விவசாயிகள் ஏதுமில்லாதவர்கள் போல் அரை நிர்வாண போராட்டம்

0

நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகள் : ஏதுமில்லாதவர்கள் போல் அரை நிர்வாண போராட்டம்; மத்திய அரசு மவுனம் கலைக்குமா!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் 5-வது நாளாக தொடர் அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மேலுடலில் சட்டை அணியாமல் நாமத்தைப் பூசிக்கொண்டு கழுத்தில் மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டபடி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டி இருக்கும் வேட்டி கூட சொந்தமில்லை. தழைகளும் இலைகளும் தான் ஆடைகள். மண் சட்டிகளை தலைமாட்டில் வைத்து பிச்சைக் கோலமே தங்கள் வாழ்க்கை என்பதை உணர்த்த தமிழக விவசாயிகள், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். மண் சட்டிகளை தலைமாட்டில் வைத்து அரை நிர்வாணக் கோலத்தில் படுத்திருக்கும் அவர்களை கண்டால் நெஞ்சம் பதறுகிறது. நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகள், ஏதுமில்லா பிச்சைக்காரர்களை போல ரோட்டில் படுத்துறங்கி, அரை நிர்வாண கோலத்தில் நடத்தி வரும் போராட்டம் சாமானிய மக்களின் நெஞ்சை கசக்கி பிழிகிறது.

பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் இந்தக் காட்சிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனதை கரைக்கிறது. போரட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிலர், ஆதிவாசிகளைப் போல் பச்சை இலை தழைகளை உடலில் கட்டிக் கொண்டு தங்களின் அவலத்தை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து மத்திய அரசு மனமிறங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions