டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை – இடிதாக்கி பெண் பலி

0

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பருவ மழை பொய்த்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சையில் விட்டு விட்டு தூறல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தஞ்சையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தூறல் மழை பெய்தது. காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மாணவ-மாணவிகள் குடை பிடித்தப்படி பள்ளிகளுக்கு சென்றனர்.

இந்த மழை காரணமாக சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். கும்பகோணம், பாபநாசம், பூதலூர், பட்டுக்கோட்டை, கபிஸ்தலம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை தூறல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது.

கபிஸ்தலம் அருகே உள்ள அலவந்திபுரம் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சம்பந்தம் என்பவர் மனைவி சாரதாம்பாள் (வயது 62)வீட்டை விட்டு வெளியில் நடந்து சென்றார். அவர் மீது இடி தாக்கியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடம் சென்று சாரதாம்பாள் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுபற்றி சாரதாம்பாளின் மகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பரவலாக மழை பெய்தது. திருவாரூர், நன்னிலம், வலங்கைமான், முத்துப்பேட்டை, மன்னார்குடி திருத்துறைப்பூண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் தூறல் மழை பெய்தது. நாகை, சீர்காழி, வேதாரண்யம், தலையஞாயிறு, வேளாங் கண்ணி, மணல்மேடு, சிக்கல், கீழ்வேளூர், தரங்கம்பாடி உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. இந்த மழை பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கல்லணை – 1.2
தஞ்சை – 1.3
கும்பகோணம் – 16.2
வலங்கைமான் – 10.2
குடவாசல் – 2.4
நன்னிலம் – 11.4
மயிலாடுதுறை – 6.2
மஞ்சளாறு – 4.8
வெட்டிக்காடு – 28.4
மதுக்கூர் – 11.4
வேதாரண்யம் – 12.2
தலைஞாயிறு – 6.4

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions