காவிரியின் குறுக்கே புதிய அணைகட்ட டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பு

0

11டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி நீரை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு மழை இல்லாததாலும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி பொய்த்து போனது. இதனால் விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சியில் மரணம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு 3 அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் காவிரியில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளது மேலும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

சாமி. நடராஜன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர்):-

டெல்லியில் நடைபெற்ற காவிரி தொழில்நுட்ப கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம் என கூறியது.

அதற்கு அடுத்த சிலவாரங்களில் கர்நாடக முதல்-மந்திரி புதிதாக அணை கட்ட நிதி ஒதுக்கி இருப்பது தமிழக விவசாயிகளை ஏமாற்றும் செயல்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் காவிரியில் இதற்கு மேல் எந்த அணைகளும் கட்டக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை மதிக்காமல் புதிய அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழ்நாட்டிற்கு பாதகமான நிலை ஏற்பட்டு உள்ளது. கர்நாடக அரசு மேகதாது, ராசிமணல் உள்ளிட்ட 3 இடங்களில் அணை கட்ட நிதி ஒதுக்கியது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு விரோதமான செயல் ஆகும்.

ஏற்கனவே கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் தர மறுத்ததால் டெல்டா மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் புதிய அணை கட்ட முடிவு எடுத்திருப்பது தமிழகத்திற்கு குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் மத்திய, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து கர்நாடக அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

கக்கரை சுகுமாறன் (விவசாயிகள் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர்):-

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறி வருகிறது.

இந்நிலையில் புதிய அணை கட்டுவதால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். கடந்த ஒரு ஆண்டாக கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தற்போது புதிய அணை கட்ட ரூ. 5,500 கோடி நிதி ஒதுக்கி அணை கட்டியே தீருவோம் என அம்மாநில முதல்வர் கூறி இருப்பது டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இளைஞர்கள் நடத்திய போராட்டம் போல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் நாளை பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் முதலில் தமிழகத்தின் வாழ்வாதாரமான விவசாயத்தையும், விவசாயிகளுக்கான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கான பணிகளை செய்து விட்டு பின்னர் யாரை வேண்டுமானாலும் பார்க்க செல்லலாம்.

இதில் மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடுவர் மன்ற தீர்ப்பில் கூறி உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions