ஸக்காத் ஒரு கடமையான தர்மம்

0

பிஸ்மில்லா ஹிற்றஹ்மானிற்றஹீம்.

க்காத் ஒரு கடமையான தர்மம்

சமூகத்தில் வறுமையை ஒழித்து ஏழைகள் மற்றும் பலகீனர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இஸ்லாம் ஏற்படுத்திய ஒரு வழிமுறையே ஸக்காத் என்னும் கடமையான தர்மம் ஆகும்.

திருக்குரானில் ஏராளமான இடங்களில் தொழுகை என்ற உயர்ந்த வணக்கத்தோடு தொடர்பு படுத்தியும் தனித்தும் இந்த கடமை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

நீங்கள் தொழுகையை நிலை நாட்டுங்கள் இன்னும் ஸக்காத்தையும் கொடுங்கள் .”” (24:56)

இந்த நிர்பந்த தானமானது கஞ்சத்தனம் உலோபித்தனம் செல்வத்தின் மீதுள்ள அபரிமிதமான ஆசை முதலிய தீய குணங்களிலிருந்து மனிதனை சுத்தப்படுத்துகின்றது. அவனது உள்ளத்தை பரிசுத்தமாக்குகின்றது. திருக்குரான் கூறுகின்றது.

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக்கொண்டுஅவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக!”” (9:103)

குரானின் பார்வையில் ஸக்காத் என்பது செல்வந்தனின் கொடை அல்ல. மாறாக அதுஏழையின் உரிமையாகும். அவர்களுடைய செல்வத்தில் கேட்டு வருபவர்களுக்கும் வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.”” (51:19)

எவற்றில் ஸக்காத் கடமை?

இருப்பு பணம் வியாபாரச் சரக்குகள் விவசாய உற்பத்திப் பொருட்கள் கால்நடைகள் முதலிய எல்லா வகை செல்வங்ளின் மீதும் ஸக்காத் கடமையாகும். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும் பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள் கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும்

நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள் .”” (2:267)

அவர்களது பொருட்களில் யாசிப்போருக்கும் வறியவர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.”” (70: 24,25)

ஹலாலான முறையில் சம்பாதித்த எந்த ஒரு சொத்திற்கும் ஸக்காத் கடமை என்பதைமேற்கண்ட வசனங்கள் தெளிவு படுத்துகின்றது. முக்கியமாக, நாணயங்கள் விவசாய உற்பத்திகள் மற்றும் கால் நடைகள் முதலியவற்றிற்கு ஸக்காத் கொடுக்க வேண்டும். ஸக்காத் கொடுக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்.

அவர்கள் தாம் ஸக்காத்தைக் கொடுக்காதவர்கள் மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!.(41:7)

இன்னும் எவர்கள் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அவற்றை செலவிடாதிருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும் (இன்னும்) இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறப்படும்)” (9:34 35)

ஸக்காத் கடமையாகும் செல்வத்தின் உச்ச வரம்பு

ஒருவருக்குச் சொந்தமான இருப்புச் சொத்தில் ஸக்காத் கடமையாகும் உச்ச வரம்பேநிஸாப் எனப்படுகிறது. பல வகை சொத்துக்களின் நிஸாப் பற்றிக் கூறும் ஹதீஸைக் காண்போம்.

அபூ ஸஈது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ஐந்து ‘வஸக்’ கிற்கு குறைந்த பொருளுக்கு ஸக்காத் கிடையாது. ஐந்து ‘ஊகிய்யா’ விற்கு குறைந்த வற்றிற்கும் ஸக்காத் கிடையாது. ஐந்திற்கு குறைவான ஒட்டகத்திற்கும் ஸக்காத் கிடையாது.”

ஒரு ‘வஸக்’ என்பது அறுபது ஸாஃஉ ஆகும், எனவே விவசாயப் பொருட்களின் நிஸாப்300 ஸாஃஉ ஆகும். ஒரு ஸாஃஉ என்பது ஏறத்தாழ இரண்டு கிலோவாகும். ஒரு ஊகிய்யா என்பது நாற்பது திர்ஹம் ஆகும். எனவே நாணயங்களின் ஸக்காத் 200 திர்ஹம் ஆகும்.

நாணயங்கள்

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வெள்ளி நாணயங்கள் திர்ஹமாகவும் தங்க நாணயம்தீனார் ஆகவும் இருந்தது. அன்றைய ஒரு தீனார் பத்து திர்ஹங்களுக்குச் சமமாக இருந்தது.

மேற்கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் கடன் மற்றும் அடிப்படை செலவுகள் போக மீதமுள்ள சொத்து ஜந்து ஊகிய்யா அதாவது 200 திர்ஹம் வெள்ளி நாணயமோ அல்லது அதன் எடைக்குச் சமமான 590 கிராம் வெள் ளிக்கு சமமாக சேமிப்பில் இருக்குமானால் அதனுடைய இரண்டரை சதவிகிதம் ஸக்காத் கொடுத்திருக்க வேண்டும். தங்கமும் இது போன்றே கணக்கிடப்படும்.

பணத்தினுடைய ஸக்காத்

இன்று கொடுக்கல் வாங்கலுக்கு பணமே பரிமாறப்படுகிறது. எனவே பணத்திற்கு ஸக்காத் நிர்பந்தமாகும். இதனுடைய அளவுகோலும் வெள்ளி நாணயத்திற்குக் கூறப்பட்டது போன்றேயாகும்.

அதாவது 590 கிராம் வெள் ளிக்குச் சமமான பணம் சேமிப்பாக இருக்குமானால் அதனுடைய இரண்டரை சதவீதம் கொடுக்க வேண்டும். கூடுதல் இருப்பினும் அதனுடைய அளவைக் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும்.

வியாபாரத்தின் ஸக்காத்.

வியாபாரப் பொருட்களுக்கும் அதனுடைய உச்ச வரம்பின் மீது ஸக்காத் கடடையாகும்.ஒரு வருடம் முழுமையடையும்போது சரக்கும், விற்று கிடைத்த வருமானமும் அடிப்படை தேவையல்லாதவற்றிற்கு உபயோகித்தவை (முதலீடு) எல்லாம் கணக்கிட்டு 590 கிராம் வெள்ளியினுடைய விலை அளவிற்கோ அதனை விட அதிகமோ இருக்குமானால் அதற்கும் இரண்டரை சதவிகிதம் ஸக்காத் வழங்கி விட வேண்டும்.

நிதி (பொக்கிஷம்)

தங்கமோ வெள்ளியோ அல்லது விலையுயர்ந்த சாதனங்களோ பொக்கிஷமாகவோ பரிசாகவோ கிடைத்தால் அதற்கு 20٪ ஸக்காத் வழங்க வேண்டும்.

விவசாயப் பொருட்கள்

பல நாடுகளிலும் பலவித விளைபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவு தானியங்கள் பழ வகைகள் தாதுப் பொர்ட்கள் முதலிய உணவுப் பொருளாகவும் வருமானத்திற்காகவும் உற்பத்தி செய்யப்படுகின்ற எல்லா விவசாயப் பொருட்களுக்கும் ஸக்காத் கடமையாகும்.

“பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாச் செடிகளும், பேரீத்த மரங்களும் உள் ள சோலைகளும், புசிக்கத்தக்க விதவிதமான காய்கறி, தானியங்களையும், ஒன்று போலவும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஸைத்தூன், மாதுளை ஆகியவற்றையும் அவனே படைத்தான்.

ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள் . மேலும் அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் (அதற்குரிய) பாகத்தைக் கொடுத்து விடுங்கள் . வீண் விரயம் செய்யாதீர்கள் – நிச்சயமாக அவன் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” (6: 141) என்ற வசனமும் இங்கே கவனித்தக்கதாகும். எனவே உணவுக்காகவும் வருமானத்திற்காகவும் உற்பத்தி செய்யப்படுகின்ற எல்லாப் பொருட்களுக்கும் ஸக்காத் கடமை என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.

ஐந்து வஸக்கிற்கு குறைந்த விளைச்சல்களுக்கு ஸக்காத் கிடையாது. அறுபது ஸாவுக்குசமமானதே ஒரு வஸக் ஆகும். 5 வஸக் என்பது 300 ஸாவு ஆகும். ஒரு ஸாஃஉ னுடைய எடை சராசரி 2 கிலோ அளவிற்கு வரும். ஆக ஏறக்குறைய 600 கிலோகிராம் (6 குவிண்டால்) விவசாய விளைச்சல்கள் ஒருவருக்குக் கிடைக்குமானால் ஸக்காத் அதன் மீது ஸக்காத் கடமையாகும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரேபியாவின் விவசாயப் பொருட்கள் கோதுமைபேரீச்சை திராட்சை முதலியவையாகும். நெல், கோதுமை, பார்லி, கேள் வரகு, மிளகு, தேயிலை, காப்பி, ஏலம், இஞ்சி முதலியன நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேங்காய், ரப்பர் முதலியனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இவற்றுக் கெல்லாம் ஒரே எடையை நிஸாப் ஆகக் கணக்கிட முடியாது. எனவே முக்கிய உணவாக பயன்படுத்தப்படும் (நெல், கோதுமை) விளைச்சலின் ஆறு குவிண்டாலினுடைய விலையைக் கணக்கிட்டு அதற்குச் சமமான அளவை நிஸாப் ஆகக் கருதி ஸக்காத் வழங்க வேண்டும்.

பொதுவாக விவசாயப் பொருட்களுக்கு 10 சதவிகிதம் ஸக்காத் வழங்க வேண்டும். நீர்பாய்ச்சி விளைவிக்கப்பட்டவற்றிற்கு 5 சதவிகிதம் போதுமானதாகும். “மழையினாலோ, அருவிகள் மூலமாககோ தண்ணீர் கிடைப்பவற்றிற்கும், பூமியின் ஈரப்பதத்தினால் வளர்வதுமாகிய விளைச்சல்களுக்கு பத்தில் ஒன்றும், நீர் பாய்ச்சப்பட்டு விளைந்தவற்றுக்கு அதனுடைய பாதி (5 சதவீதம்) யும் ஸக்காத் ஆகும்.”

கால் நடைகளின் ஸக்காத்

ஸக்காத் கடமையாகக் கூடிய மற்றோர் இனமே கால்நடைகள் ஆகும். இன்று பலநாடுகளிலும் கால்நடைகள் வளர்ப்பது விவசாயமாகவும் வருமான மார்க்கமாகவும் உள்ளது. மேய்ந்து சாப்பிடுகின்ற ஆடு, மாடு, ஒட்டகம் முதலியவற்றுக்கே ஸக்காத் நிர்ணயிக்கப்ட்டுள்ளது.

40 ஆடுகள் வரை ஸக்காத் கடமையில்லை. 40 க்கு ஓர் ஆடு கொடுக்க வேண்டும். 120வரையிலும் ஒன்று போதுமானது. 120 முதல் 200 வரை இரண்டும் 200 முதல் 300 வரைமூன்றும் அதைத் தொடர்ந்நு ஒவ்வொரு 100 க்கும் ஒன்று வீதம் ஸக்காத் வழங்க வேண்டும்.

மாடுகளுக்கு 30 முதல் 39 வரை ஒரு வயது பூரணமான ஒரு கன்றுக்குட்டி. 40 முதல் 59 வரை இரண்டு வயது பூரணமடைந்த ஒரு மாடு. 60 அதல் ஒரு வயது பூரணமான இரண்டுகன்றுக்குட்டிகள் . அதற்கு மேல் ஒவ்வொரு 40 க்கும் இரண்டு வயது பூரணமான ஒரு மாடு. இவ்வாறே ஸக்காத் நல்க வேண்டும்.

ஒட்டகத்திற்கு கீழ்கண்ட அட்டவணைப்படி ஸக்காத் நல்க வேண்டும்.

5 முதல் 9 வரை ஓர் ஆடு. இவ்வாறு 24 வரை அதிகரிக்கக்கூடிய ஒவ்வொரு ஐந்திற்கும்ஓர் ஆடு வீதம் கொடுக்கவேண்டும்.

120 க்கு அதிகமான ஒவ்வொரு 40 க்கும் மூன்று வயது பூரணமான ஒட்டகமும் ஒவ்வொரு50 க்கும் நான்கு வயது நிரம்பிய ஒரு பெண் ஒட்டகமும் ஸக்காத் ஆக வழங்க வேண்டும்.

ஸக்காத் வசூல் மற்றும் விநியோகம்.

சமூகத்திலிருந்து வறுமையை முற்றிலும் ஒழித்தல், சமூகத்தின் பாதுகாப்பிற்கும் பொதுநன்மைக்கும் தேவையான பொருளாதாரத்தை இருப்பில் வைத்தல் முதலியவையே ஸக்காத்தின் முக்கிய இலட்சியங்களாகும். அதனை கொடுக்கக்கடமைப்பட்டவர்ளிடமிருந்து பிரித்து அதற்கு உரிமைப்பட்டவர்களிடம் ஒப்படைப்பது அவசியம் ஆகும். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் அதற்கான அமைப்புகள் ஏற்படுத்துவது அவசியம் ஆகும்.

அவ்வாறு ஏற்படுத்துவது சமூகத்தில் பொறுப்பு வகிப்பவர்களின்மீது கடமையாகும். இது அல்லாஹ் விதித்த கடமை.  அவர்களது செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை வாங்குவீராக!

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், கலீஃபாக்களின் காலத்திலும், முஸ்லிம் ஆட்சியாளர்களின் காலத்திலும் இதற்கென்று அமைப்புகள்இருந்தன. முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய நாடுகளில் ஜமாஅத் தொழுகை, ஜுமுஆ முதலியவை நடப்பது போன்று ஸக்காத் சேகரிப்பதும் விநியோகமும் கூட்டாக நிறைவேற்ற வேண்டும். இதனால்தான் ஸக்காத் வசூலிப்பவருக்கு கொடுக்கப்படும் ஊதியத்தையும் ஸக்காத் நிதிக்குள் அடக்கி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

“நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது அவர்களுடைய செல்வத்திலிருந்து ஸக்காத்தைக்கடமையாக்கியுள்ளான். எனவே அவர்களில் செல்வந்தர்களிலிருந்து பிரித்து அவர்களிலுள்ள

ஏழைகளுக்கு (பங்கிட்டுக்) கொடுப்பீராக!”

ஸக்காத்திற்கு உரிமைப்பட்டவர்களை எட்டாக குர்ஆன் பிரித்துள்ளது.“(ஸக்காத் என்னும்) தான தர்மங்கள் தரித்திரர்களுக்கும் ஏழைகளுக்கும் தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும் (இஸ்லாத்தின்பால்) உள்ளங்கள் ஈர்க்கப்படுவதர்க்காகவும் அடிமைகளை விடுதலை செய்யவும் கடன் பட்டிருப்பவர்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். –

அல்லாஹ் (யாவற்றையும்) அறிபவன் மிக்க ஞானமுடையவன்.” (9:60)

ஸக்காத் வசூல் மற்றும் விநியோகத்தில்;

ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ஸக்காத் முறையாக முஸ்லிம்களிடமிருந்து வசூலித்து குர்ஆன் சுன்னா அடிப்படையில் தகுதியுடையவர்களிடத்தில் ஒப்படைக்கவும், ஏழை எளிய முஸ்லிம்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் “பைத்துஸ்ஸக்காத்” என்ற திட்டம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு சமுதாயத்தில் உள்ள சகோதர சகோதரிகள் நல்லாதரவு தந்து வருகின்றனர்.

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் அதிலிருந்து மீள்வதற்கும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிட்சை பெறுவதற்கும் கடன் வாங்கி பெரும் துயரத்திற்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீள்வதற்கும் வறியவர்கள் சுயதொழில் செய்வதற்கும் இந்த ஸக்காத் நிதியிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

ஸக்காத் நிதி பெற உரிமைப்பட்டவர்கள் முறையாக விண்ணப்பித்தால் அவர்களுடைய விண்ணப்பங்களை இரண்டுபேர் கொண்ட குழு நேரடியாக சென்று ஆய்வு செய்து ஸக்காத் நிதி கோரும் நபர் அதற்கு தகுதியுடையவர்தானா என்று கண்டறிந்து அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய தொகையை பரிந்துரை செய்கின்றனர். அது கமிட்டியில் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் பெற்று நிர்ணயிக்கப்படும் தொகைக்கு வங்கிக் காசோலை வழங்கப்படுகிறது. இதற்கென தனியாக

வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு கணக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அல்லாஹ் விதித்த கடமையை கூட்டாக நிறைவேற்றி சமுதாய மேம்பாட்டுக்கு உதவி செய்யும் இந்த திட்டத்தில் உங்கள் ஸக்காத் தொகையை வழங்கி பங்கு பெற்று அல்லாஹ்வின்

அருளைப் பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்
இஸ்லாமிய பைத்துஸ்ஸகாத்
பஹ்ரைனில் தொடர்பு கொள்ள

தமிழ் தாவா 36430747 / 36403984

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions