குழந்தைகளின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை வேண்டாமே

0
குழந்தைகளின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை வேண்டாமே

குழந்தைகளின் செயல்பாடுகள் பெற்றோரைப் போன்றே இருக்காது. அதனால் பெற்றோர் அவர்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகளை சுயமாக சிந்திக்க விடுங்கள். சுதந்திரமாக செயல்பட விடுங்கள். அப்பொழுதுதான் அவர்களிடம் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும். 
அவர்களுடைய செயல்பாடுகளை ஊக்குவியுங்கள். அவை தவறானதாக இருந்தாலும் அவர்களின் போக்கிலேயே சென்று நன்மை, தீமைகளை பக்குவமாக விளக்கி புரிய வையுங்கள். அதைவிடுத்து உங்களுடைய கருத்துக்களை அவர்களின் மீது திணித்து அவர்களுடைய ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போட்டு விடாதீர்கள். அவர்கள் குழப்பமான மனநிலையில் இருக்கும் சமயங்களில் பெற்றோரின் அறிவுரைகள் அவர்களுடைய சந்தேகங்களை தெளிவடைய செய்யும் விதத்தில் இருக்க வேண்டும்.

பள்ளி நாட்கள் தவிர மற்ற நாட்களிலும் அதிகாலையில் தூங்கி எழும் பழக்க வழக்கத்தை பின்தொடர செய்யுங்கள். அது சோம்பல் தனத்தை போக்கி எப்பொழுதும் சுறுசுறுப்பாக அவர்களை செயல்பட வைக்கும்.

கண்டிப்பும், கட்டளையும் குழந்தை வளர்ப்புக்கு கைகொடுக்காது. அதிக கண்டிப்புடன் வளர்க்கப்படும் குழந்தைகள் தங்களுக்குள் எழும் சந்தேகங்களை போக்குவதற்கு பெற்றோரை நாட தயங்குவார்கள். கண்டிப்பு குறைவான, கனிவுமிக்க நடத்தையே குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட வைக்கும்.

அவர்களிடையே எழும் கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் சொல்லும் மனநிலையில் பெற்றோர்கள் இருக்க வேண்டும். சரியான ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்குவதன் மூலம் குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்படும். பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான உறவில் ஒருபோதும் இடைவெளி ஏற்படக்கூடாது. அப்போதுதான் தயக்கமின்றி மனம் விட்டு பேசுவார்கள். தவறான பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கவும் மாட்டார்கள்.

வீட்டில் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவ பாடங்கள்தான் குழந்தைகளின் பழக்க வழக்கங்களையும், நன்னடத்தையையும் தீர்மானிக்கும். அமைதி, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல், குழுவாக இணைந்து பணியாற்றுதல், கலந்துரையாடல் போன்ற அனைத்து விஷயங்களையும் வீட்டில் இருப்பவர்களிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. அவை அவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்துவதற்கு வழிகாட்டும். எனவே பெற்றோர்கள் குழந்தைகள் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions