மறுபிறவி!

0

எனக்கும், வாணிக்கும் நிச்சயதார்த்தம் நடந்த பின் நிகழ்ந்த சந்திப்புகளில், நான் அதை அவ்வளவாக கவனித்ததில்லை.

திருமணம் முடிந்து, தேனிலவுக்காக, ஏற்காடு போயிருந்த போது தான், ஓட்டல் அறையின், எல்.ஈ.டி., பல்ப் வெளிச்சத்தில், அவள் கழுத்தில் மின்னிய அந்த மெல்லிய தங்கச் சங்கிலி, என் கண்ணில் பட்டது.

நான், கிரிதர்; வயது, 27. சென்னையில் உள்ள பிரபல ஐ.டி., நிறுவனத்தில் வேலை. பெற்றோருக்கு ஒரே மகன். வாணியும், ஒரு ஐ.டி., நிறுவனத்தில், ஹெச்.ஆர்., அலுவலராக பணிபுரிகிறாள்; வீட்டிற்கு ஒரே பெண்.

என் எதிரே புன்னகையுடன் நைட்டியில் வந்தமர்ந்த அவள், என் வாலிப கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள். அருகே இழுத்து அணைத்த போது தான், அந்த தங்கச் சங்கிலியை மிக அருகில் பார்த்தேன்; நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தது. அதை, என் விரல்களால் தடவியபோது, வாணியின் உடல் சட்டென்று சிலிர்த்து, ‘என்ன கிரிதர்…’ என்றாள், சிணுங்கலோடு!
‘இந்தச் செயின் உன் கழுத்திற்கு மிக அழகாக இருக்கிறது…’ என்றதும், ‘தாங்க்யூ…’ என்று புன்னகைத்து, என்னை அணைத்துக் கொண்டாள்.

இந்நிகழ்ச்சிக்குப் பின், நான் வாணியை கவனித்த வரையில், தாலிக்கொடியைக் கூட கழற்றி வைத்து, திரும்ப அணிந்து கொள்பவள், அச்சங்கிலியை மட்டும் எந்த சூழலிலும் கழற்றியதில்லை.

ஒருமுறை வியப்புடன், ‘நீ ஏன் இந்த செயினை கழற்றுவதே இல்ல…’ என்று கேட்டேன்.
அவளின், டிரேட் மார்க் புன்னகையுடன், ‘நீங்க தானே சொன்னீங்க… இது, என் கழுத்திற்கு மிகவும் அழகாக இருக்குதுன்னு! அதனால் தான்…’ என்றாள், செயினை மெல்ல வருடியபடி!
‘இது எப்போது வாங்கியது…’ என்றேன்.

பதில் சொல்லாமல் ஏதோ சிந்தனை வயப்பட்டவளாக இருக்கவும், திரும்பவும், ‘எப்போ, யார் வாங்கிக் கொடுத்தது?’ என்று கேட்டேன்.

‘இது, என் அம்மா என் பதினெட்டாவது பிறந்தநாளுக்கு அளித்த பரிசு…’ என்றாள்.
ஒரு மாதத்திற்கு பின், நாங்கள் இருவரும், மூன்று நாள் சுற்றுலாவாக பெங்களூரு சென்றிருந்தோம்.

அன்று, மைசூர் பேலசை பார்த்து திரும்புகையில், வாணியின் சங்கிலியை காணவில்லை. அவள் முகமே, பேயறைந்தது போல் ஆகிவிட்டது.

‘என்ன வாணி… என்ன ஆச்சு…’ என்றேன்; சங்கிலி காணாமல் போனது தெரியாமல்!
‘என் சங்கிலிய காணல…’ என்றாள், குரல் நடுங்க

‘என்னது…’ என்று திடுக்கிட்டு, ‘எங்கே விழுந்திருக்கும்…’ என்றேன்.
‘காரிலிருந்து இறங்கி, உள்ளே போகும் போது கூட இருந்ததே…’ என்றாள் வாணி.
‘சரி… வழியில எங்காவது விழுந்திருக்கும்…’ என்றதும், அப்படியே தரையில் அமர்ந்து, விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.
ஒரு நொடி, என்ன செய்வது என்று தெரியவில்லை; அங்கிருந்த சுற்றுலா பயணிகள் என்னையும், வாணியையும் வேடிக்கை பார்க்கத் துவங்கினர்.
சிலர், ‘என்னங்க… என்ன ஆச்சு… உடம்புக்கு முடியலயா…’ என்று கேட்டனர்.
ஒரு சில பெண்கள், வாணியின் அருகே அமர்ந்து, அவளை ஆசுவாசப்படுத்த முற்பட்டனர்.
போயும் போயும் அந்த மெல்லிய சங்கிலிக்கு, வாணி இப்படி பொது இடத்தில், அழுது ஊரைக் கூட்டியது, எரிச்சலை ஏற்படுத்தியது.
அவள் தோளை பிடித்து தூக்கி, ‘ஷ்… கன்ட்ரோல் யுவர்செல்ப்… வா தேடிப் பாக்கலாம்…’ என்று எழுப்பினேன்.
நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் தேடினோம்.
எங்கும் காணவில்லை; வாணியின் அழுகையும் நிற்கவில்லை.
ஏமாற்றத்துடன் திரும்பும் போது, ‘சரி விடு… போனால் போகட்டும்; அதைவிட, வேறு அழகான செயின் வாங்கலாம்…’ என்றேன்.
என் முகத்தை பார்க்காமல், ‘எனக்கு அந்தச் செயின் தான் வேணும்…’ என்றாள், குரலில் உறுதியுடன்!
‘அது எப்படி சாத்தியமாகும்…’ என்றேன்.
‘அந்த செயின் என்னை விட்டுப் பிரியாது; என்னுடன் தான் இருக்கும். எப்படியாவது அதை தேடிக் கண்டுபிடிக்கணும்…’ என்றாள்.
அவள் பேச்சு, எனக்கு விசித்திரமாக இருந்தது.
‘பிரியாதா…’ என்றேன்.
‘ஆமாம்… பிரியாது; பிரியக் கூடாது. அது, நிச்சயமாக கிடைக்கும்; கிடைக்கணும்…’ என்றாள்.
அவள் முகம் காட்டிய தீவிரம், எனக்கு புதிது என்பதால், பதில் பேசவில்லை.
மவுனமாக காருக்கு திரும்பினோம்.
கார் கதவை திறந்த வாணி, திடீரென்று சத்தமாக, ‘கிரி… செயின் இங்கே இருக்கு…’ என்றாள்.
அவள் உட்கார்ந்திருந்த இடத்தில், கிடந்தது, அந்த சங்கிலி.
‘என்ன… என்ன ஆச்சு…’ என்றார், டிரைவர்.
அவருக்கு விஷயத்தை நான் விளக்கும் போது, எப்படி அறுந்து போய் இருக்கும் என்ற ஆராய்ச்சியில், அச்சங்கிலியை, கையில் எடுத்து திருப்பித் திருப்பி ஆராய்ந்தாள், வாணி.
அவள் முகத்தில், பழைய களையை பார்த்த பின்தான், எனக்கு அமைதி ஏற்பட்டது.
பயணம் தொடர்கையில், சற்றுக் கேலியாக, ‘அந்தச் செயின் மீது உனக்கு என்ன அத்தனை பாசம்…’ என்றேன்.
‘அது, எனக்கு ஸ்பெஷல்; அதை உங்களுக்கு புரிய வைக்க முடியாது…’ என்றாள்.
நானும் விடாமல், ‘உங்கம்மா கொடுத்த பரிசுன்னு தானே சொன்னே… உங்கம்மா உனக்கு இதை விட இன்னும் எத்தனையோ பரிசுகள கொடுத்திருப்பாங்களே…’ என்றேன்.
‘இருக்கலாம்… இருந்தாலும் இது எனக்கு ஸ்பெஷல்…’ என்றாள்.
அப்போதும், அவள் குரலில், உறுதி தெரிந்தது.
மறுநாளே, பெங்களூரில் ஒரு நகைக்கடைக்கு சென்று, அறுந்த பகுதியை ஒட்ட வைத்து, மறுபடி, அந்தச் சங்கிலியை அணிந்த பின் தான், அவள் முகமும், நடவடிக்கையும் பழைய நிலைக்கு திரும்பியது.
பெண்கள் நகை மீது ஆவல் கொண்டவர்கள் என்பதும், அவைகள் மீது அசாத்திய பிரியம் வைத்திருப்பர் என்பதும், எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும், வாணி இந்த அற்பமான, சிறு சங்கிலியின் மீது வைத்திருந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு ஆச்சரியப்படுத்தியது.
நாங்கள் சென்னைக்கு திரும்பி இரண்டு நாட்களுக்கு பின், ஒரு நாள் காலையில், வாணியின் அம்மா தொலைபேசியில் அழைத்தார். வாணி குளித்துக் கொண்டிருந்ததால், நான் எடுத்துப் பேசினேன்.
பெங்களூர் பயணம் பற்றி கேட்ட போது, வாணியின் சங்கிலி தொலைந்ததையும், தொடர்ந்து அவள் நடந்து கொண்ட முறை பற்றி, கேலியாக விவரித்து, ‘நீங்க கொடுத்த, ‘கிப்ட்’ன்னு சொல்லி, அப்படி அழுது, அமர்க்களம் செய்துட்டாள்…’ என்றேன்.
‘நான் கொடுத்ததா…’ என்று, சட்டென்று கேட்டவரிடம், ‘என்ன ஆன்ட்டி… நீங்க கொடுத்த பரிசுன்னு அவ கழுத்தை விட்டே கழற்றதே இல்லயே…’ என்றேன்.
ஒரு வினாடி மவுனமாக இருந்தவர், ‘அவ, இப்படித்தான் சில விஷயங்கள்ல ரொம்ப சென்டிமென்டல்…’ என்று சொல்லி, ‘அவள் வந்ததும் பேசச் சொல்லுங்க மாப்பிள்ள…’ என்று, இணைப்பை துண்டித்து விட்டார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
வாணி அந்த செயினுக்கு தரும் தனி அந்தஸ்தை, இவர் எப்படி தெரிந்து கொள்ளாமல் இருந்தார் என்ற கேள்வி, மனதில் எழுந்தது.
குளியல் அறையில் இருந்து வந்தவளிடம், ‘உங்கம்மா உன்னிடம் பேசணும்… கால் செய்ய சொன்னாங்க…’ என்று சொல்லி, அடுத்த அறைக்கு சென்று விட்டேன்.
அவள் தன் தாயிடம் போனில் பேசுவது எனக்கு கேட்டது.
‘ஆமாம்… அதனால் என்ன… தெரியும்; நான் பாத்துக்கறேன். சமயம் வரும்போது எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியும்… நீ வீணா கவலைப்படாதே…’ மிக சன்னமான குரலில் தான் பேசினாள். எனினும், இது சங்கிலி தொடர்பான சமாசாரம் என்பதை, என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன், இந்த சங்கிலிக்குப் பின் ஏதோவொரு விஷயம் இருக்கிறது. அதை என்னிடம் மறைத்துள்ளனர்.
வாணி என்னிடம் பொய் சொல்லி இருக்கிறாள்; அது அவள் அம்மா பரிசளித்த சங்கிலி அல்ல என்பதும், மைசூரில் அந்தச் சங்கிலி தொலைந்த போது, பேசிய வார்த்தைகள், நினைவுக்கு வர, என் மனதில் சந்தேகம் பல கிளைகளை விரிக்கத் துவங்கியது.
இதற்குப் பின், என் பார்வை வாணியின் மீது விழும் போதெல்லாம், ஏதோவோர் உறுத்தல் தோன்றியது.
இதோ, எங்கள் திருமணம் முடிந்து, ஓராண்டாக, இன்னும் இரண்டு மாதங்களே இருந்தன.
இரவு, திடீரென்று கண் விழித்த போது, என் அருகில், வாணியை காணவில்லை.
சுற்றுமுற்றும் பார்த்தேன்; எழுந்து சென்று பார்வையை சுழற்றிய போது, படுக்கையறையை ஒட்டியிருந்த பால்கனியின் கதவு, லேசாக திறந்திருப்பது தெரிந்தது.
ஓசைப்படாமல், அக்கதவை திறந்தேன்.
பால்கனியில் வாணி நின்றிருப்பது நிழலாக தெரிந்தது. இருட்டில் விளக்குகள் ஜொலிக்கும் சென்னையின் அழகை ரசிப்பது போல் தோன்றினாலும், அவள் கைகள், கழுத்தில் இருந்த சங்கிலியை நெருட, தோள்கள் குலுங்குவதும், மெலிதான விசும்பல் ஒலியும், என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நிச்சயமாக, இது அம்மாவின் அன்பளிப்பு இல்லை. சட்டென்று ஏதோ உணர்வில் திரும்பினாள் வாணி. நான், இருளில் நிற்பதை, அவள் உள்ளுணர்வு எச்சரித்திருக்க வேண்டும். அவள் முகத்தில் என்ன உணர்ச்சி ஓடியது என்பதை, என்னால் ஊகிக்க முடியவில்லை.
ஆனால், என்னால் ஒரே ஒரு விஷயத்தை ஊகிக்க முடிந்தது. இது, நிச்சயம் காதல் சம்பந்தப்பட்ட விஷயம் தான்!
இதை, நான், இனி எப்படி கையாளப் போகிறேன்…
நான் முன்னே சென்று, வாணியின் தோள்களைப் பற்றி, அழைத்து வந்தேன். இருவருமே ஒன்றும் பேசவில்லை. படுக்கையறைக்குள் வந்து, அவளை படுக்கையில் உட்கார வைத்து, விளக்கை போட்டேன்.
அவள் முகம், அந்த வெளிச்சத்தில், மிதமிஞ்சிய சோகத்தில் ஆழ்ந்திருப்பதை, கண்களிலிருந்து வழிந்திருந்த கண்ணீர் கோடுகள் தெரிவித்தது.
உள்ளே சென்று, டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து அவளிடம் நீட்டினேன்.
என்னை ஏறிட்டுப் பார்த்தவள், தண்ணீரை வாங்கி பருகினாள்.
எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து, ”சொல்லு வாணி… உன் துக்கத்திற்கு என்ன காரணம்… நானா?” என்றேன்.
”இல்ல…” என்று தலையசைத்தாள்.
”சங்கிலி… காதல்…”
என் முகத்தை ஒருமுறை பார்த்து, தலையை குனிந்தாள்.
”சொல்லு வாணி… உன் வருத்தமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும், இப்போது, எனக்கு அதில் பங்கு உண்டு,” என்றேன்.
”நான் சொல்லப் போவதை எப்படி வேணும்ன்னாலும் எடுத்துக்க, உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இனி மேலும் நான் சொல்லாமல் இருந்தால்,
அது, நான் உங்களுக்குச் செய்யும் துரோகம்,” என்றாள் வாணி.
நான் பதில் சொல்லவில்லை.
”என்னுடன் வேலை பார்த்த கார்த்திக் என்பவருடன் எனக்கு நட்பு இருந்தது; அது, நாளடைவில் காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம். அவன், என் பிறந்தநாளுக்கு அளித்த பரிசு தான், இந்த செயின். உண்மையில், இது அவன் கழுத்தில் அணிந்திருந்த செயின். நான், என் பிறந்தநாள் என்று பேச்சுவாக்கில் சொன்னபோது, சட்டென்று, தன் கழுத்தில் இருந்த இந்தச் செயினைக் கழற்றி, என் கழுத்தில் போட்டு வாழ்த்தினான்… அன்றிலிருந்து ஆரம்பித்தது தான் எங்கள் காதல்…” திடீரென அவள் பேச்சு தடைப்பட்டது.
”பின் ஏன் கல்யாணம் செய்துக்கல… ஜாதிப் பிரச்னையா?” என்றேன்.
”இல்ல…”
”பெற்றோர் சம்மதிக்கலயா?”
”அதுவரை போகல…” மீண்டும் அவள் குரல் அழுகையில் கரைந்தது.
”எனக்கு புரியல…”
இலக்கில்லாமல் வெறித்துப் பார்த்தவள் பின், ”கார்த்திக் என் வீட்டிற்கு வந்து பேசுவதாக சொல்லி இருந்தான்; ஆனால், அன்று நடந்த சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்,” என்று கூறி, கண்ணீர் விட்டாள்.
”இச்சம்பவம் நடந்த ஒரு மாதத்தில், எனக்கு கல்யாணம் பற்றிப் பேச ஆரம்பித்தனர், என் பெற்றோர். முதல்ல மறுக்கலாமான்னு தான் நினைச்சேன். காரணம் கேட்பாங்க; உண்மையைச் சொல்லணும். அதனால, என்ன பலன் கிடைக்கப் போகுது. என் பெற்றோர் மனசு தான் துயரப்படும். வெறும் கனவாகி போன என் காதலை நினைத்து, அவங்கள வேதனைப்படுத்துவதன் மூலம், எனக்கு கிடைக்கப் போவது மேலும் சோகம் தான். அதனால தான், கல்யாணத்திற்கு சம்மதிச்சேன்,” என்றாள்.
அதிர்ச்சியில், உறைந்து போய், சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.
பின், வாணியிடம், ”நீ கார்த்திக்கிடம் பார்த்த நல்ல குணங்கள் என்கிட்ட இருக்கிறதா, இல்லயான்னு தயங்காமல் சொல்லு,” என்றேன்.
கண்ணீருடன், ”உங்களிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கு; என்னால் உங்களிடம் எந்தக் குறையையும் காண முடியல. ஆனா…”
”ஆனால்…”
”அவன என்னால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியல; இன்றைக்கு நான் உடைந்து போனதற்கு காரணம் இருக்கிறது…” என்று, மீண்டும் கண்ணீர் சிந்தினாள்.
”எனக்குத் தெரியும்; இன்று, அவன் இறந்த நாள்… அப்படித்தானே…” என்றேன்.
அவள் மவுனமாக கண்ணீரை உகுத்தாள்.
அவள் கண்ணீரை துடைத்து, ”அழாதே… நான் சொல்வதை கேட்பாயா…” என்றேன்.
கலங்கிய கண்களுடன், என்னை பார்த்தாள்…
”அந்தச் செயினை, உன் கழுத்தில் இருந்து கழற்று,” என்றேன்.
அவள் முகத்தில், அதிர்ச்சி தெரிந்தது.
”தயவுசெய்து, நான் சொன்னபடி செய்,” என்றேன் உறுதியாக!
தயக்கத்துடன், அச்சங்கிலியை கழற்றினாள்.
நான், அவள் முன் தலையை குனிந்து, ”என் கழுத்தில் அந்தச் செயினைப் போடு,” என்றேன்.
வாணியின் முகத்தில் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஒன்றாக தோன்றின.
”சொன்னதை செய்.”
அவள் மெதுவாக, அந்தச் செயினை, என் கழுத்தில் அணிவித்தாள்.
”உன் கார்த்திக், என் மூலமாக, மறுபிறவி எடுத்துட்டான்; இனி, நமக்குள் பிரிவில்லை,” என்றபடி, வாணியை அணைத்தேன்.

தேவவிரதன்

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions