ஐ.சி.சி-யின் புதிய விதிகள் நாளை முதல் அமல்..!

0

2கிரிக்கெட் போட்டியின்போது களத்தில் மூர்க்கமாக நடந்து கொள்ளும் வீரரை வெளியேற்றுவது உள்ளிட்ட பல புதிய நடைமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

என்னென்ன புதிய விதிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.

ஐ.சி.சி-யின் புதிய விதிமுறைகள்படி, டெஸ்ட் போட்டிகளில் 80 ஓவர்களுக்கு பிறகு கூடுதலாக வழங்கப்படும் DRS வாய்ப்பு இனி வழங்கப்படாது.

டெஸ்ட் போட்டிகளைப் போல, சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலும் இனி DRS முறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தை எல்லைக் கோடருகே நின்று பிடிக்கும்போது, ஃபீல்டரின் கால்கள் கட்டாயம் எல்லைக்கோட்டின் உள்பகுதியில் இருக்க வேண்டும்.

பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து, அருகில் நிற்கும் பீல்டரின் ஹெல்மெட்டிலோ அல்லது விக்கெட் கீப்பரின் ஹெல்மெட்டிலோ பட்டு எழும்பும்போது அதை கேட்ச் செய்தால், பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து விடுவார்.

பேட்டுகளின் அளவுகளிலும் குறிப்பிட்ட சில புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பேட்டின் நீளம் மற்றும் அகலங்களில் மாற்றம் செய்யப்படாத நிலையில், பேட் விளிம்பின் தடிமன் 40 மில்லிமீட்டரை தாண்டக்கூடாது.

இதே போல் பேட்டின் ஒட்டுமொத்த தடிமன் 67 மில்லி மீட்டருக்கு மேல் இருக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, 10 ஓவருக்கும் குறைவான போட்டியாக மாற்றப்படும்போது, ஒரு பவுலர் குறைந்தபட்சம் 2 ஓவருக்கு குறையாமல் பந்து வீச வேண்டும்.

களத்தில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் வீரரை உடனடியாக வெளியேற்ற நடுவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

நடுவரை தாக்குவது, மிரட்டுவது, வீரர்களுடன் உடல்ரீதியாக மோதலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வீரர்களை வெளியே அனுப்பலாம்.

இந்த புதிய விதிமுறைகள் தற்போது நடைபெற்று வரும் இந்திய – ஆஸ்திரேலிய தொடருக்கு பொருந்தாது.

நாளை துவங்கவுள்ள வங்கதேசம் – தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடரில், ஐ.சி.சி-யின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions