ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி

0

ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றி நடைப்போடு பெண்ணே!

ஒழுக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. அது ஆணாணாலும் சரி,. பெண்ணானாலும்  சரி. ஒழுக்கம் என்பது மூன்று வகைப்படும். அது நினைவில் உள்ள ஒழுக்கம். சொல்லில் உள்ள ஒழுக்கம், செயலில் உள்ள ஒழுக்கம்.

நினைவு ஒழுக்கம் என்பது, நம்முடைய எண்ணங்கள், சிந்தனைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதே. சொல் ஒழுக்கம் என்பது, நாம் பேசும் போது மற்றவர்களை கஷ்டப்படுத்தாமல் நல்ல வார்த்தைகளை பேசி, அவர்களை சந்தோஷப்படுத்துவது. செயல் ஒழுக்கம் என்பது நாம் செய்கிற காரியங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதாகும்.

ஒழுக்கம் என்பது சிந்தனையில் உயர்வை கொடுக்கும்; உறவை வளர்க்கும் அன்பை பெருக்கும்., அமைதியை கொடுக்கும்,.இந்த ஒழுக்கம் என்பது நம்மை சாதனைப்புரிய தூண்டும். சுதந்திர மனப்பான்மையை வளர்க்கும்., உங்களை அடையாளம் காட்டும்., உங்கள் சொல் விலை மதிப்புள்ளதாக கருதப்படும்.நல்ல நிலையான புகழை கொடுக்கும், எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டியாக உங்களது ஒழுக்கம் திகழும். உங்களை மாற்றும்., மனம் தெளிவாக இருக்கும்., துணிவுடன் எதையும் செய்ய முடியும்., வாழ்க்கை கடினமான இருந்தாலும் நம்முள் மன நிறைவும், அமைதியும்  இருக்கும்.

வறுமை உள்ளவர்களால் யாருக்கும் துன்பம் இல்லை. ஆனால், ஒழுக்கம் இல்லாதவர்களின் செல்வத்தால், எல்லோருக்கும் தீமை தான் விளையும். ஒழுக்கம் இல்லாதவர்களது வாழ்க்கை புழுவிலும் கீழானது. இந்த ஒழுக்கத்தை விலைக்கொடுத்து வாங்க முடியாது. நம்முள் வளர்க்கத்தான் முடியும். இந்த ஒழுக்கத்தை நினைவு, சொல், செயலால் இடைவிடாது, ஒரு மழலையை வளர்ப்பது போல் மனதிற்குள் கவனமாக வளர்க்க வேண்டும். ஒழுக்கம் என்பது அகப்பொருள். எனவே ஒழுக்கத்தை, உணவு, உடை, உறைவிடத்திற்கும் மேலாக பேணிக் காத்திட வேண்டும்.

ஒழுக்கத்தோடு வாழும் மனிதர்களே உலகில் உலவும், உண்மையான தெய்வங்கள். ஒழுக்கம் மிக்கோரை பணிந்து வணங்குவதில் தவறில்லை. ஒழுக்கத்திற்காக உயிரையே விடுவோர், சான்றோர்.

ஒழுக்க சீலரை உலகம் போற்றி புகழும். ஒழுக்கமே  உயிரின் அமுதம். இவ்வளவு சிறப்பான ஒழுக்கம்  ஒரு குடும்பத்தில், ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ  இல்லாது போய் விட்டால், அந்த குடும்பத்தின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடும்.

சில குடும்பங்களில் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக காணப்படுகிறார்கள். பெண் ஒழுக்கம் கெட்டவளாக இருந்தால், அந்த குடும்பத்தின் அஸ்திவாரமே இடியும் நிலைக்கு போய்விடும். ஒரு குடும்பத்தில் ஆண் ஒழுக்கம் கெட்டவராக இருந்தால், அந்த கட்டிடமே நிலைக்குலைந்து போய்விடும். ஒரு கட்டிடத்திற்கு எப்படி அஸ்திவாரம் முக்கியமோ, அது போல ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்ணின் ஒழுக்கமானது முக்கியம்.

ஒரு பெண் எப்படி பிறந்தாள் என்பது முக்கியமல்ல., எப்படி வாழ்ந்தாள் என்பது தான் முக்கியம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கமாக வாழ்ந்தாள் என்பது அதைவிட முக்கியம்.

ஒரு குடும்பத்தின் தலையாகிய ஆண், ஒழுக்கம் நிறைந்தவனாக, சமுதாயத்தால் மதிக்கப்படுவராக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் குடும்பத்தின் கட்டிடம் உடைந்துவிடும்.

ஒழுக்கத்தை இழந்துவிட்டால் நம்மிடம் உள்ள எல்லாவற்றைவும் இழந்தவராக மாறிவிடுகிறோம்;  ஒரு குடும்பத்தில் பெண் ஒழுக்கமில்லாமல் இருந்தால், அந்த பெண் அந்த குடும்பத்தில் மதிப்பில்லாதவளாகவும், உறவை வளர்க்க தெரியாமல் துண்டிப்பவளாகவும், உயர்வை கெடுப்பவளாகவும், அன்பை மதிக்க தெரியாதவளாகவும், அமைதியை கெடுப்பவளாகவும், குடும்பத்தின் புகழை அழிப்பவளாகவும் காணப்படுவாள். எனவே, குடும்ப உறவு வளர,  புகழ் உயர, கணவர் மதிக்கப்பட, ஒரு பெண்ணானவளுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியமானதாகும்.

எனவே குடும்பம் தழைக்க, நாடு செழிக்க, மனங்களில் நல்லவற்றை விதையுங்கள்., விளையுங்கள், ஒழுக்கமற்ற களைகளை பிடுங்கி எறியுங்கள், ஒழுக்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றி நடைப்போடு பெண்ணே!.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions