ஆளை விழுங்கும் ஆபாச அலை

0

செல்போனை பலரும் பலவிதமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சிலர் எந்நேரமும் அதில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பலர், எப்போதும் அதில் எதையாவது பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நவீன தகவல்தொடர்பின் உச்சம், செல்போன்கள். நினைத்த நேரத்தில் நினைத்தவருடன் பேச இந்த கையடக்க உபகரணம் காரணமாக இருக்கிறது. ஆனால் பலர் நினைத்த நேரத்தில் இதில் பல விஷமங்களை செய்து எதிர் விளைவுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது நாம் பேசுவது ஆபாச படங்களை பற்றி! முன்பெல்லாம் அந்த வகை படங்களைப் பார்க்க ஆசைப்படும் இளசுகள், பெரிசுகள், ஊருக்கு வெளியே ஒதுங்கிக் கிடக்கும் ஓய்ந்துபோன திரையரங்குக்கு பயந்து பதுங்கிப் போவார்கள். இன்றோ ஆபாசப் படங்கள் செல்போன் வாயிலாக உள்ளங்கைக்கு வந்துவிட்டன. விரும்பினால் இணையதளம் மூலம் செல்போனில் ஆபாச படங்களை அள்ளி எடுத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போதெல்லாம் தனிமையில் இருந்தும் அவைகளை கண்டுங்களிக்கலாம்.

இப்போது பெரும்பாலானவர்கள் கைகளில் நவீன செல்போன் தவழ்கிறது. இதுதான் ஆபாச அலை உருவாக அடிப்படை காரணம். ஆபாசக் காட்சிகளுக்கு டி.வி.யோ, லேப்டாப்போ தேவையில்லை. யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயமில்லை. கிடைத்த நேரத்தில் சில நொடிகளில் சாதாரணமாய் செல்போன் நம்பர் தேடுவதைப் போலவே பார்த்துவிட முடியும் நிலை உருவாகியிருக்கிறது.

மக்களின் இத்தகைய ஆசைகளை புரிந்துகொண்டு அனேக ‘சப்ளையர்களும்’ உருவாகிவிட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேவையறிந்து அவர்கள் ‘டேஸ்ட்’டுக்கு ஏற்ப ‘சேவை’ செய்கிறார்கள்.

செல்போன் சர்வீஸ் செய்யும் ஒருவர் சொல்கிறார்:
“மக்களின் ரசனை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. முன்பு பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு ஆபாசப் படங்களை விரும்பினார்கள். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. அதில் இடம்பெறுகிறவர்கள் இயந்திரதனமாய் இயங்குவதாகவும், பார்த்து ரசிக்க அதில் கவர்ச்சி எதுவும் இல்லை என்றும் சொல்கிறார்கள். மாறாக, ‘மார்பிங்’ செய்யப்பட்ட பிர பலங்களின் செக்ஸ் படங்கள், தென்னிந்தியப் படங்களை விரும்பிப்பார்க்கிறார்கள்” என்கிறார்.

திருவனந்தபுரம், பெங்களூரு பகுதிகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று அதிர வைக்கிறது. செல்போன் வைத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் 32 சதவீதம் பேர் தினமும் ஆபாச படம் பார்க் கிறார்களாம். அதற்காக அவர் கள் புத்தகங்களைவிட செல்போனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம். இந்த நிலை நீடிப்பதால் இவர்களைவைத்து பணம் சம்பாதிப்போர் எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்துகொண்டிருக்கிறது.

திருவனந்தபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கூறுகிறார், “எங்கள் தேவைகளை ஈடுசெய்ய சில கடைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் 50 ரூபாய் கொடுத்தால் ஆபாசப் படம் ஏற்றிய மெமரி கார்டை கொடுப்பார்கள். அதை பார்த்து முடித்ததும், அதை கொடுத்துவிட்டு மீண்டும் ஐம்பது ரூபாய் கொடுத்து இன்னொன்றை பெற்றுக்கொள்ளலாம். இது சங்கிலித்தொடர் நிகழ்வு” என்று தயக்கமின்றி சொல்கிறார்.

படிக்கிற வயதில் மாணவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்து கவனம் சிதைந்து போகிறார்கள் என்றால், அவர்களுக்குக் கிடைக்கும் ‘பாக்கெட் மணி’யும் இப்படிக் கரைந்து போகிறது. இதற்கு அடிமையானவர்கள், அடுத்து வீட்டிலேயே பணத்தை எடுக்கிறார்கள்.

இந்த ஆபாச மார்க்கெட்டை தக்கவைப்பதற்காகவே அவ்வப்போது சில சூடான காட்சிகளை சிலர் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சட்டசபையிலேயே செல்போனில் ஆபாசப் படம் பார்த்ததற்காக கர்நாடக மாநிலத்தில் மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்தார்கள். அவர்கள் பார்த்தது, அப்போது ‘ஹிட்’டாக இருந்த ‘பசிலா’ என்ற ஆபாசப் படத்தை. பொதுவாக, இயல்பாக படமாக்கப்படும் உள்ளூர் சரக்குக்கு அதிக மதிப்பிருக்கிறது.

மக்கள் நெருக்கம் நிறைந்த மும்பை போன்ற பெருநகரங்களில் மூலைக்கு மூலை ஆபாசப் படம் வழங்கும் ‘சேவை’ நடக்கிறது. அந்த மாதிரியான நபர்களில் ஒருவர், 4 ஜி.பி. மெமரி கார்டுக்கு 150 ரூபாய் கேட்கிறார். இது வழக்கமான படம் அல்ல. வித்தியாசமானது என்று விளக்கமும் அளிக் கிறார். 16 ஜி.பி. என்றால் 300 ரூபாய். இவருக்கு சில பெண் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.

செல்போன் சர்வீஸ் சென்டர்கள், ‘டாப் அப்’ கடைகள் பலவும் கறுப்பான மறுபக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் யாரும் இந்தக் கடைகளுக்கு நேரே சென்று, கிளுகிளு காட்சிகள் கிடைக்குமா என்று கேட்டுவிட முடியாது. உடனடியாகப் பின்வாங்கி விடுவார்கள் அல்லது தாங்கள் அப்படிப்பட்ட காட்சிகளை அளிப்பதில்லை என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்துவிடுவார்கள். அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்போதாவது நடக்கும் போலீஸ் ரெய்டுதான் காரணம்.

வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அல்லது அவர்களுடன் செல்பவர்களுக்குத்தான் இது எளிதாக கிடைக்கும். கேட்கக் கூச்சப்படும் புதியவர்கள் என்றால், அவர்களின் உடல்மொழியிலேயே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்துகொண்டு அதற்கு தக்கபடி விலை பேசுகிறார்கள். அல்லது ‘அந்த மாதிரி வியாபாரம் எதுவும் தங்களுக்கு கிடையாது’ என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.

ஆபாசப் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை எடுத்து வாடிக்கையாளரின் தேவையறிந்துகொடுக்கிறார்கள். அதனால் வாடிக்கையாளரின் தோற்றத்தைப் பார்த்து விலையை நிர்ணயிக்கிறார்கள். கிடைக்கும் தொகை ஏறக்குறைய முழுக்க முழுக்க லாபம்தான்.

வட இந்தியாவில் மக்கள் நெருக்கடி நிறைந்த சில பகுதிகளில் உள்ள கடைகளில், இங்கு ‘டவுன்லோடு செய்து தரப்படும்’ என்ற போர்டுகள் தொங்குகின்றன. இங்கு வசதியான வீட்டுப் பையன்கள் தங்களின் பெரிய திரை கொண்ட 4 ஜி செல்போனுடன் படையெடுக்கிறார்கள். இவர்களின் நிபந்தனையெல்லாம், படம் தெளிவாக இருக்க வேண்டும், வைரஸ் அபாயம் இருக்கக் கூடாது என்பதுதான்.

இந்த ஆபாச அலையால் சமூகத்தில் மோசமான பின்விளைவுகள் உருவாகின்றன. ஒருவகையில் பாலியல் வன்முறைகள் அதிகரிக்க இந்த காட்சிகளே காரணமாக இருக்கின்றன. ‘ஆளை விழுங்கும் இந்த ஆபாச அலைக்குள் பிள்ளைகள் சிக்காமல் இருக்க பெற்றோர் அதிக அக்கறை காட்டவேண்டும். ஆபாச அலைக்குள் அவர்கள் சிக்காமல் இருக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions