தனிமையில், யாருமே இல்லை… புலம்புபவர்களா நீங்கள்?

0

அந்த புகழ்பெற்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனருக்கு இரவில் அடுத்தடுத்து போன் அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்து கொண்டே இருந்தன. அனைத்தின் சாராம்சமும் ஒன்றுதான். ‘தனியாக இருக்கிறேன். இன்றிரவு உன் வீட்டில் தங்க அனுமதி கிடைக்குமா?’ செய்தியைப் படித்துவிட்டு அழைப்பு எண்ணைப் பார்த்தவர் எந்த பதிலையும் அனுப்பாமல் நிம்மதியாக உறங்கச் சென்றுவிட்டார்!

ஏனெனில் கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் இதே செய்தியும் அழைப்பும் மாதத்துக்கு பத்து நாட்களாவது அவருக்கு வரும். ஒருபோதும் இதை அந்த தொழில்நுட்ப நிறுவனர் பொருட்படுத்த மாட்டார். ஏனெனில் அழைப்பவரும், செய்தி அனுப்புபவரும் யாரென்று அவருக்குத் தெரியும். சம்பந்தப்பட்டவரின் பிரச்னையும்! இப்படி ஒருவரல்ல இருவரல்ல பலருக்கும் இதே மாதிரியான செய்திகளை அனுப்பி அவர்களது பர்சனல் எண்ணை தொடர்பு கொண்டு, ‘தனியாக இருக்கிறேன். இன்றிரவு உன் வீட்டில் தங்க அனுமதி கிடைக்குமா?’ என்று கேட்பவர் யார் தெரியுமா?

நவீன தொழில்துறையின் சூப்பர் ஸ்டாரான எலன் மஸ்க்! இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொழில்நுட்ப நிறுவனர், ‘கூகுளை’ச் சேர்ந்த லாரி பேஜ்! தன் எட்டு நிறுவனங்களின் மூலம் ஒரு கோடியே 37 லட்சம் கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரரான எலன் மஸ்க், இன்றைய ஸ்டார்ட்அப் இளைஞர்களின் கனவு நாயகன். அவர்கள் மனதில் வெற்றி வேட்கையை அள்ளி ஊட்டும் ஊற்று.

எட்டு சொகுசு வீடுகள் எலன் மஸ்க்குக்கு உண்டு. ஆனாலும் நாள்தோறும் இரவில் தன் வீடுகளில் தங்க பயப்படுகிறார். நண்பர்களுக்கு ‘தனியாக இருக்கிறேன். இன்றிரவு உன் வீட்டில் தங்க அனுமதி கிடைக்குமா?’ என செய்தி அனுப்புகிறார். என்ன காரணம்? எலன் மஸ்க்கின் பிரச்னைதான் என்ன? மீட்கமுடியாத தனிமையில் இழந்த பால்யம்! அதனால்தான், ‘ஆப்பிளி’ன் ஸ்டீவ் ஜாப்ஸ், ‘மார்வெல் காமிக்ஸி’ன் டோனி ஸ்டார்க், தன் அப்பா எரல் மஸ்க் ஆகியோருடன் ஊடகங்கள் தன்னை ஒப்பிடுவதை கடுமையாக வெறுக்கிறார் எலன் மஸ்க்.

குறிப்பாக, தென் ஆப்பிரிக்காவில் பொறியாளராகப் பணியாற்றும் தந்தை எரல் மஸ்க்கை! கனடாவைச் சேர்ந்த மாடல் அழகியும், டயட்டீஷியனுமான மாயா மஸ்க், தென் ஆப்பிரிக்காவின் எஞ்சினியர் எரல் மஸ்க் ஆகியோரின் காதலுக்கு அத்தாட்சியாகப் பிறந்தவர்தான் இந்த எலன் மஸ்க்.
பெற்றோரின் தொழிலா அல்லது அவர்களது இயல்பே அப்படித்தானா… தெரிந்து கொள்வதற்குள் தன் முதல் எட்டு ஆண்டுகளை அவர்களுடன் வாழ்ந்து முடித்தார். என்றாலும் எலன் மஸ்க்கை அரவணைத்தது புத்தகங்கள்தான்.

இதுவே இவருக்கு மருந்தாகவும் மாறியது. துயரங்களால் மனம் துவண்டு போகும்போதெல்லாம் நூல்களை வாசிக்கத் தொடங்கினார். தன் 9வது வயதில் ‘பிரிட்டானிகா தகவல் களஞ்சியங்கள்’ முழுத் தொகுப்பையும் படித்து முடித்த இந்த ஜீனியஸ், தன் 12வது வயதில் ‘பிளாஸ்டர்’ என்ற வீடியோ கேமுக்கு கோடிங் எழுதினார்! இதன் வழியாக எலன் மஸ்க் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.32 ஆயிரம்.

படிப்பில் கில்லாடி. என்றாலும் எலன் மஸ்க், உயரம் குறைவானவர். பொடிசாகவும் தெரிவார். எனவே பள்ளியில் இருந்த முரட்டு மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பொழுது போகாதபோது இவரை அழைத்து அடிப்பார்கள்! இதன் காரணமாக சில முறை மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சையும் பெற்றிருக்கிறார். இந்த மன அழுத்தத்தில் இருந்து எலன் மஸ்க் மீள்வதற்குள் அடுத்த இடி பெற்றோரின் விவாகரத்து என்ற வடிவில் இறங்கியது.

தம்பியும், தங்கையும் அம்மாவுடன் செல்ல, அப்பா எரல் மஸ்க்கின் வீட்டில் தங்கி வளர வேண்டிய கட்டாயம் எலன் மஸ்க்குக்கு ஏற்பட்டது. ‘‘நான் செய்த பெரும் தவறு அதுதான். என் அப்பா எரல் மஸ்க், மனிதப் பிறவியே கிடையாது…’’ என பின்னாளில் இது குறித்து பேட்டி அளித்திருக்கிறார் எலன். பொதுவாக இதுபோன்று தனிமை, மன அழுத்தத்துக்கு ஆளாகுபவர்கள் போதைக்கு அடிமையாவார்கள். பெண் சுகம் தேடி ஓடுவார்கள்.

எலன் மஸ்க், அப்படி எதன் பின்னாலும் செல்லவில்லை; அடிமையாகவில்லை. மாறாக, படிப்பில் முழு கவனம் செலுத்தினார். இவரது மொத்த தனிமையும் துக்கமும் வாசிப்புக்கு உரமானது. தன் 17வது வயதில் கனடாவுக்குச் சென்ற எலன் மஸ்க், அம்மா மாயாவின் குடியுரிமை உதவியுடன் கல்லூரியில் சேர்ந்தார். இயற்பியல், பொருளாதாரப் படிப்புகளை நிறைவு செய்துவிட்டு, 1995ம் ஆண்டு தன் சகோதரர் கிம்பலுடன் இணைந்து ‘ஜிப் 2’ நிறுவனத்தைத் தொடங்கினார்.

இதுதான் இன்றைய எலன் மஸ்க் பிசினஸ் சாம்ராஜ்ஜியத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. பின் அந்த நிறுவனத்திலிருந்த எலனின் பங்குகளை காம்பேக் நிறுவனம் 2 கோடி ரூபாய்க்கு வாங்க… தொடர்ந்து ‘எக்ஸ்.காம்’, ‘பேபால்’ என தொடங்கி இன்று ‘ஸ்பேஸ்எக்ஸ்’ வரை எட்டு நிறுவனங்களைத் தொடங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். ‘‘என் 50வது வயதில் செவ்வாய் கிரகத்தில் வசிப்பேன்!’’ என தன்னம்பிக்கையுடன் அறிவிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் எலன் மஸ்க்.

ஆனால், இந்த வெற்றிச் சாதனைகள் எல்லாம் ஒரே இரவில் இவருக்குக் கிடைக்கவில்லை. மீள முடியாத தோல்விகளும், சர்ச்சைகளும் வாழ்க்கை முழுக்க இவரைத் துரத்தியிருக்கின்றன; துரத்தவும் செய்கின்றன. ஆம். 2009ம் ஆண்டு ‘பேபால்’ நிறுவனம் மிக மோசமான வணிக முயற்சி என்று ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது. ‘ஸ்பேஸ்எக்ஸ்’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டபோது வெடித்துச் சிதறியது. டெஸ்லா கார்களின் பேட்டரி திறன் குறித்த சர்ச்சைகள் உலகையே பரபரப்பாக்கின. மூன்று திருமணங்களுமே நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. முறிந்திருக்கின்றன. நடிகை ஆம்பர் ஹெர்டுடன் உறவு முறிந்தபோது அதுகுறித்து எழுதாத பத்திரிகைகளே இல்லை.

அவ்வளவு ஏன், தாய் மாயா தவிர எலன் மஸ்க்கின் ஐடியாக்கள் மீது ஒவ்வொருமுறையும் அவநம்பிக்கையையே பலரும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஒருமுறை கூட தாடி வளர்த்து சரக்கடித்து எலன் மஸ்க் திரியவில்லை. மாறாக, தனிப்பட்ட வாழ்க்கையிலும், பிசினஸிலும் சறுக்கலும் நஷ்டங்களும் ஏற்பட்டபோதெல்லாம் உடனடியாகத் தன் நிறுவனத்துக்குச் செல்வார். சகாக்களுடன் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து விவாதிப்பார்.

‘‘எலனுடன் பணிபுரிவது கடினம். ஒருபோதும் அவரை திருப்திப்படுத்த முடியாது. என்றாலும் அவருடன் வேலை பார்த்த பணியின் ரிசல்ட்டை உற்றுப்பார்த்தால் நாம் சிந்திய ஒவ்வொரு சொட்டு வியர்வையும் அதில் தெரியும். தவறு ஒளி வீசும்!’’ எனப் பெருமையாகப் பேசுகிறார் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ அதிகாரி டோனா சிங்.

எலன் மஸ்க்கின் வெற்றி ரகசியம் என்ன?
கனவுகள்தான். ஆனால், கனவு நிறைவேறியதும் திருப்தி அடைய மாட்டார். உடனே அடுத்த கனவுக்குத் தாவுவார். தாவுகிறார் என்பதைவிட தப்பித்துச் செல்கிறார் என்பதுதான் உண்மை. தப்பித்தல்? யெஸ். தனிமையிலிருந்து தப்பித்தல். அதனால்தான் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் இல்லாதபோது ‘டெஸ்லா’வைத் தொடங்கினார். பேட்டரிகளுக்கான தொழிற்சாலைகளையும், கார்களுக்கான சார்ஜ் மையங்களையும் நிறுவினார். ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தில் ரீயூசபிள் ஃபால்கன் ராக்கெட்டைப் பயன்படுத்தி ‘டெஸ்லா’ காரை பூமியின் சுற்றுப்பாதையில் பறக்கவிட்டார்.

இவை எல்லாமே கனவின் விளைவுகள். சிறுபிள்ளைத்தனமானவை என தொடக்கத்தில் கிண்டலடிக்கப்பட்டவை. ‘‘எனக்கு மனிதர்களுடனான உறவைப் பராமரிப்பதுதான் கடினமாக இருக்கிறது. வெறுமையான வீடே என்னை வரவேற்கிறது. ஆட்களற்ற வீட்டில் எனது காலடியோசைகளே என்னை பயமுறுத்துகின்றன. காலையில் விழிக்கும்போது என்னருகில் யாரும் இல்லை. வாழ்நாள் முழுக்க நீடிக்கும் உறவைத் தேடிக் கொண்டிருக்கிறேன்…’’ தனது புதிய காரின் அறிமுக விழாவில் எலன் மஸ்க் இப்படிக் கூறியிருக்கிறார்.

தனிமையில் வாடுகிறேன்… எனக்கென்று யாருமே இல்லை… என்றெல்லாம் புலம்பி வாழும் வாழ்க்கையை வீணாக்குபவர்களாக நீங்கள் இருந்தால் – ஒருமுறை எலன் மஸ்க்கின் வாழ்க்கையைப் பாருங்கள். தனிமையிலும் மன அழுத்தத்திலும்தான் இன்றும் இவர் வாழ்கிறார். ஆனால், அதையே தன் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார். செல்வந்தர்களிடம் இருந்தும், ஜெயித்தவர்களிடம் இருந்தும் பிசினஸ் ஃபார்முலாக்களை மட்டும் கற்காமல், உளவியல் பலகீனங்களை எப்படி பலமாக மாற்றுவது என்றும் கற்றால் – குண்டூசிகளை விற்றுக் கூட வாழ்க்கையில் முன்னேற முடியும். எலன் மஸ்க்கின் வாழ்க்கை இந்த வரியைத்தான் உலகுக்கு அழுத்தமாக அறிவிக்கிறது.

–  ச.அன்பரசு
Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions