ஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் – வங்கிகளின் ஷாக் திட்டம்

0
ஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை வழங்கி வருகிறது.

குறைந்த பட்ச பேலன்ஸ், ஏ.டி.எம். பண பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு உள்ளிட்டவற்றை வழங்குகிறது. விரைவில் இந்த இலவச சேவைகளை நிறுத்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

வங்கிகள் அளிக்கும் சேவைக்கு 5 ஆண்டு முன் தேதியிட்டு வரி வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதன்பின் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு இயக்குனரகம் வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வங்கிகள் இலவச சேவை அளித்தாலும் அவற்றின் மூலம் ஏதேனும் லாபம் கிடைப்பதால்தான் வழங்க முடிகிறது. எனவே அந்த லாப தொகையை பிற கட்டண சேவைகளுடன் கணக்கிட்டு அதற்கு 5 ஆண்டு முன் தேதியிட்டு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஏ.டி.எம். பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் வசூலிப்பது என்று வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சேவைகளுக்கு 5 ஆண்டு முன் தேதியிட்டு வரி வசூலிக்க முடிவு செய்துள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாயை வரியாக வங்கிகள் செலுத்த வேண்டி இருக்கும். இந்த சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதை தவிர வங்கிகளுக்கு வேறு வழியில்லை. இதனால் ஏ.டி.எம்., காசோலை உள்பட தற்போது இலவசமாக அளிக்கப்படும் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 முறையும் பிற வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறையும் கட்டணமின்றி பணம் எடுக்க வங்கிகள் அனுமதிக்கின்றன.

வங்கிகள் சேவைக்கு வரி செலுத்த வேண்டியது இறுதி முடிவாகிவிட்டால் ஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் கூட கட்டணம் வசூலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions