பொது வாழ்வின் மணிவிழா ஆண்டில் சமுதாயத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ….

2

11பொது வாழ்வின் மணிவிழா ஆண்டில் சமுதாயத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள்  பற்றிய ஒரு சிறு தொகுப்பு.

“மனிதர்கள் ஒன்றுபட வேண்டும்; மனத்தால் அவர்கள் நெருங்கி வரவேண்டும்; இதயங்கள் அனைத்தும் இணைய வேண்டும்; சிந்தனைகள் நெருங்கி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமைக்காகவும் மத நல்லிணக்கத்திற்காகவும், அமைதிக்காகவும், சகோதரர்களாகக் கூடி வாழ்வதற்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.
இந்திய நாட்டின் பன்முகத்தன்மை சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டுமானால் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் மீண்டும் எழுப்பப்பட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி அவர்கள் அதன் திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும்.”
-& நாடாளுமன்ற மக்களவையில் தீவிரவாதம் குறித்த காரசாரமான விவாதத்தின் போது ஓங்கி ஒலித்த முழக்கம் தான் இது. அந்த குரலுக்குரியவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்.

இந்திய முஸ்லிம்களின் தாய்த்திருச்சபை என ஏற்றி போற்றப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநிலத் தலைவர் அவர்.
1956 நவம்பர் 4ல் தமிழ்நாட்டின் நெஞ்சத் தாமரை திருச்சி மாநகரின் நவாப் பள்ளிவாசல் அருகில் உள்ள சவுக் மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு மாவட்டத் தலைவர் பி.எச்.முஹம்மது நஸ்ருதீன் சாகிப் தலைமையில் நடைபெற்றது.

நாவலர் ஏ.எம்.யூசுப் சாகிப், கே.எஸ்.அப்துல் வஹாப் ஜானி சாகிப், சேலம் டி.அப்துல் பாஸித் சாகிப், கோவை சி.அய்.அல்லா பிச்சை சாகிப், திருச்சி ஏ.எம்.ஹனீப் சாகிப் என முன்னோடிகள் முழங்கிய இம்மாநாட்டில் நிறைவுப் பேருரையாக கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் சிறப்புரையாற்றினார்.

இந்த மேடையில் அறிமுகமானவர்தான் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன். அப்போது அவருக்கு வயது 16. அன்று பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து 60 வருடங்கள் ஆகிவிட்டன. ஆம்! தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் பொது வாழ்வுக்கு இது மணி விழா ஆண்டு.

சமுதாயத் தலைவர், சன்மார்க்க அறிஞர், அழகு தமிழ் பேச்சாளர், அற்புத எழுத்தாளர், ஆழமான ஆராய்ச்சியாளர் என பன்முகத் தன்மை கொண்ட பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஒரு வித்தியாசமான தலைவர். எளிமையும் அமைதியும் அவரது அடையாளங்கள்
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமூகநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான திருநல்லூர் கிராமத்தில் முஹம்மது ஹனீப் -& காஸீம் பீவி தம்பதியரின் புதல்வராக 1940 ஜனவரி 5ல் பிறந்தவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்.

பெற்றோருக்கு இவர் 6வது பிள்ளை; உடன் பிறந்தவர்கள் 11 சகோதரர்கள், 2 சகோதரிகள். திருநல்லூரில் சிறிய கிராமமாக இருந்ததால் பல தேவைகளுக்கு இலுப்பூரையே சார்ந்திருக்க வேண்டிய நிலை. இதனால் அடிப்படை மார்க்க விஷயங்களை அவருக்கு கற்றுக் கொடுத்தது அவர்தாய். இந்நிலையில்தான் அவர் குடும்பம் 1949ல் திருச்சிக்கு குடியேறியது-.

திருச்சிராப்பள்ளி வரகனேரியிலுள்ள ஸ்ரீராம் நடுநிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், புனித ஜோஸப் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியும், அதனைத் தொடர்ந்து ஜமால் முஹம்மது கல்லூரியில் புகுமுக வகுப்பும், புனித சூசையப்பர் கல்லூரியில் இளங்கலை படிப்பும் படித்து பட்டம் பெற்றார்.

சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டப்படிப்பை மேற்கொண்டு, மாநிலக் கல்லூரியில் வரலாறு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், அதில் முதல் மாணவராக தேர்வு பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் வழிகாட்டலில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

1965ல் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராக பணியில் சேர்ந்து பேராசிரியராகவும், துறை தலைவராகவும் 1980 வரை பணியாற்றினார். 1966 ஏப்ரல் 7 அன்று ஜனாபா லத்தீபா பேகத்தை வாழ்க்கை துணையாக கரம்பிடித்த அவருக்கு கலீலுர் ரஹ்மான், ஹபீபுர் ரஹ்மான், பைஸுர் ரஹ்மான் என்ற 3 மக்கள் உள்ளனர்.

சென்னை பல்கலைக் கழக செனட் சபை உறுப்பினர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிலைக்குழு உறுப்பினர் என கல்விப் பணியாற்றிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பேராசிரியர் பணியின் போதே ஏழை மாணவர்களுக்கு தங்கும் விடுதி நடத்தி உணவு, உறைவிட வசதி செய்து கொடுத்ததோடு மட்டுமின்றி நல்லொழுக்கத்தையும் இறைவணக்க பேணுதலையும் கற்றுக் கொடுக்கும் அரும்பணி செய்தவர். இறை அச்சத்துடன் கூடிய மார்க்க -ஞானத்தை மாணவர்கள் அறியும் பொருட்டு ஜமால் முஹம்மது கல்லூரியில் குர்ஆர் மஜ்ஜிஸ் அமைப்பை நடத்தியவர்.
பேராசிரியர்களின் கோரிக்கைக்காக பெரும் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி சிறை சென்றவர்.

40 எண்ணிக்கையை தொடர்புபடுத்தி சொல்லப்படும் செய்திகள் ஏராளம். மனித வாழ்வில் 40 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் வாழ்விலும் 40 வயதில் அதாவது 1980ல் ஒரு திருப்புமுனை.

தமிழகத்தின் ஏழாவது சட்டப் பேரவைக்கான தேர்தல் 1980 மேயில் நடைபெற்றது. இத்தேர்தலில் அ.தி.மு.க. அணி, தி.மு.க. அணி, ஜனதா தனி என மும்முனைப் போட்டி.
தி.மு.க. அணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றன. திருச்சி 2 தொகுதியில் தலைமையின் வேண்டுகோளை ஏற்று பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பிழந்தார். அதன்பின் தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற ஐந்து பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டும் வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை.

தோல்வியைக் கண்டு துவளாத பேராசிரியர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முழு நேரப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இயக்கம் வளர்க்க வீறுகொண்டெழுந்தார்.

1980ல் தொடங்கி முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர், இளைஞர் அணி பொறுப்பாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்புச் செயலாளர், மாநில பொதுச் செயலாளர் என தான் வகித்த பதவிகளில் எல்லாம் திறம்பட செயலாற்றினார்.

படிக்கும் காலம் தொட்டு பத்திரிக்கைகளில் ஈடுபாடுடைய பேராசிரியர், ஆரம்ப காலங்களில் ‘மறுமலர்ச்சி’ பத்திரிக்கையில் எழுதினார். ‘முபாரக்’ மாதம் இருமுறை ஏட்டை தொடங்கினார். 1981 முதல் 10 ஆண்டு காலம் ‘தாருல் குர்ஆன்’ மாதமிருமுறை ஏட்டை நடத்தினார்.
“இஸ்லாம் தமிழர்க்கு வந்த மதமா? சொந்த மதமா?” என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை தொடர்ந்து எழுதினார். அதை அடிப்படையாகக் கொண்டே 2010 ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “செம்மொழித் தமிழும் அரபியும் & ஓர் ஒப்பாய்வு” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.

சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் ஸமத் 29.4.1983ல் ஆரம்பித்த மணிச்சுடர் நாளேட்டின் நிர்வாக ஆசிரியராக 1996ல் பொறுப்பேற்று பின் 1999 ஏப்ரல் 27 முதல் அதன் ஆசிரியராக பணியாற்றுகிறார். நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் படைத்த அவர், 28 ஆண்டு பழமையான கருப்பு வெள்ளை எந்திரத்தை மாற்றி வண்ண அச்சு இயந்திரத்தை நிறுவி 2014 செப்டம்பர் 15 முதல் பல வண்ணங்களில் மணிச்சுடரை வெளிவரச் செய்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை சீரணி அரங்கில் 1999 மார்ச் 10 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொன்விழா மாநாடு பிரம்மாண்ட பேரணியுடன் நடைபெற்றது. இம்மாநாட்டின் வெற்றிக்கு பாடுபட்டதற்காக சிராஜுல் மில்லத் ஆகா அ.அப்துஸ்ஸமத் அவர்களால் பாராட்டி புகழப்பட்ட பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், சிராஜுல் மில்லத் மறைவுக்குப்பின் 1999 மே 19 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தலைவர் பேராசிரியர் சட்டப் பேரவைக்கு செல்லவில்லை என்றாலும் நாடாளுமன்றத்தை அலங்கரிக்க வல்ல இறைவன் வாய்ப்பளித்தான். 2004 மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து 79 ஆயிரத்து 610 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலில் இ.அஹமது சாஹிப் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சரானார். இதன் மூலம் சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்ற அத்தியாயம் உருவானது. அத்துடன் அனைத்துலக நாடுகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயர் பிரகாசித்தது.

நாடாளுமன்றத்தில் இ.அஹமது சாகிப் அவர்களுடன் இணைந்து செயல்பட்டார் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன். அவர்கள் இருவரின் முயற்சியால் சமர்ப்பிக்கப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்தின் பரிந்துரைகளில் கிடைத்த நன்மைதான் சச்சார் கமிஷன், மிஸ்ரா கமிஷன் உள்ளிட்டவைகள்.

இஸ்லாத்தின் இயற்கையான அமைப்பு, பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத்துகள்தான்; அவை கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத உறுதிகொண்ட பேராசிரியர் மஹல்லா ஜமாஅத் ஒங்கிணைப்பு மாநாடுகளை நடத்தினார். மார்க்க விஷயங்களில் சங்கைக்குரிய உலமா பெருமக்களின் வழிகாட்டுதலையே சமுதாயம் ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வரும் அவர், உலமாக்கள் & உமராக்கள் மாநாடுகளை நடத்தினார்.

2008 ஜூன் 21 அன்று சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற மணிவிழா மாநாடு, 2010 டிசம்பர் 11 தாம்பரத்தில் நடைபெற்ற மாநில மாநாடு மட்டுமின்றி திருச்சி, விழுப்புரம் என பல இடங்களில் தலைவர் பேராசிரியர் நடத்திய மாநாடுகள் அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்தன.

முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன், முஸ்லிம் மகளிர் அணி, மின்னணு ஊடக நிகழ்வுகள் தனிமுத்திரை பதித்ததோடு மட்டுமின்றி, வளரும் தலைமுறையை பக்குவப்படுத்துவதாக அமைந்ததை சமுதாயம் மெய்சிலிர்த்துப் பார்த்தது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைமையிடமான காயிதே மில்லத் மன்ஸிலை சென்னை மண்ணடியில் நின்று நிமிர்ந்து பார்க்கும் வகையில் தலைவர் கட்டியெழுப்பி 2004 மார்ச் 14ல் திறப்பு விழா காணச் செய்தபோது திரண்ட தாய்ச் சபையினர் கேட்ட பிரார்த்தனை ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்தது.
குலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப் மறைவிற்குப்பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக இ.அஹமது சாகிப், தேசிய பொதுச் செயலாளராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் 2008 செப்படம்பர் 14 அன்று தேர்வு செய்யப்பட்டனர். தான் தேசிய பொறுப்பை ஏற்பதாக இருந்தால் இந்தியா முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரே பெயரில் செயல்பட வேண்டும் என உறுதி படக்கூறி அதற்காக செயல்பட்டார். கேரள மாநில தாய்ச்சபையினரின் மிகப்பெரும் ஒத்துழைப்புடன் தேசம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரே பெயரில் ஒரே அமைப்பானது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் 3.3.2012 அன்று கிடைத்தது. அதன் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னமாக ‘ஏணி’ சின்னம் ஒதுக்கப் பட்டது. இந்திய நாடாமன்றமும் 2012 ஜூன் 27ல் அங்கீகார அறிவிப்பை வெளியிட்டது. இந்திய அரசியல் நிர்ணய சபை, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இடம் பெற்று சாதனை பலபடைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு கிடைத்த இந்த அங்கீகாரம் சமுதாயத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
“முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யுங்கள் அவர்களின் நன்னடத்தைக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என முதல் அமைச்சர் முன்னிலையில் முஸ்லிம் லீக் மாநாட்டில் முழங்கிய போது இவரல்லவா தலைவர் என சமுதாயம் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டியது பலரும் அறிந்தது.
ஆனால், ‘இஸ்லாமிய பங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதிகள்’ சொல் மறைந்து காவித்தீவிரவாதம் என்ற வார்த்தை வெளிவந்ததன் காரணம் எவருக்கும் தெரியாதது.

2008ல் புதுடெல்லியில் குண்டு வெடிப்புகள் நடந்து பலர் பலியாயினர். வழக்கம் போல் இதற்கு முஸ்லிம் இளைஞர்கள் காரணம் என கூறி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை, ஜாமிஆமில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களை என்கவுண்டர் செய்தது.
பதறிப்போன அதன் துணை வேந்தர் டாக்டர் முனீருல் ஹசன் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் (அப்போது எம்.பி.) அவர்களின் டெல்லி இல்லத்திற்கு விரைகிறார். விவரங்களை கேட்டறிந்த தலைவர் பேராசிரியர், துணை வேந்தரை அழைத்துக் கொண்டு அன்றைய வெளியுறவு துறை இணை அமைச்சர் இ.அஹமது சாகிபை சந்திக்கிறார். அன்றைய உள்துறை செயலாளர் ஜெய்ஸ்வாலை வரவழைக்கிறார் இ.அஹமது சாகிப். நால்வருமாக சேர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடம் முறையிடுகின்றனர். சோனியா ஆலோசனையின் பேரில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர்கள் சந்தித்து விபரங்களை கூறுகின்றனர்.

இதன்பிறகு இக்குண்டு வெடிப்புக்கள் சம்பந்தமாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்கரே தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. மலேகான், ஹைதராபாத், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா உள்ளிட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களின் குற்றவாளிகள் வெளிச்சத்திற்கு வருகின்றனர். இந்து பெண் துறவி பிரக்யாசிங் தாக்கூர், ராணுவ அதிகாரிகள் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித், தயானந்த பாண்டே, சுவாமி அஸீமானந்தா என பலர் கைதாகின்றனர். சதி அரங்கேற்றங்கள் அம்பலத்திற்கு வருகின்றன. நாடே அதிர்ச்சி அடைகிறது.

2010 ஆகஸ்ட் 25 அன்று டெல்லியில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில், அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், “இன்று இந்தியாவுக்கு பேராபத்து
காவித்தீவிரவாதம் தான்” என பிரகடனப்படுத்தினார்.
ஆக அந்த பயங்கர உண்மையை வெளிக் கொண்டு வரசெய்வதற்கு அடித்தளம் அமைத்தது பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள்தான். இதை இன்னொரு இயக்கம் செய்திருந்தால் தேச சுவர்களெல்லாம் சுவரொட்டிகளால் மறைக்கப்பட்டிருக்கும்.
விளம்பரத்தையும் ஆடம்பரத்தையும் ஒருபோதும் விரும்பாத தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன். அவதூறு பிரச்சாரங்களும், விமர்சன அம்புகளும் அவர்மீது பாய்ச்சப்பட்ட போதெல்லாம் அவர் அவைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதில்லை. தனக்கு சரி என்று பட்டதை எவருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்துவது இவரது இயல்பு.
தலைவர் பேராசிரியர் அவர்களின் மவுனமும் நிதானமும் விமர்சிக்கப்படுவதுண்டு. அது பலமா-? பலவீனமா? என்று விவாதிக்கப்படுவதும் உண்டு. ஆனால் அந்த விமர்சனங்களைப்பற்றியோ, விவாதத்தைப்பற்றியோ அவர் கண்டு கொள்வதில்லை. அதனால், என்னைப் போன்றவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கூட சொல்லமுடியாமல் மனம் சங்கடப்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டதுண்டு. நேற்றைவிட இன்று நன்று; இன்றைவிட நாளை மிக நன்று என்பதில் உறுதி கொண்டவர் தலைவர் பேராசிரியர். அதனால் எல்லாம் சரியாகிவிடும் என்ற அழுத்தமான நம்பிக்கையும் கொண்டவர்.

பயணங்களில் உடன் வருபவர்களுக்கு ஒரு சிறு சிரமம்கூட ஏற்பட்டுவிடக்கூடாது. என்பதில் மிகக்கவனமாக இருந்து நள்ளிரவில் மங்கலான ஒளியில் குர்ஆன் ஓதுவதையும் தொழுவதையும் கண்டு பலமுறை நான் மெய்சிலிர்த்திருக்கிறேன்.

தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்களுக்கு 77வது பிறந்த நாள் ஜனவரி 5.

அவர் நூற்றாண்டைத் தாண்டி வாழ வேண்டும், வாழும் காலமெல்லாம் இந்த சமுதாயத்தை தலைமை ஏற்று தொடர்ந்து வழி நடத்திட வேண்டும். அதற்கு வல்ல இறைவனிடம் பிரார்திப்பது நமது கடமை.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions