பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்!  ஆதனூர் சோழன்

0

“பிஞ்சுக் குழந்தையை சாமியே பிச்சு போட்டுச்சு என்றால் நம்ப முடியுமா?”

மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் பதினெட்டாம்படி கருப்புச்சாமி பச்சைக் குழந்தைய கை வேறு கால் வேறு தலை வேறாக பிச்சு போட்டதாக சின்னவயதில் கேள்விப் பட்டு பயந்திருக்கிறேன்.

அது என்ன கதை?

அழகர் கோவிலுக்கு பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள் வண்டிகளைக் கட்டிக்கொண்டு குடும்பத்தோடு வருவது வழக்கம். அப்படி வந்த ஒரு குடும்பத்தினர் மாலையில் கோவிலை விட்டு வெளியேறி விட்டனர். ஆனால், வெளியே வந்தபிறகுதான் ஒரு குழந்தையை கோவிலுக்குள் விட்டு வந்தது தெரிகிறது.

கோட்டை வாயிலுக்கு விரைந்தபோது, கதவு பூட்டப்பட்டுவிட்டது. குழந்தையின் தாய் அழுது அரற்றினாள்.

“ஐயோ என் குழந்த…
கடவுளே யாராச்சும் கதவைத் திறங்களே” என்று கதறினாள். அப்போது கோவிலுக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது…

“உன் குழந்தை பத்திரமாகத்தான் இருக்கிறாள். காலையில் வந்து பார்”

ஆனால், “என் குழந்தையை பார்க்காமல் போக மாட்டேன்.” என்று தாய் பிடிவாதமாக அழுதாள். இதையடுத்து,

“உன் குழந்தைதானே வேண்டும். இதோ வாங்கிக்க” என்று சொன்ன குரல், கோட்டைக் கதவின் சிறு பாதை வழியாக குழந்தையின் கைகள், கால்கள், தலை, உடல் என்று துண்டுதுண்டாக வீசப்பட்டதாம். அப்போதிருந்து, பதினெட்டாம்படி கருப்புச்சாமி கோட்டைக் கதவு பூட்டப்பட்டுக் கிடப்பதாக கூறுவார்கள்.

ஆனால், இப்போது, 100 ரூபாய் டிக்கெட் வாங்கினால், கதவைத் திறந்து பதினெட்டுப் படிகளை பார்க்க அனுமதிக்கப்படுகிறது என்பது வேறு விஷயம்.

இந்தக் கதை உண்மை என்றால் அந்தக் கடவுளுக்கு ஈவிரக்கம் இல்லை என்று கருத வேண்டும். பொய் என்றால், கருப்புச்சாமியைப் பற்றி அச்சமூட்டும் பிம்பத்தை உருவாக்க இந்தக் கதையைப் பரப்பியிருக்க வேண்டும்.

இப்போது எதற்கு இந்தக் கதை என்று நீங்கள் கேட்பீர்கள்…

காஷ்மீரில் எட்டு வயதுச் சிறுமி ஆஷிபாவை எட்டு மனித விலங்குகள் சிதைத்து சின்னாபின்னப்படுத்திய நிகழ்வு இந்தக் கதையை நினைவூட்டியது.

ஆஷிபாவை சிதைத்த ஓநாய்களுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்திய பாஜக அமைச்சர்களையும், இந்த கொடூர நிகழ்வு குறித்து மிகச்சாதாரணமாக கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியையும் நல்ல மனம்கொண்டோர் காறி உமிழ்ந்தது ஆறுதல் அளித்தது.

ஆனால், ஜனவரி மாதம் சிதைக்கப்பட்ட அந்த சிறுமியின் அலறலும், அவளை இழந்து தவித்த பெற்றோரின் அழுகுரலையும் ஆலயத்தில் இருந்த கடவுளும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வேதனை.

வழக்கை பதிவு செய்யவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரே எம்எல்ஏ தாரிகாமி போராட வேண்டியிருந்தது. சட்டமன்றத்தில் பிரச்சனையை எழுப்பிய பிறகுதான் வழக்கே பதிவு செய்யப்பட்டது.

அதன்பிறகும் அரசியல் அழுத்தங்களை பொருட்படுத்தாமல், இந்த குற்றத்தின் பின்னணியை நேர்மையாக விசாரித்து, குற்றவாளி எம்எல்ஏவாக இருந்தாலும், போலிஸாக இருந்தாலும் அரசியல் செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும் கவலைப்படாமல் ஆதாரங்களைத் திரட்டி கைது செய்து சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவந்த போலீஸ் அதிகாரி ரமேஷ் குமார் ஜல்லாவை அனைத்து தரப்பினரும் பாராட்டுகிறார்கள்.

ஆனால், எச்.ராஜாவை போல சிலர் கதவே இல்லாத ஆலயத்தில் எப்படி சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முடியும் என்று புத்திசாலித்தனமாக நியாயப்படுத்துகிறார்கள்.

சிறுமியை சிதைத்தவர்களைக் காட்டிலும் இத்தகையோர்தான் மிகவும் கொடியவர்கள்.

அந்தச் சம்பவத்தின் வடு மாறாத நிலையிலேயே பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் 11 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, அவளுடைய உடலில் 86 இடங்களில் காயங்களை ஏற்படுத்திய ஒரு கூட்டம் அவளை கொன்று வீசியிருக்கிறது.

குஜராத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இப்படி இருக்கும் நிலையில், பாஜகவினர் எதற்கும் வருந்துவதாக தெரியவில்லை. வருந்தாவிட்டாலும், கொடூரமான குற்றங்களுக்கு சப்போர்ட் பண்ணாமலாவது இருக்கலாமே என்று நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள்

நன்றி: நக்கீரன்

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions