ஆண் விதவைகள்

0

பேராசிரியர்

கவிமாமணி திமு அப்துல்காதர்

எரிபொருள் தேசத்தின்
எரிபொருள் இவர்கள் !

அன்னை தேசம் விட்டு
எண்ணெய் தேசத்திற்கு
ஏன் வருகிறார்கள்?
ஓ!
“பற்றா”க்குறைதான்!

சொந்த வீட்டு]
அடுப்பு அமாவாசை நீக்கி
கலயக் கஞ்சி பவுர்ணமிக்காக
வாலிபம் கருக
இரவாகிறார்கள்!

பாலையில்
விறகாகிறார்கள்!

சிலர்
பெட்ரோல் எண்ணெயில்
பொரித்த
தினார்-திர்ஹம்-ரியால்
மசால் வடைக்காக
பொறியில் சிக்கும்
எலிகள் !

ஆனால்
வடைகள்
எலிகளைத் தின்று விடுகின்றன!

கல்யாண வாசம் மாறுமுன்
கப்பல் ஏறிய மாப்பிள்ளைகள் !
காலமெல்லாம்
கண்களில் செஹ்ரா
கட்டிக் கொண்டிருக்கும்
மணப் பெண்கள்!

காலம் தாண்டினாலும்
கணவர்களின்
கூலி தாண்டுவதில்லை
ஆனால் வெள்ளாடுகள்
வேலி தாண்டி விடுகின்றன !

விரக நரகப்
பிரிவு நெருப்புப்
பிழம்பான இவர்களின்
நிழலும் சுடும் என்பதால்
மண்ணில் கால்பதியாமல்
விண்ணில் நடக்கிறான்
வெப்பச் சூரியன் !

நல்ல குடும்பம் ஒரு
பல்கலைக் கழகம் என்பதால்
அஞ்சல் வழியில்தான்
அந்தக் குடும்பம் நடக்கிறது!

தாயகத்தில் இருந்துவரும்
அஞ்சல் கவர் இமை திறக்கையில்
தவறவிட்ட
தாயின் தீதார் !

மடல் பட படக்கையில்
மனையாளின்
முதல் ஸ்பரிச நடுக்கத்தைக்-
கடிகார டிக்டிக்கில்
நோயாளித் தந்தையின்
இதயத் துடிப்பை –
மின்விசிறி சுழல்கையில்
குமுறும் குமர்களின்
பெருமூச்சை –
செல்போன் ஒலிப்பில்
செல்லங்களின் சிணுங்கல்களைத் –
தொலைபேசியை தூக்குகையில்
தொப்புள்கொடி அறுபடாத்
துண்டுநிலாக் குழந்தையைச்
சூனியத் தாள்களில்
இமைத் தூரிகையால்
தீட்டுகிறார்கள்!

*

பிறப்பையும் கண்டதில்லை
பிள்ளையின் மழலைச் சொற்கள்
சிறப்பையும் கண்டதில்லை
சிறு மகள் பூத்து நாணும்
மறைப்பையும் கண்டதில்லை
மகனெனத் தன்னைப் பெற்றோர்
இறப்பையும் கண்டதில்லை –
இதற்குமேல் சாவு இல்லை!

***

படித்தவர்கள் அங்கே
மூளையாயிருக்கிறார்கள்
படியாதவர்கள்
சூளையாயிருக்கிறார்கள்!

ஆயுள் முழுக்க
அயல் நாட்டில் இருக்கும்
அத்தா வாப்பா எல்லாம்
இத்தாவில் இருக்கும்
ஆண் விதவைகள் !

வாழும் நாடு வரை நீளும்
தேவைகளின் பட்டியல்
அதனால் நீளும்
விசாவின் காலம்
வெளிச்சமும் நிழலும் போல !

தாயகம் திரும்பும் பொது
தக்கையாய்க்
காலம் சப்பிப்போட்ட
சக்கையாய்….
அத்தர் வாசத்தோடு
அவர்கள்
பளபளப்பாய் வருகிறார்கள்
ஒரு
கஃபன் துணிபோல !

நமதுமுற்றம்மாத இதழில் வெளி வந்த கவிதை !

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions