மேட்டூர் அணை நீர்மட்டம் கடும் சரிவால் பொதுமக்கள் கவலை

0

1மேட்டூர் அணை மூலம் திருச்சி, நாமக்கல், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படும்.

கடந்த ஆண்டு போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததால் 3 மாதம் தாமதமாக செப்டம்பர் மாதம் 20-ந் தேதி 12 ஆயிரம் கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 87.68 அடியாக இருந்தது.

தென்மெற்கு பருவ மழை கை கொடுக்காததாலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு படி கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

தென்மேற்கு பருவ மழை கைவிட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழையாவது கை கொடுக்கும் என்று விவசாயிகள் நம்பினர். ஆனால் வடகிழக்கு பருவ மழையும் சாரசரியை விட மிக குறைந்த அளவிலேயே பெய்ததால் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகினர்.

இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்ததால் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த நவம்பர் மாதம் முதல் 750 கன அடியாக குறைக்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் விவசாய பயிர்கள் கருகி வருகிறது. இதனால் மன வேதனை அடைந்த விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்குமாறு சுப்ரீம் கோர்ட் பல முறை உத்தரவிட்டும் அதனை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து 21 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 35.54 அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 9.97 டி.எம்.சி.யாக சரிந்தது.

மேட்டூர் அணையில் உள்ள மீன் வளத்தை பாதுகாக்கவும், ஆத்தூர் குடிநீர் திட்டம், சேலம் மாநகராட்சி தனி குடிநீர்திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், கோனூர் கூட்டு குடிநீர் திட்டம்,

கொளத்தூர் குடிநீர் திட்டம், வேலூர் கூட்டு குடிநீர் திட்டம், மேட்டூர் நகராட்சி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட பல நீர் திட்டங்களுக்காகவும் மேட்டூர் அணையில் 9.5 டி.எம்.சி. தண்ணீரை இருப்பு வைக்க வேண்டும்.

தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்த பட்ச அளவை எட்டி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி அணையின் நீர்மட்டம் 9.69 அடியாக இருந்தது. அதன் பிறகு இப்போது நீர்மட்டம் குறைந்த பட்ச அளவை எட்டியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் வரை டெல்டா பாசன கால்வாய் கரையோர கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், அணையில் இருந்து அதிகபட்சம் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

அதுவரை தண்ணீர் திறக்க மேட்டூர் அணையில் இருப்பு உள்ள தண்ணீர் போதுமானதாக இல்லை. நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மேட்டூர் அணையை நம்பி உள்ள பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள் வேகமாக குறைந்து வருவதால் பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை அருகே உள்ள கொளத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் வாழை, மிளகாய், மஞ்சள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

இந்தாண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் கொளத்தூரில் மேட்டூர் அணை கரையோர விவசாய நிலங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பாசன கிணறுகள் வறண்டு விட்டது.

15 சதவீதத்திற்கும் குறைவாகவே சில கிணறுகளில் தண்ணீர் இருப்பதால் அதை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்ய முடியாது என்பதால் விவசாயிகள் நிலங்களை தரிசாக விட்டுள்ளனர்.

கொளத்தூர் பேரூராட்சி சாக்கடை கழிவு நீர் சின்ன மேட்டூர் அருகே ஓடையில் கலக்கிறது. இந்த கழிவு நீரை விவசாயிகள் குழாய் மூலம் எடுத்து தனது வறண்ட கிணறுகளில் தேக்குகிறார்கள். பின்னர் அதனை கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் உறிஞ்சி சோளம் உள்பட பயிர்களுக்கு பாசனம் செய்கிறார்கள். இந்த தண்ணீர் பயிர்கள் மற்றும் நிலத்தையும் பாதிக்கிறது.

மேட்டூர் அணை கரையோரம் கிணறுகள் வறண்ட நிலையில் சாக்கடை கழிவு நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் அவலம் நீடிப்பது விவசாயிகளை கடும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

வடகிழக்கு பருவ மழை காலம் முடியும் நிலையை நெருங்கி உள்ளதால் இனி வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புகள் குறைவாக உள்ளது. இதனால் விவசாயிகள் இரவு பகல் தூக்க மின்றி தவித்து வருகிறார்கள்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions