எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வுக்காக நான்தான் முதலில் குரல் கொடுத்தேன்

0
திமுகவில் அணிகள் பிரிவினை ஏற்பட்டபோது ஒருபக்கம் கூவத்தூருக்கும், மறுபக்கம் அடையாறு ஓ.பி.எஸ். இல்லத்திற்கும் ‘இரட்டை இலை’ எம்எல்ஏக்கள் பறந்து கொண்டிருந்தபோது, ’நான் எந்தப் பக்கம் போக வேண்டும்’என்று வாக்களித்தவர்களிடம் கருத்தாய்வு நடத்தியவர் நாகப்பட்டிணம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி. அதிமுக கூட்டணியில் இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தவர். மேலும் அதிமுக அரசுக்கு எதிராக வெளிநடப்பும் செய்தவர்.  அவரிடம், கூவத்தூர் 10 கோடி விவகாரம், எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வுக்கு எதிரான விமர்சனம், அதிமுகவில் நீடிப்பீர்களா என பல்வேறு கேள்விகளை நக்கீரன் இணையதளம் முன் வைத்தது.
சட்டமன்றத்தில் அமர்வது போலவே வெளியேயும் கருணாஸ், தனியரசு, நீங்கள் ஒன்றாக செயல்படுகிறீர்களே?
சட்டமன்றத்தில் 3 பேரும் ஒன்றாக அமரக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அருகருகே அமர்ந்ததால் நண்பர்களாகவும், புரிதல் உள்ளவர்களாகவும் மாறினோம். 3 பேரின் புரிதலும், நட்பும் 3 கட்சிகளின் தோழமையாக மாறியது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதுதான் நாம் 3 பேரும் இணைந்து குரல் கொடுத்தால் என்ன என்று யோசித்து மதுரையில் 3 பேரும் இணைந்து போராட்டத்தில் இறங்கினோம். இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதன் தொடர்ச்சியாகத்தான் மாட்டிறைச்சி விசயத்தில் மத்திய அரசுக்கு எதிரான கருத்தையும், மாநில அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் வெளிநடப்பும் செய்தோம். அதேபோல் பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க வேண்டும். 10 ஆண்டுகள் நிறைந்த ஆயுள் கைதிகளை விடுவிக்க வேண்டும். கதிராமங்கலம், நெடுவாசல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு விசயங்களில் ஒருமித்த கருத்துக்களோடு செயல்பட துவங்கினோம்.
எங்கள் 3 பேரின் கூட்டு அரசியல் என்பது பெரிய வரவேற்புக்குள்ளாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் நலம், தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்காக தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், தேவைப்பட்டால் நமது கருத்துக்களுக்கு ஒத்துழைக்கக்கூடிய மற்ற அமைப்புகளையும் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும் என்றும் முடிவு செய்திருக்கிறோம்.
மூன்று பேரும் ஒன்றாக இருந்தால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் இருபக்கமும் கூட்டணி பேச வசதியாகவும், மரியாதையாகவும் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? 
சோதனை ஓட்டம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. பிற்கால நிகழ்வுகளை எதிர்கால அரசியல் நடவடிக்கைகள்தான் தீர்மானிக்கும்.
பேரறிவாளன் பரோல் எந்த நிலையில் உள்ளது?
பேரறிவாளன் மற்றும் ஆயுள் கைதிகள் முன் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிமுக அமைச்சர்களிடத்திலும் இது குறித்து பேசினோம். பின்னர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர். ராமசாமி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரை சந்தித்தோம். இந்த சந்திப்பு பகிரங்கமானது. சட்டமன்றத்திலேயே அனைவரும் பார்க்கும்படியே இந்த சந்திப்பை நடத்தினோம். இதற்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதோடு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு வாக்களித்தேன். மற்ற இரண்டு பேரும் என் முடிவுக்கு வரும்போது, கோரிக்கைகளை கொடுங்கள் பரிசீலிக்கிறோம், எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அதிமுக தரப்பில் கேட்டனர். அதற்கு தனியரசும், கருணாசும் பேரறிவாளன் பரோல், ஆயுள் கைதிகள் முன் விடுதலைக்கும் உறுதியாக ஒப்புக்கொண்டு உத்திரவாதம் அளித்தால் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். அந்த அடிப்படையில் அவர்கள் வாக்களித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நாங்கள் 3 பேரும் சந்தித்துப் பேசினோம். விரைவில் இதுதொடர்பாக நல்ல செய்தி வரும் என்று முதலமைச்சரும் சொன்னார். அமைச்சர் சி.வி.சண்முகமும் வாக்கு கொடுத்துள்ளார். விரைவில் நல்லது நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு அளித்துள்ளார்கள். இது அவசியமா என விமர்சனம் எழுகிறதே?
ஊதிய உயர்வுக்காக இந்த 15வது சட்டமன்றத்தில் நான்தான் முதலில் குரல் கொடுத்தேன். காரணம். நாங்கள் கம்யூனிஸ்ட்டுகளைப் போல, கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுப்பவர்கள். தவறான வகைகளில் நாங்கள் பொருள் ஈட்டுவதை விரும்புவதில்லை.
நேர்மையான முறையில் எங்களது சம்பளம், நியாயமான தேவைகளுக்கேற்ப வாங்கப்பட வேண்டும் என்று வாதாடினோம். படி உள்பட மாதம் 55 ஆயிரம் ரூபாய் போதவில்லை. 3 ஊழியர்களை வைத்திருக்கிறேன். ஒரு ஓட்டுநர் வைத்திருக்கிறேன். இவர்களுடைய சம்பளமே ரூபாய் 50 ஆயிரத்தை தாண்டிவிடுகிறது. காருக்கு டீசல் போட மட்டுமே மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.
இந்த நிலையில் 55 ஆயிரம் ரூபாய் சம்பளம் எங்களுக்கு போதவில்லை. எனவே டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருப்பதைப்போல நியாயமான சம்பளத்தை தாருங்கள் என்று வாதிட்டேன். சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீ குவான் யு, நியாயமான ஊதியத்தை அரசியல்வாதிகளுக்கு கொடுத்தால்தான் ஊழலை தடுக்க முடியும் என்று சொன்னார் என்று சட்டமன்றத்தில் பதிவு செய்தேன்.
நாங்கள் நேர்மையாக இருக்கிறோம். எங்களுக்கு தேவைகள் இருக்கிறது. அதற்காக சம்பள உயர்வுக்காக குரல் கொடுத்தோம். எங்களைப்போன்ற நேர்மையான உறுப்பினர்களுக்கு இதுமிகப் பெரிய நெருக்கடியை தீர்க்க உதவுகிறது. வருமானம் உள்ள மற்றவர்களைப் பற்றி இதில் இணைத்துப் பேசுவதில் நியாயம் இல்லை. பொதுவாக நல்லோருக்கு பெய்த மழை எல்லோருக்கும் என்பார்கள். அதுபோல எங்களால் மற்றவர்களும் பயனடைகிறார்கள்.
பொதுமக்கள் எல்லோருக்கும் இது தேவைதானா என கேள்வி வைக்கிறார்கள். எங்களைப்போன்றவர்களுக்கு இதுதேவை. மற்றவர்களுக்கு இது தேவையா, தேவையில்லையா என்பதற்கு ஒரு வரம்புகளை ஏற்படுத்தலாம். மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டக்கூடியவர்களுக்கு இந்த சம்பவள உயர்வு பொருந்தாது என்று அவர்கள் முடிவு எடுக்கலாம். இது முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவு. ஆனால் எங்கள் நிலையில் இருந்து மிகவும் நியாயமானது என்றே பார்க்கிறோம். நெறி சார்ந்தவர்கள், கொள்கை சார்ந்தவர்கள் வழி தவறிவிடாமல் இருப்பதற்கு இதுபோன்ற ஊதிய உயர்வுகள் அவசியமாகிறது.
பொதுவாக அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் யோக்கியமில்லாதவர்களாக இருப்பதால்தான் இவர்களுக்கு எதற்கு சம்பள உயர்வு என்ற அதிருப்தி மக்களிடம் இருக்கிறது. ஆனால் எங்களைப்போன்றவர்கள் நிலையில் இருந்து இதனை பார்க்க வேண்டும்.
கதிராமங்கலம், நெடுவாசல் மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசி வருகிறேன். நெடுவாசல், கதிராமங்கலத்தில் நடக்கும் போராட்டத்தை மதித்து அந்த மக்களை அழைத்து முதல் அமைச்சர் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். சட்டமன்றத்திலேயும் பேசியிருக்கிறேன். அதேபோல கதிராமங்கலத்தில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி முதல் அமைச்சரிடமே வாதிட்டிருக்கிறேன். தமிழ் மக்களுடைய உணர்வுதான் எங்களுடைய உணர்வு.
நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுக்காக போராடியவர்களை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதே?
மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முதல் அமைச்சரிடமே நாங்கள் அதிருப்தியை வெளியிட்டோம்.
பாஜகவும், அதிமுகவும் நெருங்கியிருக்கும் நிலையில் அதிமுகவை தொடர்ந்து ஆதரிக்கும் மனநிலை உங்களிடம் உள்ளதா?
மத்திய அரசோடு தமிழக அரசு நெருக்கமாக இருப்பதை நான் விமர்சிக்க மாட்டேன். அது ஆரோக்கியமான அரசியல் அணுகுமுறை என்றுதான் சொல்வேன். அதே நேரம் அவர்கள் பாஜகவோடு ஆலாபனை பாடினால் அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் உறுதியாக வெளியேறுவோம். இப்போதைய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஆதரவு என்பது கூட, அதிமுக தொண்டர்கள்களின் அடிப்படை உணர்வுகளுக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மோடியா, லேடியா என்று சவால் விட்டார் ஜெயலலிதா. அதையெல்லாம் மறந்துவிட்டு பாஜகவோடு கைகோர்க்க நினைத்தால் அதிமுகவின் எதிர்காலம் பேராபத்தில்தான் போய் முடியும். பாஜக அரசியலை தமிழக மக்கள் எப்போதும் ஏற்பதில்லை என்பதுதான் உண்மை. இதனை எடப்பாடியார் மட்டுமல்ல, அதிமுகவின் மூன்று அணி தலைவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
 
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் குற்றம் சாட்டியுள்ளாரே? கமல் அரசியலுக்கு வருவது பற்றி?
கமலஹாசன் உள்பட யாரும் அரசியலுக்கு வரலாம். ஒரு கட்சியை தொடங்கி 10 ஆண்டுகாலம் பணி செய்துவிட்டு மக்கள் ஆதரவோடு, மக்கள் விருப்பம் இருந்தால் அவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமரலாம். ஜனநாயக நாட்டில் இதெல்லாம் நிகழக்கூடியவை. யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.
ஆனால் திரைத்துறையில் இருந்துதான் இனி தலைவர்கள் வரவேண்டும் என்ற ஒரு நிலை இனி தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது என்கிற கருத்து பரவலாக இருக்கிறது. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கமலஹாசன் கூறிய குற்றச்சாட்டுக்கள் எந்த அடிப்படையில் கூறியிருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை அவர்தான் வெளியிட வேண்டும். ஆதாரம் இருந்தால் அந்த குறைகளை தமிழக அமைச்சர்கள் சரி செய்ய வேண்டும்.
மாறாக கமலஹாசன் மீது தனிநபர் விமர்சனம் வைப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. இருதரப்பும் நாகரீகத்தையும், கன்னியத்தையும் தாண்டாமல் கருத்துக்களை பரிமாரிக்கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டில் ஆட்சி செய்பவர்களுக்கு எதிராக விமர்சனம் வைப்பது என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதையும் அமைச்சர்கள் மறந்துவிடக் கூடாது. அதே நேரத்தில் கண்மூடித்தனமான விமர்சனங்களை வைப்பதும் நியாயமில்லை என்பதையும் கமலஹாசன் போன்றவர்கள் உணர வேண்டும்.
அதிமுகவில் எந்த அணிக்கு செல்வது என்று தொகுதி மக்களிடம் கருத்து கேட்டீர்கள். பின்னர் சசிகலா அணியை ஆதரித்தீர்கள். உங்களிடம் கருத்து சொன்ன தொகுதி மக்கள் தற்போது என்ன நினைக்கிறார்கள்? 
தமிழ்நாட்டில் யாரும் செய்யாத ஒரு துணிச்சலான செயலை நான் எனது தொகுதியில் செய்தேன். மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அது வாக்கெடுப்பு அல்ல. கருத்தாய்வு மட்டுமே. அந்த கருதாய்வு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அதிமுகவின் சசிகலா தரப்பினரும், ஓ.பி.எஸ். தரப்பினரும் அங்கு மோதலில் ஈடுபட தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி. அலுவலத்தில் இருந்து சட்டம் ஒழுங்கு கெட்டால் நீங்கள்தான் பொறுப்பு என்று சொன்னதும், என்னுடைய கட்சி தலைமை நிர்வாகத்திடம் அந்த கருத்தாய்வை பாதியிலேயே நிறுத்திவிடுங்கள். சட்டம் ஒழுங்கு ஏற்படுவதற்கான நிலைமையை உருவாக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்த கருத்தாய்வை பாதியிலேயே நிறுத்திவிட்டோம்.
பின்னர் தொகுதி மக்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலமாக தன்னிலை விளக்கம் கொடுத்தோம். அதனை ஏற்றுக்கொண்டார்கள். என் நிலையை புரிந்து கொண்டார்கள். இப்போது தொகுதி மக்களின் ஆதரவோடு என்னுடைய கள பணிகளை ஆற்றி வருகிறேன்.
சசிகலா சிறையில் சொகுசாக இருப்பதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறைதுறை டிஐஜி ரூபா புகார் கூறியிருக்கிறாரே? 
இதுகுறித்து நீதி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவரை பொறுத்திருப்போம்.
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ சரவணன் தங்கியிருந்தபோது, கூட்டணி எம்எல்ஏக்களான 3 பேருக்கும் 10 கோடி ரூபாய் பேசப்பட்டிருப்பதாக சொல்வதுபோன்ற வீடியோ வெளியானது. மறுநாள் வீடியோவில் இருப்பது தான் இல்லை சரவணன் மறுத்தார். இருந்தாலும் மீடியாக்களில் வெளியான இந்த செய்தி மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டதே? 
உண்மையில் இது எங்களை பெரிய அளவில் மனதை காயப்படுத்தியுள்ளது. கற்புள்ள ஒரு பெண்ணை விபச்சாரி என்று சொன்னால் எப்படி கோபம் வருமோ, அப்படி ஒரு கோபமும், கொந்தளிப்பும் எங்களுக்கு ஏற்பட்டது.
அடிப்படையிலேயே ஒரு எள் முனையளவு கூட உண்மையற்ற, நியாயமற்ற ஒரு குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுக்கு நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை இழிவாகவும், கேவலமாகவும் கருதுகின்றோம்.
காயிதேமில்லத், காமராஜர், கக்கன் போன்றவர்களை, வாழும் காலத்தில் நல்லக்கண்ணு, நெடுமாறன் போன்றவர்களை நாங்கள் ரோல் மாடலாக பின்பற்றுகிறோம். எங்களை இதுபோன்ற சாக்கடை அரசியலோடு இணைத்து பேசுவதையே அவமானமாகவும், அசிங்கமாகவும் கருதுகிறோம். நான் அடிப்படையில் ஒரு இறை நம்பிக்கை உள்ளவன். மக்களை ஏமாற்றலாம், இறைவனை ஏமாற்ற முடியாது.
ஸ்டாலினோடு நெருக்கமாக இருப்பதாக பரவலாக கூறப்படுகிறதே?
சட்டமன்றத்தில் பதவியேற்கும்போது அதிமுக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். அவை வீடியோவில் கூட பதிவாகி உள்ளது. கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது என் கட்சியினருடன் சென்று பார்த்தேன். ஸ்டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்றபோது வாழ்த்து தெரிவித்தேன். அதே காலக்கட்டத்தில் ராமதாஸ், அன்புமணி, திருமாவளவன், சீமான், நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்தேன். என்னை பழிவாங்கிய ஜவாஹிருல்லாவையும் சந்தித்தேன்.
பொதுவாக ஒரு கூட்டணியில் இருந்தால் அடுத்த கூட்டணியில் இருப்பவர்களிடம், அந்த தலைமையிடமும் பேசுவதை ஒரு பாவமாக தமிழ்நாட்டில் கருதுகிறார்கள். அந்த பிற்போக்கு அரசியலுக்கு எதிரானவன் நான். கருத்து வேறுபாடுகளை தாண்டி, கூட்டணிகளைத் தாண்டி எல்லோரிடமும் நாகரீகமாக பழக வேண்டும் என்ற பண்பாட்டையும் மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கிறது.
வட இந்தியாவில் காலையில் எதிரும், புதிருமாக அறிக்கை விடுபவர்கள் மாலையில் பொதுநிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொள்வதை பார்க்கிறோம். பாராளுமன்ற வளாகத்திலும் இதனை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த நாகரீக அரசியலை மனிதநேய ஜனநாயக கட்சி மூலமாக தமிழ்நாட்டில் செயல்படுத்த விரும்புகிறோம். அதனாலேயே எங்கள் கூட்டணியை தாண்டி எல்லா தலைவர்களிடமும் நட்பு பாராட்டுகிறோம். சந்திக்கிறோம். சந்திப்பை வெளிப்படையாக பதிவு செய்கிறோம்.
ஜெயலலிதா இருந்தபோதே எதிர்க்கட்சியினரை சந்தித்தீர்களா?
ஜெயலலிதா இருந்தேபோதே இந்த சந்திப்பு வெளிப்படையாக நடந்தது. அப்போதே முகநூலில் பதிவு செய்திருக்கிறேன்.
முரசொலி பவள விழாவில் கலந்து கொள்வீர்களா?
ஸ்டாலின் நேரில் அழைத்தார். திமுக அழைப்பு விடுத்ததை அரசியல் பண்பாடாக பார்க்கிறோம். நாங்கள் அதிகாரப்பூர்வமாக எங்களது கட்சியின் வாழ்த்து செய்தியை தருகிறோம் என்று சொல்லியிருக்கிறோம். இதுபோன்ற அரசியல் பண்பாடுகள் ஊட்டி வளர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.
-வே.ராஜவேல்
Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions