ஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னைமட்டை வண்டி! 

0

ஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னைமட்டை வண்டி! 
அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம்!!

ஒவ்வொரு மனிதன் வாழ்வில் பெரும் மலர்ச்சியைத் தருவது பள்ளிக்கூடங்கள்தான். அதேபோல அந்தப் பள்ளிக்குப் பெருமை சேர்ப்பது புதிய கோணத்தில் சிந்திக்கும் மாணவர்களே. மாணவர்களின் அந்தச் சிந்தனையை ஊக்குவித்து, மெருகேற்றும் ஆசிரியரும் அமைந்துவிட்டால் நிச்சயம் அந்தப் பள்ளிக்கூடம் தனித்துவமாக விளங்கும். அதுபோன்ற அரசுப் பள்ளியைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

விழுப்புரம் மாவட்டத்தின் ஒலக்கூர் ஒன்றியத்தில் கோனோரி குப்பம் எனும் சிறிய கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் மாணவர்களைக் கவரும் விதத்தில் யானை வடிவ கரும்பலகை, திறன் வளர்க்கும் மேடைகள், சுத்தமான கழிப்பறைகள் எனப் பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பை முழுமையாக உள்வாங்கிய மாணவர்களும் தங்களின் தனித் திறன்களை வெளிப்படுவதிலும் புதிய முறையில் சிந்திக்கவும் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் புதுமையான, பயன்பாடு மிக்க ஒரு கண்டுபிடிப்பை மாணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அது பற்றி, அப்பள்ளியின் ஆசிரியர் எல். ஸ்டாலின் ஆரோக்கிய ராஜிடம் கேட்டோம்

அரசுப் பள்ளி
“மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கல்வியைத் தருவதோடு, அவர்களின் நலன்மீது அக்கறை எங்களுக்கு இருக்கிறது. பள்ளியின் நடைமுறையில் உள்ள விஷயங்கள் பற்றி மாணவர்கள் தங்கள் கருத்துகளைத் தயங்காமல் எங்களிடம் கூறுவார்கள். நாங்களும் அதை அலட்சியப்படுத்தாமல் விவாதிப்போம். இப்படிப் பல விஷயங்கள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் சுத்தம் செய்யும் வண்டி.

‘ஒருநாள், மாணவர்கள் வந்து பனங்காய் வண்டியைப் போல நமது பள்ளி மைதானத்தைச் சுத்தம் செய்யும் வண்டி தயாரித்தால் என்ன சார்?’ என்று கேட்டார்கள். அவர்களின் யோசனை முதலில் எனக்குப் புரியவில்லை. பிறகு அவர்களே விளக்கினார்.

‘பனங்காய் வண்டி செய்யறோம் இல்லையா சார். அதேபோல, இரண்டு சக்கரங்களுக்கு இடையே நீளமான குச்சியை வைத்து விடுவோம். தென்னைமட்டையை வெட்டி, அந்தக் குச்சியில் கட்டிவிடலாம். ஒரு புறத்தில் சக்கரம் நகராமல் ஒருவர் பிடித்துகொள்ள வேண்டும். மறுபுறத்தில் உள்ள சக்கரத்தோடு சைக்கிளை இணைத்து ஓட்டினால், செக்கு சுற்றுவதுபோலச் சுற்றும். அப்போது தென்னைமட்டைக் கீற்றுகள் குப்பைகளைச் சேகரித்துவந்துவிடும். ஐந்தே நிமிடத்தில் மைதானத்தையே சுத்தம் செய்துவிடலாம் சார்’ என்றார்கள்.

எனக்கும் அவர்களின் யோசனை பிடித்திருந்தது. அதைச் செயல்முறைப்படுத்த என்னை விட, அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அடுத்த நாள் காலையில் மாணவர்கள் குப்பைச் சேகரிக்கும் வண்டியைத் தயாரித்துவிட்டனர். அதைக் கொண்டு, அவர்கள் சொன்னதுபோலவே வெகு சீக்கிரத்தில் மைதானத்தைச் சுத்தம் செய்தும் விட்டனர். விளையாட்டைப் போலவே ஒரு வேலையையும் முடித்துவிட்டனர். இதில் சதீஷ், பூமிநாதன், திருமலை, இளவரசன், சிவக்குமார், பள்ளியின் ஆசிரியர்கள் எல்லோருமே அவர்களைப் பாராட்டினோம்.

அரசுப் பள்ளி

மாணவர்களின் அறிவியல் மற்றும் சிந்தனைத் திறனை வளர்க்கும் மத்திய அரசின் ‘டிஸைன் ஃபார் சேஞ்ச்’ திட்டத்தில் இந்தச் செயல்பாட்டை இணைத்தேன். இந்திய அளவிலான பள்ளிகளில் வந்திருந்த செயல்பாடுகளில் டாப் 25க்குள் எங்கள் பள்ளி மாணவர்களின் செயல்பாடு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக குஜராத் செல்வதற்கு ஒரு மாணவருக்குத்தான் அரசுப் பயணச் செலவு கொடுத்தார்கள். ஆனால், என் செலவில் மூன்று மாணவர்களை அழைத்துச் சென்றேன். அந்த ஒரு மாணவருக்கு அரசுத் தந்த பணத்தையும் பள்ளியின் கழிப்பறைக்கு நீர் வசதி ஏற்படுத்த பயன்படுத்தினோம். மாணவர்களின் திறமைக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது என்பதே எனக்குப் போதும்.

அரசுப் பள்ளி

எங்கள் பள்ளி மாணவர்களின் முயற்சியைப் பார்த்து ஜப்பானைச் சேர்ந்த முழுமதி அறக்கட்டளை எங்களைத் தொடர்புகொண்டது. பள்ளிக்கு என்ன தேவை எனக்கேட்டபோது, மாணவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக கம்ப்யூட்டர் லேப் வைக்கும் முயற்சியில் இருப்பதைச் சொன்னோம். அவர்கள் 80 ஆயிரம் ரூபாய் அளித்தார்கள். அமெரிக்காவின், கலைச்செல்வி 71 ஆயிரம் ரூபாய் எனப் பலரும் தாமாக முன்வந்து உதவினர். எங்கள் பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பாக 40 ஆயிரம் ரூபாய் அளித்தோம். ஏழரை லட்சம் ரூபாய் மதிப்பில் 24 கம்ப்யூட்டர்களோடு லேப் அமைத்தோம். எங்களின் கனவு இவ்வளவு விரைவில் நிறைவேறும் என நாங்களே எதிர்பார்க்கவில்லை.

அரசுப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் எந்தவொரு சிறு முயற்சியையும் விட்டுவிடாமல் செய்வதற்கு முயல்கிறோம்” என்கிறார். ஆசிரியர் எல். ஸ்டாலின் ஆரோக்கிய ராஜ்.

இந்தப் பள்ளியின் நல்ல முயற்சிகளைப் போல தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளும் முன்னெடுக்கட்டும்.

-நன்றி விகடன்

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions