வேலைவாய்ப்புகள் மிகுந்த நெகிழி தொழில்நுட்பம்!

0

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி – வேலை வழிகாட்டி

சிப்பெட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய நெகிழிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Central Institute of Plastics Engineering and Technology CIPET) இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனங்கள் துறையின் கீழ் (Dept. of Chemicals and Petrochemicals, Ministry of Chemicals & Fertilizers, Govt. of India) செயல்பட்டுவருகிறது.

இந்நிறுவனம் 1968-ல் சென்னையில் நிறுவப்பட்டு, பிற மாநிலங்களிலுள்ள சிப்பெட் அமைப்புகளுக்கெல்லாம் தலைமையகமாக உள்ளது. திறன் மேம்பாடு, தொழில்நுட்ப உதவிச் சேவைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் இத்துறை முழுமையாக ஈடுபாடு காட்டிவருகிறது. அகமதாபாத், அமிர்தசரஸ், அவுரங்காபாத், போபால் புவனேஷ்வர், குராகான், கவுஹாத்தி, குவாலியர், ஐதராபாத், ஹாஜிபூர், ஹால்டியா, இம்பால், ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, மதுரை, மைசூர், ராய்ப்பூர், விஜய்வாடா எனப் பல்வேறு நகரங்களில் இதன் கிளை அமைப்புகள் உள்ளன.

ஒவ்வொரு சிப்பெட் மையமும் பயிற்சியளிப்பதும், தொழில்நுட்பச் சேவை வழங்குவதும் மட்டுமின்றி, மேம்பாட்டுக்கான ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கையிலெடுத்துக்கொண்டு அதில் நிபுணத்துவத்தை வளர்த்தெடுக்கின்றன.

இளங்கலை, முதுகலைப் படிப்புகள், முனைவர் பட்டத்துக்கான ஆய்வுப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், முதுகலைப் பட்டயப்படிப்புகள், பிரத்யேகத் தொழிற்சாலைப் பயிற்சிகள், மரபுசாரா ஆபரேட்டர் லெவல் பயிற்சிகள் எனப் பல்வேறு படிப்புகள் கற்றுத் தரப்பட்டு இந்திய பிளாஸ்டிக் மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களில் செயல்படுவதற்குப் பயில்பவர்கள் தயார் செய்யப்படுகின்றனர்.

பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை என்று ஆனதால் இந்தத் துறைக்கான வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வாஷிங் மெஷின் முதல் செயற்கைக்கோள் வரை பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பான சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சிப்பெட் அமைப்பு மேற்கொண்டுவருகிறது.

இங்கு இடம்பெற்றிருக்கும் பட்டயம் (Diploma), மேம்பட்ட பட்டயம் (Post Diploma) மற்றும் முதுநிலைப் பட்டயப் (Post Graduate Diploma) படிப்புகளில் 2017 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படிப்புகள் விவரம்: இந்நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுக் கால அளவிலான நெகிழிச் செயல்முறைகள் மற்றும் சோதனை (Postgraduate Diploma in Plastics Processing & Testing) எனும் முதுநிலைப் பட்டயப்படிப்பு, நெகிழி வார்ப்புரு வடிவமைப்பு (Post Diploma in Plastics Mould Design with CAD/CAM) எனும் மேம்பட்டபட்டயப்படிப்பு, மூன்று ஆண்டுக் கால அளவிலான நெகிழித் தொழில்நுட்பம் (Diploma in Plastics Technology), நெகிழி வார்ப்புருத் தொழில்நுட்பம் (Diploma in Plastics Mould Technology) எனும் இரண்டு பிரிவுகளிலான பட்டயப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

வயது மற்றும் கல்வித்தகுதிகள்: நெகிழிச் செயல்முறைகள் மற்றும் சோதனை (Postgraduate Diploma in Plastics Processing & Testing) எனும் முதுநிலைப் பட்டயப்படிப்புக்கு வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு, அறிவியலில் இளநிலைப் பட்டம் (B.Sc) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நெகிழி வார்ப்புரு வடிவமைப்பு (Post Diploma in Plastics Mould Design with CAD/CAM) எனும் மேம்பட்ட பட்டயப்படிப்புக்கு மூன்றாண்டுக் கால அளவிலான இயந்திரப் பொறியியல் பாடங்களில் (Mechanical, Plastics Technology, Tool/Production/ Automobile Engineering, Mechatronics, Tool & Die Making, DPMT/DPT (CIPET)) ஏதாவதொன்றில் பட்டயப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நெகிழித் தொழில்நுட்பம் (Diploma in Plastics Technology), நெகிழி வார்ப்புருத் தொழில்நுட்பம் (Diploma in Plastics Mould Technology) எனும் இரு பட்டயப்படிப்புகளுக்கும் பத்தாம் வகுப்பில் 35% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்காணும் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.7.2017 அன்று முதுநிலைப் பட்டயப்படிப்பு மற்றும் மேம்பட்ட பட்டயப்படிப்புகளுக்கு 25 வயதுக்கு அதிகமாகாமலும், பட்டயப்படிப்புகளுக்கு 20 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சென்னையிலுள்ள அலுவலகத்திலோ அல்லது  இந்தியா முழுவதிலும் அமைந்திருக்கும் இந்நிறுவனத்தின் ஏதாவதொரு கிளை அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பத்தைப் பெறலாம்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.250, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.50 என விண்ணப்பக் கட்டணத்தை ரொக்கமாகவோ அல்லது ‘‘CIPET” என்ற பெயரில் பெறப்பட்ட வங்கி வரைவோலையைச் செலுத்தியோ பெற்றுக் கொள்ள முடியும்.

இணைய வழியில் விண்ணப்பிக்க விரும்புவோர் http://cipetonline.com என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்துகொண்டும் விண்ணப்பிக்கலாம். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. இணைய வழியிலான விண்ணப்பம் நிரப்புவதற்கான வழிமுறைகள் இணையத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பிக்க/விண்ணப்பம் சென்றடையக் கடைசி நாள்: 2.6.2017.

நுழைவுத்தேர்வு: இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியுடைய அனைவரும் மேற்காணும் இணையதளத்திலிருந்து, ஜூன் இரண்டாம் வாரத்தில் நுழைவுச்சீட்டைத் (Hall Ticket)  தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை உட்பட இந்தியா முழுவதும் 21 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் மையங்களில் 25.6.2017 அன்று இணை நுழைவுத்தேர்வு (Joint Entrance Examination) நடத்தப்படும்.

நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும். இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, இப்படிப்புகளுக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குச் சேர்க்கைக்கான அழைப்புக் கடிதங்கள் ஜூலை இரண்டாம் வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இணையதளத்திலிருந்து அழைப்புக் கடிதத்தைத் தரவிறக்கம் செய்து சேர்க்கையைப் பெறலாம்.

இந்தப் படிப்புகள் குறித்தும், பாடத்திட்டங்கள், படிப்பிற்கான கட்டணங்கள், உதவித்தொகை விவரங்கள் போன்ற மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 044-2225470106 எனும் தொலைபேசி எண்களிலோ, 9677123882, 9444698836 ஆகிய அலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

– தேனி மு.சுப்பிரமணி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions