ஒரு கலை இயக்குநரின் கலைஞர் படைப்புகள்! பேசாத மேடையிலும் பேசப்படும் கலைஞர்!!

0
ஒரு கலை இயக்குநரின் கலைஞர் படைப்புகள்! பேசாத மேடையிலும் பேசப்படும் கலைஞர்!!
சட்டமன்றப் பணிகளில் கலைஞருக்கு 60 ஆண்டு (1957-2017) என்றால், திரையுலகப் பயணத்தில் 70 ஆண்டு (1947-2017) நிறைவடைகிறது.
தமிழகத்தில் அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி வகித்த கலைஞரின் முத்திரைகள் காலத்தை வென்று நிலைக்கக்கூடியவை. சட்டமன்ற வைரவிழாவைப் பயன்படுத்தி, அந்த முத்திரைகளை மக்களின் மனதில் நினைவூட்டும் வகையில் தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடைகள் அமைக்கப்படுகின்றன.
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஜூலை 15 அன்று நொளம்பூரில் நடைபெற்ற வைரவிழா பொதுக்கூட்டத்தில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய மேடை, கலைஞர் உருவாக்கிய வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது. திருவாரூர் தேர், சென்னை வீதிகளில் வலம் வருவது போல அமைத்திருந்தார் கலை இயக்குநர் ஜி.கே.
கலைஞரின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களில் இவரது கைவண்ணம் தனித்துவமாக மிளிரும். ஒருமுறை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் கலைஞரின் திருக்குவளை வீடு போன்ற மேடையை தத்ரூபமாக அமைத்திருந்தார். அதில் பேசிய கலைஞர் தன் சிறுவயது நினைவுகளில் மூழ்கினார்.
இன்னொரு முறை, கலைஞரின் கோபாலபுரம் மாடி அறை போன்ற அமைப்பில் மேடை அமைத்திருந்தார் ஜி.கே. கலைஞர் அமர்ந்திருக்கும் இருக்கைக்குப் பின்னால் உள்ள புத்தக அலமாரியில் உள்ள நூல்களின் வரிசைகள்கூட மாறாதபடி, ஜி.கே. அமைத்திருப்பதை கலைஞர் உற்றுக் கவனித்துப் பாராட்டினார். தனது உதவியாளர் சண்முகநாதனை அழைப்பதற்காக ஒரு காலிங்பெல் பொத்தான் கலைஞரின் சிறுமேசையில் இருக்கும். அதுகூட மிஸ் ஆகாமல் ஜி.கே. அமைத்திருந்தார்.
தலைமைச்செயலகம், அண்ணா அறிவாலயம் எனக் கலைஞரின் பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடைகளை ஜி.கே. சிறப்பாக வடிவமைப்பதுடன் கலைஞரின் கலைத்திறன் முத்திரைகளாக விளங்கும் பூம்புகார் கலைக்கூடம், குமரிமுனை வள்ளுவர் சிலை, பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை போன்றவற்றையும் மேடை வடிவமைப்புகள் மூலம் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து அசத்துகிறார்.
திரையுலகில் 70 ஆண்டுகளாகப் பயணிக்கும் கலைஞரின் திரைக்கதை-வசனங்கள் தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்டவை. அவரது புரட்சிப் படைப்புகள் பாமர மக்களிடம் தமிழுணர்வை ஊட்டின. இலக்கியத் தரம் வாய்ந்த அவரது திரைப்படைப்புகளை முன்வைத்து ஜூலை 14 அன்று அண்ணா அறிவாலயத்தில் “திரையாண்ட கலைஞர்’ என்ற தலைப்பில் கட்டுரை ஆற்றினார் கவிஞர் வைரமுத்து.
திராவிட இயக்கப் படைப்பாளிகளைத் திட்டமிட்டு மறைக்க நினைக்கும் இலக்கிய மேதாவிகளுக்கிடையே கலைஞரின் திரை இலக்கியத்தை மிக அருமையாகவும் அழுத்தமாகவும் பதிவுசெய்தார் வைரமுத்து. அவரது பெயருடன் நிலைத்துவிட்ட “கவிப்பேரரசு’ என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர்தான் என முத்தாய்ப்பு வைத்தார் மு.க.ஸ்டாலின்.
அவர் பேசமுடியாமல் இருக்கிறார். ஆனால், அவரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அவர்தான் கலைஞர்.
-கீரன்
Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions