சம்பா பயிர்கள் கருகும் அபாயம் : குடங்களில் நீர் ஊற்றும் அவலம்

0

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி நிலவிவரும் நிலையில் ஆறு மற்றும் குளத்து பாசனங்கள் தற்போது முற்றிலும் தடைபட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து நகர் பகுதிக்கு கட்டிட பணிகள் உள்ளிட்ட கூலி வேலைக்கு செல்கின்றனர். ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், கீரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள், கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

தொடர் வறட்சியால்  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போர்வெல் மற்றும் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் விவசாய நிலப்பரப்பும் குறைந்துவிட்டது. கடும் வறட்சியிலும் குறைந்த அளவு தண்ணீரை வைத்து சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தின் அனைத்து கிராமப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் திணறுகின்றனர். அறுவடை நேரத்தில் இது போன்று நடப்பதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். தற்போது கதிர் விளைந்து முற்றும் நேரத்தில் தண்ணீர் இல்லாவிட்டால் அனைத்தும் பதராக மாறிவிடும்.

விவசாயிகள் கூறியதாவது: நெல் முற்றும் நேரத்தில் மின்வெட்டு பிரச்னையால் முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் ஆங்காங்கே பயிர்கள் காய தொடங்கியுள்ளது. இதையடுத்து குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றி சமாளித்து வருகிறோம். இது எங்களுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. மின்சாரம் இருக்கும் போது மோட்டாரை போட்டுவிட்டு ஒரு வயலில் பாதி அளவு தண்ணீர் பாய்ச்சுவதற்குள் மின்சாரம் நின்று விடுகிறது. அதற்குள் தண்ணீர் பாய்ந்த இடங்களில் தண்ணீரை பூமி உறிஞ்சி விடுகிறது. பின்னர் மோட்டார் ஆன் செய்தால் முன்பு பாய்ந்த அளவு மட்டுமே தண்ணீர் பாய்கிறது.

இதனால் ஒரு வயலில் முழுமையாக தண்ணீர் பாய்வதற்கு தடை ஏற்படுகிறது. மின் வாரியத்தின் இந்த செயல்பாடுகளால் தண்ணீர், வளர்ந்த பயிரும் வீணாகி வருகிறது. இதனால் தொடர் இழப்பு ஏற்படும் அச்சத்தில் இருக்கிறோம். இதனால் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த மார்கழி மாதம் முழுவதும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரத்தை தடையின்றி வழங்கினால் ஓரளவிற்கு சமாளித்து விடலாம். இல்லை எனில்  காப்பாற்றி வந்த பயிர்கள் பாதிப்படையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

10 ஆயிரம் ஏக்கர் கருகியது : கால்நடைகள் மேய்கின்றன

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பொறையார், காட்டுச்சேரி, தில்லையாடி, உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். அவற்றில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களுக்கு பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது பயிர்கள் வளர்ந்துள்ளன. ஆனால் காவிரி நீர் மற்றும் மழையை நம்பி பயிரிடப்பட்ட 10 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் கருகின.

வயல்கள் முழுவதும் பாளம் பாளமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் வேதனையடைந்த விவசாயிகள், கருகிய பயிரில் கால்நடைகளை மேய விட்டுள்ளனர். டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் குருகோபிகணேசன் கூறுகையில், ‘நடவு செய்த இந்த பயிர்கள் வளர்ந்து வராமல் கருகி காய்ந்து போவதை கண்டு விவசாயிகள் உயிரை மாய்த்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளை காப்பாற்ற அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions