக்குவதாகவும் அமைந்திருக்கும். இந்த இடைவெளி என்பது ஒளிவுமறைவான வாழ்க்கை என்பதோ,  ரகசியம் என்பதோ அல்ல. இந்த இடைவெளி அவரவர்க்கான அந்தரங்கம். ஒருவரின் அந்தரங்கம் இன்னொருவரின் மனதைப் பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்வதே இங்கே முக்கியமானதாகிறது. அந்தரங்கம் என்பதுதான் ரகசியமாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

லாவண்யா சுந்தரராஜனின் கவிதை…

“நீ
என்னிடம் அறிந்திருக்கும்
ரகசியங்களினும்
அறியாத ரகசியங்கள்
அருவெறுக்கத் தக்கவையாக
இருக்கக்கூடும்

உன்னிடமும் அப்படி சில
இருக்கலாம்
அதீத பிரியத்தின் பொருட்டோ
அளவற்ற வெறுப்பின் பொருட்டோ
என் ரகசியவெளிக்குள்
எல்லைமீறி நுழைய வேண்டாமென்று
கேட்டுக்கொள்கிறேன்

இருளின் இவ்வுறவு
சிதறும் ஒளிவெள்ளத்தில்
உனக்கும் எனக்கும்
ஆனந்தத்தைவிட
அதிர்ச்சியைத் தரக்கூடும்.”

கணவனாகவும் மனைவியாகவும் உறவுக்குள் வருவதற்கு முன்பாக இருவருக்கும் தனிப்பட்ட வாழ்வு இருக்கிறது. அந்த தனிப்பட்ட வாழ்வின் செயல்பாடுகள் அகம் சார்ந்தவையாக இருக்க, அந்த செயல்பாடு ஆணிடம் ஓரளவு வெளிப்படையாகவும் பெண்ணிடம் ரகசியமாகவும் மாறிவிடுகிறது. ஓரிடத்தில் ஆண் பகிர்ந்து கொள்கிற ஓர் அந்தரங்கம், அதில் பங்கெடுத்த பெண்ணிடத்தில் ரகசியமாக மாறிவிடுகிறது.

ஒரு பெண் தனக்கு மட்டுமே சொந்தம் என ஆணும், அந்த ஆண் இதற்கு முன்பாக எப்படியிருந்தாலும் பரவாயில்லை, இனிமேல்  தனக்கு மட்டுமே சொந்தம் என பெண்ணும் நினைப்பதால் ஒருவரை ஒருவர் ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றனர். அன்புமிகுதியில் இருவருக்குமிடையே இருக்கிற கண்களுக்குப் புலப்படாத மெல்லிய கோட்டினை அழிக்க முயலுகின்றனர். இதன் விளைவாக ஒருவரின் ரகசியத்தைத் திறந்து பார்க்கும் ஆர்வம் இயல்பாக வெளிப்படத் தொடங்கிவிடுகிறது. இப்படித் தேடிக் கண்டடைகிற ரகசியங்கள் அத்தனை இனிமையானதாக இருப்பதில்லை. ஒருவரைப் பற்றி ஒருவர்  அதிர்ச்சியூட்டும் நினைவுகளுக்குள் கொண்டு செல்வதாகவே முடிவடையும். நிலக்கோட்டை நீதிமன்றத்திலுள்ள மக்கள் சமரசத் தீர்வு மையத்தில் சில வருடங்களுக்கு முன்பாக உறுப்பினராக இருந்தேன். தீர்வுக்குக் காத்திருக்கும் பெரும்பாலான குடும்பப் பிரச்னைகளில் மனைவியை சந்தேகிக்கும் கணவனும், கணவனை சந்தேகிக்கும் மனைவியும் என்பதாக வழக்குகள் இருந்தன.

ஆனால், கணவன்-மனைவிக்கிடையே இருக்கிற சந்தேகம் சட்டங்களினாலும் தீர்ப்புகளினாலும் ஒருபோதும் தீர்க்க இயலாததாகவே  எப்பொழுதுமே இருக்கிறது. ஒரு விவாகரத்துப் பிரச்னை, அந்தப் பெண்ணுக்கு நடத்தை சரியில்லை, வேறு ஒருவரோடு தொடர்பிருக்கிறது எனக் குற்றம் சொல்லிய கணவனும், அதனை மறுத்த பெண்ணும்  வந்திருந்தனர். ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ்வது என்கிற முடிவுக்கு வந்தனர். ஆனால், மூன்று வயதேயான ஆண் குழந்தைக்காகஇருவருமேபோராடினார்கள். ஒருகட்டத்தில் அந்தப்பெண், “இந்தக் குழந்தை இந்தாளுக்குப் பிறக்கவேயில்லை’’ என சட்டென சொன்னாள். அங்கிருந்த அனைவரும் ஒருகணம் அதிர்ந்து போயினர். “இந்தாளுக்குப் பொறந்திருந்தாத்தானே இவனிடம் புள்ளையக் கொடுக்கணும், இது இவனுக்குப் பிறக்கவேயில்லை” என திரும்பவும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அதன்பிறகு அந்தப் பெண்ணைத் தனியறைக்கு அழைத்துச் சென்று பேசினேன்.

அப்போது அவர், தன்னுடைய கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனாலேயே தன்னை  சந்தேகித்து அடிப்பதாகவும் கூறி அழுதபடி, நான் எதிர்பார்க்காத ஒருகணத்தில் தன்னுடைய ஆடைகளை களைந்து அந்தரங்க உறுப்புகளின் காயங்களைக் காட்டத் தொடங்கிவிட்டார். ஒருகணம் நான் உடல் பதறி எழுந்துவிட்டேன். அந்தப் பெண்ணின் ஆடைக்குள்ளே அத்தனையும்  சூடுவைத்த காயங்களும் தழும்புகளும் மட்டுமே இருந்தன.“தப்பு செய்றது அவன், ஆனா, என்னைத்தான் அவன் குற்றம் சொல்கிறான், அவனை எப்படி சும்மா விடறது… அதான், ஆனது ஆச்சு புள்ளையே அவனுக்குப் பொறக்கலன்னு பொய் சொன்னேன்” என அந்தப்பெண் கதறியழ ஆரம்பித்துவிட்டார். ஓர் ஆணுக்கு அவனுடைய குழந்தையை அவனுக்குப் பிறக்கவில்லை என அவனுடைய மனைவியே சொல்வது போல அவமானமானது வேறு ஒன்றும் இல்லை.

பெண்களுக்குச் சாதகமாக  பல சட்டங்கள் இருந்தபோதிலும் நீதிமன்றத்திற்கு வருவதற்கு பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்கான காரணங்கள்  மிக எளிமையானவை, ஒன்று பொருளாதாரரீதியாக அந்தப் பெண் ஆணைச் சார்ந்தவளாக இருக்கிறாள். இரண்டாவது, ஆணை எதிர்த்துக்கொண்டு இந்த சமூகத்தில் ஒரு பெண் வாழவே முடியாது என பெண் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறாள். இவ்விதமான சமூகச்சூழலைப் புரிந்துகொண்டிருக்கும் நிலையிலும் ஒருபெண் நீதிமன்றம் வருகிறாள் என்றால் அவள் அத்தனை மன அழுத்தத்தில் இருக்கிறாள்.  மேலும் நீதிமன்றங்களின் நடைமுறைகளும் அவளை அலைக்கழிப்பதாகவே உள்ளன. இவற்றையெல்லாம் கடந்து மணவிலக்குப் பெற்ற பிறகான பெண்ணின் வாழ்வு பெரும்பாலும் நிறைவுறாமலேயே அமைந்துவிடுகிறது. இதற்குப் பயந்துதான் பெண்
குரலற்றுப் போகிறாள்.

அடிப்படையில் பெண் தனக்கான குரலற்று போனவளாக இருந்தாலும் நீதிமன்றத்தில் நான் சந்தித்த பெண்ணைப் போன்ற தன்னுணர்ச்சி மிக்க பெண்களையும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பெண்ணின் உடல் காயங்களையும் விடவும் “இந்தக் குழந்தை இந்தாளுக்குப் பிறக்கவில்லை” என்று நீதிமன்றமே திகைக்கும் அளவுக்குக் கத்திய ஒற்றைக் குரல்தான் அவரைப் போன்ற குரலற்றுப் போன பல பெண்களுக்கான குரலாகப் பார்க்கிறேன்.

நீதிமன்றத்தை திகைக்க வைத்த அந்தப் பெண்ணின் குரல் அவளுடையது  மட்டுமில்லை. சங்கப்பெண்பாற் புலவர் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையாரின் குரலாகவும் பார்க்கிறேன். பரத்தையர் வீடு சென்று திரும்பி வந்த தலைவனை “என்னை நெருங்கி அணைத்துக்கொள்ள நீ யார்’’ எனக்கேட்கும் ஒரு தலைவியை நற்றிணைப் பாடலில் அடையாளம் காட்டியுள்ளார்.

“நகுகம் வாராய் பாண! பகுவாய்
தேர்நடை பயிற்றும் தேமொழிப்
புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த
சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப யாம்தன்
முயங்கல் விருப்பொடு
குறுகினேமாகப்
பிறை வனப்பு உற்ற மாசுஅறு
திருநுதல்
நாறுஇருங் கதுப்பின்எம் காதலி
வேறுஉணர்ந்து
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ
யாரையோ என்று இகந்து
நின்றதுவே!”

‘பாணனே! நகையாடிக் களிக்கலாம் வருவாயாக’ எனத் தலைவன் பாணனை அழைத்துச் சொல்லப்பட்ட செய்தியே இந்தப் பாடல். நாடகப்போக்கில் துவங்கப்பட்டு எழுதப்பட்டுள்ள  இந்தப் பாடலில், பரத்தையர் உறவிலே மகிழ்ந்திருக்கும் தலைவன் தற்செயலாக தலைவி வசிக்கிற தெரு வழியே வர நேர்கிறது. தலைவனின் மகன் தெருவில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். தன்னுடைய மகனைக் கண்ட மகிழ்வில் அவனை அணைத்துக்கொள்கிறான்.

அதனால் தலைவியின் நினைவு மேலெழ, மகனைத் தூக்கிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குள் நுழைகிறான். தலைவியைக் கூடுகிற நோக்கத்தில் நெருங்குகிறான். தலைவியோ என்னை நெருங்குவதற்கு நீ யார் எனக் கேட்டு அவனை விலக்குகிறாள்.  தன்னுடைய உரிமைப்பொருள்தானே தலைவி, தான் விரும்பும்பொழுது அவள் எப்படி தன்னை மறுக்க முடியும் என்கிற ஆண் மனதின் சிந்தனைப்போக்கிலும் தலைவன் இருந்திருக்கிறான்.

அவளிடம் முயங்க இயலாத வருத்தத்திலும் தன்னை எப்படி தலைவி மறுக்க முடியும் என்கிற தவிப்பிலும் தலைவியின் சொல்லை நம்பமுடியாமல் பாணனிடம் நகைச்சுவை போலச் சொல்லித் தன்னைப் பகிர்ந்து கொள்கிறான். தலைவன் கூற்றாக எழுதப்பட்ட பெண்பாற்புலவரின் இந்தப் பாடலை நுட்பமாக வாசிக்க பல செய்திகளை மறைமுகமாக உள்ளடக்கியுள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பரல்கள் இடப்பட்டு பிளந்த வாயுடைய கிண்கிணி ஆரவாரிக்க தெருவில் சிறுதேர் உருட்டி தலைவனின் மகன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போதுதான் பேசத் தொடங்கிய குழந்தையென்பதால்  அதன் வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கிறது. குழந்தையின் உடலில் சந்தனம் பூசப்பட்டுள்ளது. குழந்தை விளையாடித் திரியும் தெருவழியே தலைவன் வரநேர்கிறது. பரல்கள் இடப்பட்ட குழந்தையின் கிண்கிணி ஆரவாரிக்கும் சிறுதேர் அவனுடைய கவனத்தைத் திருப்புகிறது. அது அவனுடைய தெருவென்பதையும் மறந்திருந்தான். செவ்வாம்பலை நினைவூட்டும் வாயில் எச்சில் ஒழுக மழலை மொழி பேசுகிற குழந்தையின் மொழியில் அவன் தன்னை மீட்கிறான். குழந்தையைத் தூக்கி அணைத்துக் கொள்கிறான்.

தகப்பனைக் கண்டவுடன்  குழறிப் பேசியதால் வழிந்து பெருகிய குழந்தையின் எச்சிலில் சந்தனம் கரைகிறது. அது தலைவனின் உடலிலும் அப்பிக்கொள்கிறது. இதுவரையில் இருப்பவை தெருவில் நடக்கும் காட்சியாக இருக்கிறது. காட்சியில் தலைவி இல்லை. தலைவியை மறந்தே அவன் பரத்தையரிடம் இருக்கிறான். அவனுக்கு தலைவியை விடவும் பரத்தையரிடம் ஈர்ப்பு அதிகமாக இருக்கிறதுகுழந்தையின் துறுதுறுப்பே அவனுக்கு தலைவியின் நினைவை மீட்கிறது. குழந்தையைத் தூக்கியபடி வீட்டிற்குள் சென்றவன் தலைவியுடன்  முயங்கும் விருப்பத்துடன் நெருங்குகிறான். அவள் அவனை “நீ யார்’’ எனக் கேட்கிறாள். இவன் தலைவிடம் கூடாமல் திரும்பி வந்துவிடுகிறான். இந்த நிகழ்வு பற்றி தலைவன், பாணனிடம் சொல்கிற கருத்து மட்டுமே இந்தப் பாடலில் உள்ளது.

அதாவது, குழந்தையின் உடலிலிருந்த சந்தனம் தன் மேலும் அப்பிக்கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளாமல் “வேறென” நினைத்துக்கொண்டு தன்னை விலக்கி தலைவி நகர்ந்தாள் என்கிறான். பரத்தையருடன் கூடியிருந்த தடயமாக அந்த “வேறென”என்று சொல்கிறான். அது குழந்தையின் உடலிலிருந்த சந்தனம் என்பதை உணர்ந்திருந்தால் தன்னையவள் விலக்கியிருக்க மாட்டாள் எனத் தலைவன் நினைக்கிறான்.அதனாலேயே தங்கள் உறவின் அடையாளமான குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்தபோதிலும், “என்னை நெருங்கிவர நீ யார்”என தலைவி கேட்டதை அவனால் நம்பமுடியவில்லை.குழந்தை என்பது அவனது ஆண்மையின் அடையாளமாக நினைக்கிறான். பரத்தையரிடம் சென்றது பற்றிய எந்தக் குற்றவுணர்வும் அவனுக்கு இல்லை. யாரெனக் கேட்கும் தலைவியின் செயலே கூட அவனுக்கு நகைப்பாக இருக்கிறது. அவளுடைய வருத்தமும் கோபமும் அவனுக்குப் புரியவில்லை. தலைவியின் இடத்திலிருந்து இந்தப் பாடலைப் பார்த்தால், தன்னுடைய நினைவு இருந்திருந்தால் பரத்தையரின் வீட்டிற்கே தலைவன் சென்றிருக்க மாட்டான்.

தன்னுடைய தலைவன் வேறு ஒரு பெண்ணிடம் ஈர்ப்புடன் இருக்கிறான் என்பதை அறிகிற ஒரு பெண்ணின் நிலையினை உணராமல், அங்கு சென்றவன் தலைவியின் நினைவு வராமலேயே காலத்தைக் கடத்தியிருக்கிறான். அவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் தனிமை பற்றியோ, தனிமையின் துயர்பற்றியோ அவனுக்குப் புரிந்திருக்கவில்லை. குழந்தையைப் பார்த்ததால் மட்டுமே தலைவியின் நினைவு தூண்டப்பட்ட தலைவன் என்பதால் அவனை விலக்கிவிடுகிற அவளின் கோபமும் அவனுக்குப் புரியவில்லை.சங்ககாலத் தலைவிகள், பரத்தையர் வீடு சென்று திரும்பும் தலைவனிடம் சிறிது ஊடல் கொண்டுவிட்டு பிறகு சமாதானம் ஆகிவிடுவார்கள் அல்லது அவளை சமாதானப்படுத்துவதற்காக விறலியரோ பாணனோ தூதாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.தோழியிடம் அவர்கள் முதலில் சமாதானம் பேசுவார்கள். தோழியும்  வாயில்மறுத்துப் பேசிவிட்டு பின்பு தலைவன் தலைவியரை இணைத்து வைத்துவிடுவாள்.

பரத்தையர் பிரிவு என்னும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பல பாடல்களில் இப்படியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பாடலில் வருகிற தலைவி “நீ யார் என்னை நெருங்கிவர?” என தலைவனிடம் நேரடியாகக் கேட்டு அவனை திருப்பி அனுப்புகிறாள். கற்புடை மகளிர் எனப்படுகிற சங்கத் தலைவிகள் பெரும்பாலும் தங்களுக்கென குரலற்றுப் போனவர்களாகவே இருப்பார்கள்.

இந்தப் பாடலில் தலைவனை எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் தலைவிக்கு இருக்கிறது. இதற்குக் காரணம் இந்தப் பாடல் ஒரு பெண்ணால் எழுதப்பட்டிருக்கிறது என்பதால் இருக்கும். ஆணுக்கு எதிரான குரல் என்பது பரத்தையரின் குரல் அல்ல, அது பரத்தமையின் இயல்பு. தேவைப்படுகிற இடத்தில் தன்னுடைய குரலை பதிவு செய்கிறவளாக கற்புடைமகளிர் எனப்படுகிற பெண்களும் பரத்தமை இயல்பைக் கைக்கொண்டிருக்கின்றனர்.  பரத்தமை என்பது அறிவு, துணிச்சல் மற்றும் சுதந்திரம்.

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

நல்வெள்ளையார் என்பது இவருடைய பெயர். ஒலைக்கடையம் என்பது இவரது ஊர். ஒலைக்கடையம் என்பது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மேலக்கடையம் என்று குறிப்பிடப்படுகிறது. அதனால் சில நூல்களில் இவர் பெயர் மதுரை மேலைக்கடையத்தார் நல்வெள்ளையார் எனவும் குறிப்பிடப்படுகிறது. இன்றைய திருநெல்வேலி மாவட்டம் கி.பி.1790ல்தான் உருவாக்கபட்டது. சங்க காலத்தில் மதுரை என்பது அடையாளமாக இருந்திருக்கும் என்பதால் ஊர் பெயருக்கு முன்பாக மதுரையும் இணைக்கப்பட்டிருக்கும். மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தாராயத்தனார் (புறம்: 350 )இவரது ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம். இவர் பாடியதாக இரண்டு பாடல்கள் கிடைத்துள்ளன. நற்றிணை: 250, 369.

பரத்தமைக் குறிப்புகள்

* தலைவியின் பண்புகளாக வலியுறுத்தப்படும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, தாய்மை, தியாகம், பொறுப்பு, அன்பு, மென்மை என்பவைஎல்லாம் அற்றுப்போனவர்களாக பரத்தையர் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

* தலைவன், தாய், தந்தை, செவிலி, தோழி என உறவுகளால் வழிப்படுத்தப்படுகிறவளாக தலைவியும், இதுபோன்ற உறவுகளே பரத்தையர்க்கு இல்லாத தோற்றமும் காட்டப்படுகிறது.

* வீடு என்கிற ஒற்றை இடத்தினுள் தலைவி வாழ, தெரு, ஊர், கூத்துக்களம், புனலாடுமிடம் என பரத்தையரின் புழங்குவெளி விரிந்திருக்கிறது.

* தலைவனுக்குக் காத்திருப்பவளாக, அவன் சொல்லை மீறாதவளாக, அவன் நலனுக்காக தன்னை தியாகம் செய்பவளாக தலைவி இருக்க, அவனது குறைகளைச் சுட்டிக்காட்டுபவளாக, அவனுடைய ஆண்மையை நகைப்பவளாக, அவனது குறைவுபட்ட அறிவை விமர்சிப்பவளாக, அவனை ஆள்கிறவளாக பரத்தை இருந்திருக்கிறாள்.

* தனக்கென குரலற்றுப் போனவளாக தலைவி காட்டப்பட, சமூக ஒழுக்கங்களை, மதிப்பீடுகளைக் கேள்வி கேட்பவளாக பரத்தை இருந்திருக்கிறாள்.

* பொய், வஞ்சம் சூதுமிக்கவர்கள், அன்பு, கருணை, காதல் இல்லாதவர்கள், மாயம் செய்பவர்கள், பொருட்பற்றுடையவர்கள், மது அருந்துபவர்கள், நிலையற்ற மனமுடையவர்கள், பொதுமகளிர் என பரத்தையர் குணநலன்களாக இலக்கியங்களில் காட்டப்படுகிறது. ஆனால், நன்னடத்தை, அழகு, எழுத்தாற்றல், கணிதம், மறைநூல், இசை, நடனம், நாடகம், விற்பயிற்சி, குதிரையேற்றம் உட்பட 64 கலைகளில் தேர்ச்சிபெற்றிருந்தனர் காப்பியகால கணிகையர் எனப்பட்டோர். காப்பியகால கணிகையர், சங்ககாலப் பரத்தையர் வழிவந்தவர்களாக இருக்கலாம் எனில் கலைகளுக்கும் அறிவுசார் செயல்பாட்டிற்கும் தொடக்க நிலையாக சங்ககாலம் இருந்திருக்கும்.

* காப்பியகால கணிகையருக்கு வாரிசுகள் உண்டு. சங்ககால பரத்தையர் எனப்பட்டோருக்கு வாரிசுகள் இருந்ததாகக் குறிப்புகள் இல்லை,  என்ற போதிலும் பரத்தையர் என்கிற ஓர் இனம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தழைத்திருப்பதாக சங்கப் பாடல்களின் வழியே குறிப்பு கள் உள்ளன. வாரிசுகள் அடையாளம் காட்டப்படாத, யதார்த்தம் அற்ற வகையில் பரத்தையரின் வாழ்வியல் சங்க இலக்கியத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

* பரத்தமையின் இயல்புகளான கலைகளும் அறிவுசார்ந்த செயல்பாடுகளும், தலைவனின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் பண்பும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளன. ஏனெனில், கற்புடை மகளிர்க்கு ஒடுக்கப்பட்ட புற உலகு சார்ந்த அறிவுசார் செயல்பாடுகள் பரத்தையர் என்கிற பிரிவினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

* தன்னைவிட்டு விலகிவிடுவாளோ என்று பதற்றப்படுத்துகிற பரத்தை  ஆணுக்குச் சவாலாக இருக்கிறாள். கற்புடை மகளிராக அவன் சொல் கேட்டு, அவனுக்காகவே வாழ்கிற ஒரு பெண் அவனை ஈர்ப்பதை விடவும் அவனுடைய அறிவுக்கு ஈடுகொடுப்பவளாக உடலின் விழைவை நிறைவு செய்கிறவளாக இருப்பவளின் துடுக்கான தன்மை அவனுக்கு ஈர்ப்புடையதாக இருக்கிறது.

* ஓர் ஆணை சான்றோனாக, வீரனாக, அரசனாக வளர்த்தெடுத்த சங்க இலக்கியங்கள் கற்புடை மகளிரை அவனுக்குக் காத்திருப்பவளாக மட்டுமே அடையாளம் காட்டுகிறது. ஆண் அறிந்திருக்கும் புற உலக அறிவினைப் பகிர்ந்து கொள்ளவும், அவனுக்கு ஈடாக சமர் செய்யவும் சவாலான உறவு முறைக்கு ஏங்குகிறவனாக ஆண் இருக்கிறான். பரத்தையரிடம் அவன் தேடிச்செல்வது உடல் சார்ந்த விழைவு மட்டும் அல்ல என்பதை மறைமுகமாக உணர்ந்துவிட முடிகிறது.

(சங்கத்தமிழ் அறிவோம்!)

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions