கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது

0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடியே இயற்கையை ரசித்தனர். மேலும் வெப்பநிலை குறைந்து, இதமான குளிர் நிலவியது.

கொடைக்கானலில் செப்டம்பர் முதல் வாரம் முதலே தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அவ்வப்போது பலத்த மழை பெய்து சாலை போக்குவரத்தையும் துண்டிக்கிறது. கொடைக்கானலில் பெய்த தொடர்மழையால் மலையடிவாரத்தில் உள்ள வரதமாநதி அணை, மருதாநதி அணை, மஞ்சளார் அணைகள் நிரம்பி பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போதும் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து உள்ளது.

விடுமுறையால் கூட்டம்

சில தினங்களாக மழை இல்லாத நிலையில் கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் நகர் மற்றும் இதன் சுற்றுப்புறங்களில் மிதமான மழை பெய்துவருகிறது. வார விடுமுறையில் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடி இயற்கை எழிலை கண்டு ரசித்தனர்.

கொடைக்கானலில் நேற்று அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. குறைந்தபட்சமாக இரவில் 13 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்தது. காற்றில் ஈரப்பதம் 70 சதவீதம் இருந்ததால் இதமான குளிர் நிலவியது. 3 கிலோ மீட்டர் வேகத்தில் குளிர்ந்த காற்று வீசியது. அத்துடன் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.

தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு பலரும் பணிக்குத் திரும்பியதால் நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்பட்டது.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*