
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மங்களம் என்ற யானைக்கு பாகனாக அசோக் என்பவர் உள்ளார்.
யானை மீது அதிக பாசம் கொண்ட இவர் தனியாக வனத்துறையிடம் அனுமதி பெற்று சியாமளா, அம்பிகா என்ற 2 யானைகளை பல ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் இந்த 2 யானைகளையும் வளர்க்கக்கூடிய அளவில் இடவசதி இல்லை.
இதனால் 2 யானைகளையும் கும்பகோணம் பேட்டை என்ற இடத்தில் விவசாயி ராமச்சந்திரன் என்பவரின் வயல் தோட்டத்தில் வைத்து பராமரித்து வருகிறார். இதற்கு மாதந்தோறும் ஒரு தொகையை ராமச்சந்திரனிடம் அசோக் கொடுத்து வருகிறார்.
அதே வயல் தோட்டத்தில் யானை தங்குவதற்காக தனித்தனியாக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வயல் தோட்டத்தில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு அந்த தோட்டத்திலிருந்து சீமைப்புல், கரும்பு தோகை ஆகியவை வழங்கப்படுகிறது.

யானை மீது அதீத பாசம் கொண்ட விவசாயி ராமச்சந்திரன், யானைகள் குளிக்க ரூ. 80 ஆயிரம் செலவில் 30 அடி நீளம் 30 அடி அகலத்தில் யானை இறங்கி ஏறும் வகையில் நீச்சல் குளம் கட்டிக்கொடுத்துள்ளார். இந்த குளத்துக்கு போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
தற்போது கோடை வெயில் துவங்கியுள்ளதால் யானைகள் நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாக குளியல் போடுகிறது.
இதுகுறித்து விவசாயி ராமச்சந்திரன் கூறியதாவது:-
எங்களது தோட்டத்தில் யானை பராமரிக்க நட்பின் அடிப்படையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்குவதற்கும், குளிக்கவும் யானைகளுக்கு வசதி உள்ளது.
தமிழகம் முழுவதும் யானைகள் கும்பகோணம் வழியாக செல்லும் போது, எங்களது இடத்துக்கு வந்து ஓய்வு எடுத்து, குளிப்பாட்டி, தீவனம் கொடுத்து அனுப்புவோம். யானைகளுக்கு எங்களது குடும்பத்தினர் இதுபோன்ற உதவிகளை செய்வதை நாங்கள் பெருமையாக கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.