அய்யம்பேட்டை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலைமறியல்

0
அய்யம்பேட்டை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலைமறியல்

அய்யம்பேட்டை அருகே பட்டித்தோப்பு என்ற இடத்தில் அரசு மதுபான கடை இயங்கி வந்தது. இந்த கடையை மூடக் கோரி இப்பகுதி பொதுமக்கள் கடந்த ஜுலை மாதம் சாலை மறியல் செய்தனர்.

இந்த சாலை மறியலை தொடர்ந்து பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி கூட்டத்தில் 45 நாட்களில் இந்த மதுபான கடையை மூடுவது என முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் அப்போது சாலைமறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் காலக்கெடு முடிந்தும் இந்த மதுபான கடை மூடப்படாமல் செயல்பட்டு வந்தது. இதையடுத்து பசுபதிகோவில், மாத்தூர் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் நேற்று மதியம் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புனித அந்தோணியார் கோவில் எதிரில் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பட்டித்தோப்பு மதுபான கடையை உடனே மூடவேண்டும் என்றும், முன்பு சாலைமறியிலில் ஈடுபட்ட பெண்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று கூறினர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த தஞ்சை டவுன் துணை போலீஸ் சூப்ரெண்டு தமிழ்ச்செல்வன், பாப நாசம் தாசில்தார் ராணி, இன்ஸ் பெக்டர்கள் மணிவேல், சிவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையை அடுத்து பட்டித்தோப்பு அரசு மதுபான கடை மூடப்பட்டது. மேலும் கடந்த சாலைமறியலில் பெண்கள் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் பெறுவது குறித்து பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions