மித்தாலி எனும் பேசப்படாத வரலாறு!

0
2எந்த விளையாட்டாக இருந்தாலும், அது பெண்கள் ஆடும் விளையாட்டென்றால் அதன் மீதான கவனம் என்பது வெகுகுறைவாகவே இருக்கும்.
கிரிக்கெட் மாதிரியான விளையாட்டிற்கு உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள இந்திய நாட்டிலும் இதற்கு விதிவிலக்கு இல்லை. எல்லா துறைகளிலும் இந்தக்காலத்தில் பெண்களால் சாதிக்க முடியும் என்றாலும், அவர்களுக்கு வெளிஉலகத்தில் அடையாளம் அத்தனை எளிதாக கிடைப்பதில்லை. இந்த ஆதங்கத்தை பலமுறை செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி வெளிப்படுத்தியிருக்கிறார். உலக அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சாதனைகள் நிகழ்த்திய, நிகழ்த்திக் கொண்டிருக்கும் வீரர் மித்தாலி ராஜ். அவருக்கு நடப்பு உலகக்கோப்பைத் தொடர் கடைசியான தொடராக கூட இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இப்போது தான் அவர் மற்றும் அவரைத் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் பெண் வீராங்கனைகள் பலரும் கிரிக்கெட் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மித்தாலியின் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளையும், அதைக் கொண்டாட முடியாத அங்கீரகாரமற்ற சூழல்களும் நிறையவே நிகழ்ந்திருக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்து, வளர்ந்த மித்தாலி ராஜ் அடிப்படையில் ஒரு தமிழ்ப்பெண். நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மித்தாலியின் அப்பா துரைராஜ் விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றியவர். மிகுந்த சோம்பேறியான மித்தாலியை, அந்தப் போக்கிலிருந்து மாற்றவே அவரது பெற்றோர் அவரை கிரிக்கெட் ஆட வற்புறுத்தியுள்ளனர். மித்தாலி தனது 10-ஆவது வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளார். பரதநாட்டியத்தில் அதிக ஆர்வம் இருந்தபோதிலும், தனது 8 ஆண்டுகள் பயிற்சியை கிரிக்கெட்டிற்காக விட்டுக்கொடுத்தவர் மித்தாலி. இந்திய அணிக்காக தான் ஆடிய முதல் ஆட்டத்திலேயே 114 ரன்கள் விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் அவர். அப்போது அவருக்கு வயது 17. அதே ஆட்டத்தில் ரேஷ்மா காந்தி என்ற வீரரும் தனது முதல் ஆட்டத்தில் மித்தாலிக்கு முன்பாக சதம் அடித்ததால், இந்திய அணியில் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த இரண்டாவது வீராங்கனை மித்தாலி என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து அவரது 19-ஆவது வயதில் டெஸ்ட் போட்டியில் 214 ரன்களை விளாசினார். இதுவே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ரன்.
களத்தில் நிதானமாக ஆடினாலும், ஒருபுறம் நிறுத்தாமல் ரன்குவிப்பில் ஈடுபடுவதால் ஊடகங்கள் மித்தாலியை ‘அபாயகரமான கிரிக்கெட் வீரர்’ என வர்ணித்தன. அதிக சதங்கள், அதிக அரை சதங்கள், தொடர்ச்சியான 7 அரை சதங்கள் என எக்கச்சக்கமான சாதனைகளை படைத்திருக்கும் மித்தாலி, அதிக 90 ரன்கள் எடுத்தவர்கள் (5 முறை) பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறார். இந்திய அணியின் வெற்றிகரமான சேஷிங்குகளில் மித்தாலியின் சராசரி மட்டும் 109.68 ரன்கள். ‘தொடக்கத்தில் இருந்தே என் பெற்றோருக்காகத் தான் நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன்’ எனச் சொல்லும் மித்தாலி 5,000 ரன்களைக் கடந்தபோது ட்விட்டர்வாசி ஒருவரால் ‘பெண் சச்சின்’ என புகழப்பட்டார். மித்தாலி நிச்சயம் இதை விரும்பியிருக்க மாட்டார். 2013-ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 2015-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி மித்தாலியை கவுரப்படுத்தியது இந்திய அரசு. கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் மித்தாலியின் சாதனைகள் பெரிதாக பேசப்படவேயில்லை; ‘உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார்?’ போன்ற கேள்விகளைத் தவிர.
தற்போது இங்கிலாந்தில் நடந்துகொண்டிருக்கும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய பின் கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தது. அப்போது மித்தாலி பெவிலியனில் அமர்ந்தபடி, ‘தி எஸென்சியல் ரூமி’ என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். களத்தில் சிறப்பாக செயல்பட வாசிப்பு தனக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த ஆட்டத்தில் அவர் 74 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரரகள் அதிகம் சோபிக்காமல் ஏமாற்றம் அளிக்கும் போதெல்லாம், ஒற்றை ஆளாக நின்று அணியை வெற்றிக்கு வழிநடத்திச் செல்கிறார். அதுகுறித்து அவர், ‘தேசத்திற்காக ரன் குவிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அது ஒரு தீராத பசி. அந்தப் பசி ஒருபோதும் ஓயாது. தொடர்ந்து சிறப்பாக ஆட ஆசைப்படுகிறேன்’ என்கிறார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் மித்தாலி 34 ரன்கள் எடுத்தால் 6,000 ரன்களைக் கடக்கலாம் என்றிருந்தது. அந்த ஆட்டத்தில் கூலாக ஆடிய மித்தாலி அரைசதம் அடித்து உலக மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக 6,000 ரன்களைக் கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் சார்லோட் எட்வார்ட்ஸ் எனும் இங்கிலாந்து வீரர் அடித்திருந்த 5,992 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தது.  இருந்தபோதிலும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்க அணியுடனும் தோல்வியடைந்தது இந்தியாவின் உலகக்கோப்பை கனவை மூட்டை கட்டும் நிலைக்கு தள்ளியது. அதன்பிறகு நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில், மித்தாலியின் சதம் (109 ரன்கள்) மற்றும் ராஜேஸ்வரி கயாக்வாத்தின் அசாதரண பந்துவீச்சால் இந்திய அணி ஹிமாலய வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியானது.
இந்திய அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்ற முதல் கேப்டன் என்ற பெருமை மித்தாலி ராஜையே சேரும். 2005-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய அணி. துரதிர்ஷ்டவசமாக அந்த ஆட்டத்தில் இந்திய அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எந்த ஆஸ்திரேலிய அணியிடம் உலகக்கோப்பை இறுதிபோட்டியில் இந்திய அணி தோற்றதோ, அதே அணியுடன் நடப்பு தொடரில் அரையிறுதியில் சந்திக்க இருக்கிறது. இதுவரை ஆறுமுறை உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. முதல்முறையாக இந்தியாவை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கூட்டிச்சென்ற மித்தாலி, தன் கடைசி உலகக்கோப்பை தொடரிலும் அந்த அற்புதத்தை நிகழ்த்துவாரா? சக வீரர்கள் அவருக்கு ஒத்துழைப்பு தருவார்களா? இந்திய அணி உலகக்கோப்பையை முதல்முறையாக தன்வசமாக்குமா? பொறுத்திருந்திருந்து பார்ப்போம்!
– ச.ப.மதிவாணன்
Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions