துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்..

0

இஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை இறையருளால் நாம் அடையவுள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புனித மாதங்களில் இந்த துல்ஹஜ் மாதமும் ஒன்றாகும்.

வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89:1,2)
மேலே உள்ள வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் பத்து இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களையே குறிக்கும் .

ஹஜ்ஜின் நாட்கள்
**********************

ஹஜ் மற்றும் அதன் கிரியைகளுக்கான காலகட்டம் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களிலேயே அடங்கியுள்ளது. இன்னும் உம்ரா, அரஃபா தின நோன்பு, பெருநாள் தொழுகை, குர்பானி போன்ற நல்லறங்களும் அல்லாஹ்வின் கிருபையால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களிலும் அதைத் தொடர்ந்து அய்யாமுத்தஷ்ரீக் நாட்களிலும் அனுகூலமாயிருப்பதை உணரலாம்.

துதியுங்கள்
**************

‘…அந்த நாட்களில் ‘லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் ஆகியவற்றை அதிகமாக கூறுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: தப்ரானி)

அனைத்திலும் சிறந்தது
****************************

(துல்ஹஜ் மாதத்தின்) ‘பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்’; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்(அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத் தவிர’ என்று விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதீ

அரபா தின நோன்பு
************************

ஹஜ்ஜின் முக்கிய கிரியைகளில் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும்.“அல்லாஹ் தனது அடியார்களை நரகிலிருந்து அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும்.இதைவிட வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. இந்நாளில் அல்லாஹ் இறங்கி வந்து எனது அடியார்கள் என்ன விரும்புகிறார்கள்? ( கேட்பதைக் கொடுப்பதற்கு சித்தமாக உள்ளேன்.) என மலக்குகளிடம் பெருமையோடு கூறிக்கொள்வான்” என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்நாளில் ஹஜ்ஜுக்கு செல்லாத மற்ற உலக முஸ்லிம்களுக்கு அரஃபா தின நோன்பு மிகவும் வலியுறுத்தப்பட்டதாகும்.

ஏனெனில், ‘அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பதன் மூலம் ஒருவருடைய கடந்த ஒருவருட கால (சிறிய) பாவங்களும் அடுத்து வரும் ஒருவருட கால (சிறிய) பாவங்களும் மன்னிக்கப்படும் என நான் கருதுகின்றேன்’ எனநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)

நகம், முடி களைதல் கூடாது:
*********************************

குர்பானி கொடுக்க வேண்டும் என்று எவர் நாடுகிறாறோ அவர் துல்ஹஜ் பிறை ஒன்றிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை பத்து நாட்களுக்கு நகங்கள், முடிகளை களையக்கூடாது.

உங்களில் யாரேனும் குர்பானி கொடுக்க விரும்பினால் அவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து (அறுத்து முடியும்வரை பத்து நாட்களுக்குத்) தன் நகங்களையும் முடிகளையும் களையாதிருக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.  அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) நூல்:முஸ்லிம் .

இன்ஷா அல்லாஹ் சிறப்புமிக்க துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து இரவுகளை நன்மையான் காரியங்கள் மூலம் பயனுள்ள முறையில் கழிப்போம். இன்ஷா அல்லாஹ் …

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*