தென்னங்கீற்று பின்னும் குடும்பத்தில் பிறந்து ஐ.ஏ.எஸ். ஆன தமிழர்!

0

இந்திய ஆட்சிப்பணிக்காண தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மாநில அளவில் 3வது இடத்தில் ஐ.ஏ.எஸ் ஆக தேர்ச்சியடைந்துள்ளார் சிவகுருபிரபாகரன் (29). இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேல ஒட்டங்காடு கிராமம். சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த பிரபாகரன் இன்று ஐ.ஏ.எஸ். ஆகி உள்ளது அந்த கிராமத்தையே உற்சாகப்படுத்தி உள்ளது.

தாய் கனகா, தந்தை மாரிமுத்து, பாட்டி நல்லம்மாள், இவர்களின் தொழில் தென்னங்கீற்று பின்னி விற்பது. அல்லது மரமில்லில் கூலிக்கு வேலை செய்வது, பால் மாடு வளர்ப்பு. இந்தக் குடும்பத்தில் பிறந்த சிவகுருபிரபாகரன் தொடக்கப்பள்ளி படிப்பை அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அருகில் உள்ள புனவாசல் கிராமத்தில் உள்ள கிருஸ்தவ அரசு உதவி பெரும் பள்ளியிலும் படித்தார். படிப்பில் சராசரி தான்.

தொடர்ந்து புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டய படிப்பு முடித்துவிட்டு பி.இ சிவில் பொறியியல் படிப்பை வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில்  படித்தார். பின்னர் எம்.டெக் சென்னை ஐ.ஐ.டியில்  படித்த இவர், தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுதினார் ரயில்வேயில் பணி கிடைத்தது. அந்த பணியே போதும் என்று அவரது உறவினர்களும், நண்பர்களும் சொன்ன போதும், என் கனவு கலெக்டர் ஆவது என்று சொல்லிவிட்டு தொடர்ந்து படித்தார், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார், இன்று மாநில அளவில் 3 வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து விடா முயற்சியால் தனது கனவை நனவாக்கி கிராமத்தையே மகிழ்ச்சியாக்கிய பிரபாகரனை அவர் படித்த பள்ளி முதல் உறவினர்கள், நண்பர்கள், கிராமத்தினர் கொண்டாடி வருகின்றனர். அவரது அம்மா கனகா, “பிரபாகரன் பிறந்தது முதல் வறுமை தான். கூலி வேலை செய்து தான் சாப்பிடனும். நாங்க கீற்று பின்னும் போது விடுமுறை நாளில் கீற்று பின்னுவான். அப்போல்லாம் ‘ஒரு நாள் நானும் பெரிய அதிகாரியா வருவேன்மா’ என்று சொல்வான் அதே போல இன்னைக்கு கலெக்டர் ஆகிட்டான்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

Share.

About Author

தங்களது மேலான கருத்தை பதிவிடவும்

*


Hit Counter provided by technology news
aatroram.com .Copyright @ 2014.Powered By Malaris Software solutions