வங்கதேசத்துக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய தோல்வி: தொடரை 3-0 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

0

இந்த தென் ஆப்பிரிக்கத் தொடருக்குப் பிறகு வங்கதேச அணி மீண்டும் தங்களது உள்ளூர் ஆதிக்கத்துக்குத் திரும்புமா என்ற சந்தேகம் மேலிட 3-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வங்கதேசம் 200 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி தழுவியது. இதன் மூலம் தொடர் முழுதையும் 0-3 என்று இழந்தது வங்கதேசம்.

இதில், டி20 தொடர் வேறு இருக்கிறதாம்! டெஸ்ட், ஒருநாள் என்று ஏற்கெனவே சாத்து வாங்கியிருக்கும் வங்கதேச அணியின் மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச பெருமையும் டி20 கிரிக்கெட்டில் பறிபோகாமல் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் வேண்டிக் கொள்ளலாம்!

கிழக்கு லண்டனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து வங்கதேசப் பந்து வீச்சை காய்ச்சி எடுத்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 369 ரன்கள் விளாச, தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி தழுவியது.

தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி காக் (73) ரன்களை எடுக்க, முதல் முயற்சியாக தெம்பா பவுமா தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டு அவர் தன் பங்குக்கு 47 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுக்க டி காக், பவுமா கூட்டணி முதல் விக்கெட்டுக்காக 18 ஓவர்களில் 117 ரன்களைச் சேர்த்தனர்.

மெஹதி ஹசன் மிராஸ் 4 ஓவர்கள் இடைவெளியில் டி காக், பவுமா இருவரையும் பெவிலியன் அனுப்பினார். இதனையடுத்து டுபிளெசிஸ், மர்க்கரம் சேர்ந்தனர். இருவரும் 3-வது விக்கெட்டுக்காக 151 ரன்களப் புரட்டி எடுத்தனர். டுபிளெசிஸ் 67 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்து காயம் காரணமாக வெளியேறினார், ரன்கள் ஓடும்போது பின்முதுகில் ‘ஸ்ட்ரெஸ்’ ஏற்பட்டு அவர் துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார். மர்க்கரம் 60 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

டிவில்லியர்ஸ் 20 ரன்களையும் பெஹார்டீன் 33 ரன்களையும் கேகிசோ ரபாடா 23 ரன்களையும் எடுக்க தென் ஆப்பிரிக்கா 369/6 என்ற ஸ்கோரை எட்டியது.

வங்கதேசம் மோசமாகத் தொடங்கியது. பேட்டர்சன் பந்தில் இம்ருல் கயேஸ் (1), லிட்டன் தாஸ் (6) இருவரும் வெளியேறினர். ரபடாவின் பந்து மட்டை விளிம்பில் பட்டு சவுமியா சர்க்கார் (8) வெளியேற வங்கதேசம் 20/3 என்று சரிந்தது. பெலுக்வயோ, வில்லம் முல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற முதல் 15 ஓவர்களுக்குள்ளேயே 61/5 என்று வங்கதேசத்தின் டாப் ஆர்டரை ஊதியது தென் ஆப்பிரிக்கா. ஷாகிப் அல் ஹசன் போராட்ட அரைசதம் எடுத்து தன் 35வது அரைசதம் கண்டார். 82 பந்துகளில் இவர் 8 பவுண்டரிகளுடன் 63 ரன்களை எடுத்தார், சபீர் ரஹ்மான் 39 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவருமே மர்க்கரமிடம் ஆட்டமிழந்தனர், முன்னதாக முஷ்பிகுர் 8 ரன்களில் காலியானார். 135/7 என்று ஆன வங்கதேசம் பிறகு 41வது ஓவரில் 169 ரன்களுக்குச் சுருண்டது.

வங்கதேச அணியின் 3-வது 200 ரன்கள் இடைவெளி தோல்வியாகும் இது. 2011 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் 206 ரன்களில் பெரிய உதை வாங்கியது, முன்னதாக 17 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானிடம் 233 ரன்களில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது வங்கதேசம்.

ஆட்ட நாயகன் டுபிளெசிஸ், தொடர் நாயகன் குவிண்டன் டி காக்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions