எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின!

0

தமிழகம் முழுவதும், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, செப் 5 முதல் வகுப்புகள் துவங்கின.

’நீட்’ தேர்வு அடிப்படையில், இடம் பெற்ற மாணவர்கள், உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர். ’நீட்’ தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெறும், மாநில அரசின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ’நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடந்தது. கவுன்சிலிங் முடிந்த நிலையில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின.

சென்னையில், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பூங்கொத்து கொடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் வரவேற்றனர். பல இடங்களில், மரக்கன்றுகள் நட்டும், வரவேற்பு அளித்தனர். ’ராகிங் செய்ய மாட்டோம்’ என, சீனியர் மாணவர்கள் வாக்குறுதி அளித்தனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், டீன் வசந்தா மணி பேசியதாவது:

சேவை சார்ந்த துறை மருத்துவம். உங்கள் உணர்வுகளை தியாகம் செய்ய வேண்டி இருக்கும்.குறிக்கோளுடன் பயில வேண்டும்; நல்லொழுக்கத்துடன், மற்ற துறையினருக்கு, முன்மாதிரியாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில், டீன் பொன்னம்பல நமச்சிவாயம் பேசுகையில், ”இந்த பருவத்தில், மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படும். அதில், சிக்கி விடாமல், கவனத்துடன் படிக்க வேண்டும். அவ்வப்போது, பிள்ளைகளை பெற்றோர் சந்தித்து அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை கண்காணிக்க வேண்டும்,” என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள, பெரும்பாலான அரசு மருத்துவ கல்லுாரிகளில், நேற்று வகுப்புகள் துவங்கின. அரசு ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரியில் இன்றும், சென்னை மருத்துவ கல்லுாரியில், 7ம் தேதியும், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உடை கட்டுப்பாடு : மாணவர்கள், ஜீன்ஸ், டி – சர்ட் அணியக்கூடாது; பேன்ட், முழுக்கை சட்டை, ஷூ அணிய வேண்டும்.மாணவியர் சேலை, சுரிதார் என, இரண்டு விதமான உடைகள் அணியலாம்; மேற்கத்திய உடைகளுக்கு அனுமதி இல்லை.

தலை முடியை விரித்து போடக்கூடாது இதை, பின்பற்றாத மாணவர்கள், வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது உட்பட, பல கட்டுப்பாடுகளை, மருத்துவ கல்வி இயக்ககம் விதித்துள்ளது.

நன்றி:கல்விமலர்

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions