இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காள தேசம்

0

இந்தியா, இலங்கை மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்தியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வங்காளதேசம், இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக்கில் வங்காளதேசம் – இலங்கை அணிகள் மோதின.

டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் குணதிலகா, குசால் மெண்டிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குணதிலகா 4 ரன்கள் எடுத்த நிலையிலும், குசால் மெண்டிஸ் 11 ரன்களிலும், உபுல் தரங்கா 5 ரன்னிலும், ஷனகா ரன்ஏதும் எடுக்காமலும், ஜீவன் மெண்டிஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழக்க இலங்கை 8.1 ஓவரில் 41 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.

6-வது விக்கெட்டுக்கு குசால் பெரேரா உடன் கேப்டன் திசாரா பெரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குசால் பெரேரா 40 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 61 ரன்கள்  அடித்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 97 ரன்கள் குவித்தது. பெரேரா 37 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்தது. தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். லிட்டன் தாஸ் ரான் ஏதும் எடுக்காமலும், அதன்பின் களமிறங்கிய சபீர் ரஹ்மான் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் இக்பால் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர்.

ரஹிம் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த இக்பால் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து சவுமியா சர்காரும் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது வங்காளதேசம் 5 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் மகமதுல்லா மட்டும் நிலைத்து நின்று போராட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதி ஓவரை இலங்கை அணியின் உடானா வீசினார். ஆறு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்து பவுன்சராக வீசப்பட்டதால் பேட்ஸ்மேனால் அடிக்க முடியவில்லை. அடுத்த பந்தும் பவுன்சராக வீசப்பட்டது. அந்த பந்தில் முஸ்டபிசுர் ரஹ்மான் ரன் அவுட் ஆனார். அந்த பந்தை நோ-பால் கொடுக்கும்படி கேட்டு வங்காளதேச வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் மைதானத்தில் சலசலப்பு நிலவியது.

மூன்றாவது பந்தை மகமதுல்லா எதிர்கொண்டர். அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது. அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்தனர். இதனால் கடைசி இரண்டு பந்தில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் மகமதுல்லா சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். வங்காளதேசம் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வங்காளதேசம் அணியின் மகமதுல்லா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

18-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions