மதநல்லிணக்கத்தைச் சிதைக்கும் கற்கள்!

0
நன்றி நக்கீரன்.
இந்தியா உலக அளவில் பாராட்டப்படுதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதன் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மதநல்லிணக்கமும் தான் அதற்கு முக்கியப் பங்கு வகிப்பவையாக இருக்கும். உலகிற்கு வேண்டுமானால் அப்படி இருக்கட்டும், இந்தியா எப்போதும் இந்து நாடாகவே இருக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு சில இந்து அமைப்புகளும், அவற்றிற்கு உடந்தையாக ஆளும் மத்திய அரசாங்கமும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இதனை பரப்புரையாகவே மாற்றத் தொடங்கியுள்ளார்கள் அவர்கள்.
இந்தியாவின் நீண்ட வரலாற்றில் மதம் என்ற பெயரில் சமூகத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியப்பங்கு வகிப்பது கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாபர் மசூதி இந்துத்துவ அமைப்புகளால் இடிக்கப்பட்ட சம்பவம். இதைத் தொடர்ந்து மும்பையிலும், குஜராத்திலும் தொடர்ச்சியாக இனக்கலவரங்கள் நடந்து முடிந்தன. பல ஆயிரக்கணக்கான இந்துக்களும், இஸ்லாமியர்களும் இந்தக் கலவரங்களில் கொல்லப்பட்டனர். பலர் குடும்பங்களையும், உடைமைகளையும் இழக்க நேரிட்டது.
இந்தக் கலவரங்களின் அடிநாதமான பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட, அதற்கு தலைமை தாங்கிய பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக மத்திய அமைச்சர் உமா பாரதி மற்றும் விஷ்வ ஹிந்து பரிசித் என்ற அமைப்பின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் முக்கியக் குற்றவாளிகளாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்துமுடிந்த உத்திரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியோடு களமிறங்கியது பாஜக. தேர்தலில் வென்றபின் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் செயல்பாடுகள் அங்கு நடக்கத் துவங்கியுள்ளன.
விஸ்வ ஹிந்து பரிசித் என்ற இந்துத்துவ அமைப்பின் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மூன்று லாரிகளில் செங்கற்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளன. இதேபோல், கடந்த ஜூன் 19-ஆம் தேதியும் இரண்டு லாரிகள் செங்கற்களை இறக்கிச் சென்றுள்ளன. இந்த கற்கள் அனைத்தும் ராம்சேவக்புரம் என்ற பகுதியில், விஎச்பி-க்கு சொந்தமான கட்டுமான வேலைகள் நடக்கும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்னும் சில வாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் செங்கற்கள் வந்திறங்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
விஎச்பி அமைப்பிற்குக் கீழ் இயங்கும் ராம் ஜென்ம பூமி என்ற நிறுவனம்தான் இராமர் கோவிலுக்காகக் கொண்டு வரப்பட்ட கற்களை செதுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் நித்திய கோபால தாஸ் எனப்படுபவர் முன்னதாக பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர். இவர் தலைமையிலேயே தற்போது அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருப்பது கூடுதல் தகவல். இதுவரை கொண்டுவரப்பட்ட கற்கள் அனைத்தும் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில் உற்பத்தியானவை.
விஎச்பி அமைப்பின் சார்பில் செய்திநிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள தகவலில், ‘பாஜக தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கும் போது, அயோத்தியில் கோவில் கட்ட என்ன தடையிருக்கப் போகிறது? முந்தைய அகிலேஷ் யாதவ் ஆட்சியில் இதுபோல கற்களை இறக்குமதி செய்ய வணிகவரித்துறையின் படிவம் 39 தேவைப்பட்டது. இந்தக் காரணங்களால் கற்களை அப்போது இறக்குமதி செய்ய முடியவில்லை. இனி எங்கள் இலக்கை நோக்கி நகர்வோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.
ஃபைசாபாத் பகுதியின் காவல்துறை ஆணையர் மனோஜ் மிஷ்ரா என்பவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ‘அயோத்தி பகுதிக்கு கற்களை இறக்குமதி செய்வதற்கு எந்த நீதிமன்றமும், அதிகாரிகளும் தடை விதிக்கவில்லை. மேலும், விஎச்பி அமைப்பினர் அந்தக் கற்களை தங்கள் பகுதிகளில் தான் வைத்துள்ளனர்’ என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
 மனோஜ் மிஷ்ரா உச்சநீதிமன்றத்தால் பாபர் மசூதி-ராமர் கோவில் விவகாரத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர். அயோத்தி பகுதியில் அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும்.
 சமீப காலமாக மதம் என்ற பெயரில் மாடு உள்ளிட்ட பல காரணங்களால், நாட்டின் பல பகுதிகளில் இனக்கலவரங்கள் நடத்தப்பட்டன. இதில் பல அப்பாவிகள் பாதிப்புக்குள்ளாகினர். தற்போது அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனில், அது மேலும் நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் செயலாகவே முடியும். ஆண்டாண்டுகளாக கட்டப்பட்ட மதநல்லிணக்கம் எனப்படும் பிரம்மாண்டத்தின் கற்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து, எதைக் கட்டப்போகிறார்கள் இனி!
– ச.ப.மதிவாணன்
Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions