ரகசியங்களை காக்க பாஸ்வேர்டை பலப்படுத்துங்கள்

0
ரகசியங்களை காக்க பாஸ்வேர்டை பலப்படுத்துங்கள்

 இணையவாசிகள் தாங்கள் உருவாக்க விரும்பும் பாஸ்வேர்டை தளத்தில் டைப் செய்தால், அது எந்த அளவு வலுவானது என்று உணர்த்தப்படுகிறது. இந்த வகை சேவை ஒன்றும் புதிதல்ல தான். பாஸ்வேர்டு வலுவானதா என்பதைக் கண்டறிந்து சொல்லும் இந்த வகைச் சேவை ‘பாஸ்வேர்டு மீட்டர்‘ எனக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கென தனியே இணைய தளங்களும் இருக்கின்றன. இவ்வளவு ஏன், கூகுள் உள்ளிட்ட இணைய சேவைகள் இது போன்ற பாஸ்வேர்டு மீட்டரைத் தங்கள் பாஸ்வேர்டு உருவாக்கப் பக்கத்திலேயே ஒருங்கிணைத்துள்ளன. புதிய பாஸ்வேர்டைத் தட்டச்சு செய்யும் போதே, அது எந்த அளவு வலுவானது என உணர்த்தப்படுகின்றன.

உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானது, அதை மேலும் வலுவாக்க முயற்சி செய்யுங்கள் எனும் செய்தியைத் தெரிவிப்பதே பாஸ்வேர்டு மீட்டரின் நோக்கம். ஆனால் இந்த மீட்டர்கள் எல்லாவற்றுக்குமே ஒரு பொதுவான பலவீனம் உண்டு. இவை பாஸ்வேர்டுகள் பலவீனமானவை என்று சொல்கின்றனவே தவிர, வலுவான பாஸ்வேர்டுகளை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவதில்லை.

ஒரு பாஸ்வேர்டை உருவாக்கும் போது அது, வலுவானதா என சோதித்துப் பார்ப்பது நல்லதுதான். ஆனால் அது நோஞ்சான் பாஸ்வேர்டு என்று தெரிந்தால், பயில்வான் பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி என்று தெரிய வேண்டும் அல்லவா? இந்தக் குறையைப் போக்கும் வகையில் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கிய புதிய பாஸ்வேர்டு மீட்டர் சேவை அமைந்துள்ளது. இந்தச் சேவை, புதிய பாஸ்வேர்டு வலுவானதா என்பதை உணர்த்துவதோடு, அதற்கான காரணங்களையும் புரிய வைக்கிறது. அதோடு பாஸ்வேர்டை வலுவாக்குவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது.

இந்தச் சேவையின் இணைய பக்கத்தில், பாஸ்வேர்டு உருவாக்கத்திற்கான மாதிரி அமைப்பு கொடுக்கப்பட்டுஉள்ளது. அதில் பயனர் பெயரைக் குறிப்பிட்டுவிட்டு பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். பாஸ்வேர்டு எழுத்துக்களை அடித்துக்கொண்டிருக்கும் போதே, அவற்றின் பாதுகாப்புத் தன்மையை உணர்த்துவதோடு, அதற்கான காரணங்களையும் தெரிவிக்கிறது.

உதாரணத்திற்கு வழக்கத்தில் உள்ள வார்த்தைகளைக் குறிக்கக் கூடிய எழுத்துக்கள் எனில் அதைச் சுட்டிக்காட்டி, பொதுவான பதங்கள் அல்லது அகராதி வார்த்தைகள் ஹேக்கர்களால் எளிதில் ஊகித்துவிடக்கூடியவை என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக என்று அருகே தனியே ஒரு பெட்டி தோன்றுகிறது. அதில் கிளிக் செய்தால் பாஸ்வேர்டு தொடர்பான மதிப்பீட்டைத் தெரிந்துகொள்ளலாம்.

பாஸ்வேர்டின் பலவீனம் வண்ணத்தில் உணர்த்தப்படுகிறது. முழுவதும் வலுவான பாஸ்வேர்டு உருவாக்கப்படும் வரை இந்த வண்ண எச்சரிக்கை தொடர்கிறது. ஆக, இந்தச் சேவை மூலம் ஒருவர்தான் உருவாக்கும் பாஸ்வேர்டு வலுவானதா என தெரிந்துகொள்வதோடு, அது ஏன் வலுவானதாக அமையவில்லை என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இவற்றைப் புரிந்துகொண்ட பின், வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான வழிகளையும் தெரிந்துகொள்ளலாம்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions