3-வது ஒருநாள் கிரிக்கெட்: ரோகித் சர்மா, தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா

0
3-வது ஒருநாள் கிரிக்கெட்: ரோகித் சர்மா, தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா இலங்கையுடனான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, தோனி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா போட்டியை வென்றதுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் தொடங்கியது. மெதுவாக பந்து வீசியதன் காரணமாக இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தரங்காவிற்குப் பதிலாக கபுகேதரா இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

இலங்கை அணி கேப்டன் கபுகேதரா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். டிக்வெல்லா, சண்டிமல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டிக்வெல்லா 13 ரன்கள் எடுத்த நிலையில் பும்ப்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிசை 1 ரன்னில் வெளியேற்றினார் பும்ப்ரா. 3-வது விக்கெட்டுக்கு சண்டிமல் உடன் திரிமன்னே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய திரிமன்னே 80 ரன்கள் எடுத்த நிலையில் பும்ப்ரா பந்தில் ஆட்டம் இழந்தார். பும்ப்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச இலங்கை அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி சார்பில் பும்ப்ரா 10 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 218 ரன்களை இலக்காகக் கொண்டு இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். முதலில் சிறப்பாக பந்துவீசிய இலங்கை அணியினர் ஷிகர் தவானை வெளியேறினர். அதன்பின் வந்த விராட் கோலியையும் அவுட்டாக்கினர். அப்போது இந்திய அணி 19 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. ஒருபுறம் ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 17 ரன்னுக்கும், கேதார் ஜாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். அப்போது இந்திய அணி 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த தோனி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர். ரோகித் சர்மா சதமடித்தும், தோனி அரை சதமடித்தும் அசத்தினர். இந்திய அணி 44 ஒவர்களில் 210 ரன்கள் எடுத்தபோது, இலங்கை ரசிகர்கள் பொருட்களை தூக்கி வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதன்பின், இந்திய அணி களமிறங்கி 45.1 ஒவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 2 சிக்சர்கள், 16 பவுண்டரிகளுடன் 124 ரன்னுடனும், தோனி 1 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்னுடனும் களத்தில் நின்று வெற்றியை தேடி தந்தனர். இந்த ஜோடி 150 ரன்களுக்கு மேல் சேர்த்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி தரப்பில் அகிலா தனஞ்செயன் 2 விக்கெட்டுகளும், மலிங்கா மற்றும் பெர்னாண்டோ தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்

இதையடுத்து இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது போட்டியை வென்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions