தமிழகம் உட்பட நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை : முழு விசாரணை நடத்த வேண்டும்

0

மிழகம் உட்பட நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், விவசாயிகளின் உயிர் பலியை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன, விவசாயிகளை காப்பதற்காக எந்த கொள்கையும் வகுக்கப்படாதது ஏன் என சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசும், தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும், ரிசர்வ் வங்கியும் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள், பயிர் கருகிய வேதனையில் மாரடைப்பால் இறக்கின்றனர். பலர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  இதனால் தமிழகத்தில் விவசாயிகள் இறப்பு தினசரி நிகழ்வாக மாறியிருக்கிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 247 விவசாயிகள் பயிர் கருகிய வேதனையில் இறந்துள்ளனர். எனவே, பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட மாநில அரசு, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த இழப்பீடு போதுமான அளவில் இல்லை என விவசாயிகள் கூறியுள்ளனர். அதோடு, வறட்சி காரணமாக சொற்ப அளவிலான விவசாயிகளே இறந்திருப்பதாகவும் அரசு கணக்கு காட்டி வருவது விவசாயிகளின் வேதனையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வறட்சி காரணமாக, குஜராத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் அக்டோபர் 2012ம் ஆண்டு வரை 692 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடக்கோரியும் தன்னார்வ தொண்டு நிறுவனம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால், மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம்

மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனு தொடர்பாக குஜராத் மாநில அரசு பதில் அளிக்க நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு இதே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி கெஹர், நீதிபதி என்.வி.ரமணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

அவர்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது: இது வெறும் ஒரு மாநிலத்துக்கு உட்பட்ட பிரச்னை மட்டுமல்ல. இயற்கை பேரிடர்களால் விளைச்சல் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வறட்சியாலும், கடன் தொல்லையாலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது துரதிஷ்டவசமானது. இது பொதுநலன் சம்மந்தப்பட்ட உணர்வுப்பூர்வமான பிரச்னையாகும்.  ஆனால், இதுவரை விவசாயிகளை காப்பாற்றக் கூடிய வகையிலான எந்த ஒரு தேசிய கொள்கையையும் அரசு வகுக்காதது ஏன்?

விவசாயிகள் நலனுக்காக அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். விவசாயிகள் தற்கொலைக்கான பின்னணி காரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மற்றும் கடன் தொடர்பான பிரச்னைகள் குறித்து ரிசர்வ் வங்கியும் ஆய்வு செய்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினர்.உச்ச நீதிமன்ற தலையீட்டால், விவசாயிகள் தற்கொலை விவகாரம் தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க உள்ளது.

கடன் சுமையே முக்கிய காரணம்:

விவசாயிகள்  தற்கொலை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம்  அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட  வழக்குகளின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், தற்கொலை செய்ய  முதன்மையான காரணம் கடன் சுமையே. கடன் சுமையால் மட்டும் 2015ம் ஆண்டில் 3097  பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தை  பொறுத்த வரை 2014ல் 895 விவசாயிகளும், 2015ல் 616 விவசாயிகளும் தற்கொலை  செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தாண்டின் தொடக்கத்திலேயே தமிழகத்தில்  விவசாயிகள் மரணம் தொடர்கதையாக இருப்பது வேதனை அளிக்கும் விஷயம் என்று  விவசாயிகள் மத்தியில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்–்ளது.

* 2014ல்  நாடு முழுவதும் 5,650 விவசாயிகளும், 2015ல் 8,007  விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.

* 2015ல்  விவசாயிகள் தற்கொலை 42 %அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions