டெல்லி செங்கோட்டை பராமரிப்பை கார்ப்ரேட் நிறுவனத்திடம் ஒப்படைப்பதா?-மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

0

பாரம்பரியம் மிகுந்த டெல்லி செங்கோட்டையை பராமரிக்க கார்ப்பரேட் நிறுவனத்திடம் மத்தியஅரசு ஒப்படைப்பதா. அடுத்து எதை ஒப்படைக்கப்போகிறீர்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கும் திட்டத்தின் கீழ் டெல்லி செங்கோட்டையை பராமரிக்கும் பொறுப்பு தி டால்மியா பாரத் குரூப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.5 கோடி அந்த நிறுவனத்துக்கு மத்திய அ ரசு வழங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு போடப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ரூ.5 கோடி வீதம், ரூ.25 கோடியை டால்மியா நிறுவனம் பெற்றுக்கொண்டு டெல்லி செங்கோட்டையை பராமரிக்க இருக்கிறது.

இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, பாரம்பரியச் சின்னத்தை அரசுநிறுவனம் பராமரிக்காமல், தனியாரிடம், கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைப்பது ஏற்கமுடியாது எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவான் கேரா கூறியதாவது:

நாட்டின் பாரம்பரியமான சின்னங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு தனியார் நிறுவனத்திடம் பராமரிப்புக்காக ஒப்படைக்கிறது. அப்படியென்றால், இந்தியாவின் பராம்பரியச் சின்னங்கள் குறித்து மத்தியஅரசு என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறது. அதை என்ன செய்யலாம் என நினைக்கிறது.

இப்போது முதலில் டெல்லி செங்கோட்டையை பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்கள். அடுத்ததாக நாடாளுமன்றம், லோக்கல்யான் மார்க், உச்ச நீதிமன்றம் என அடுத்தடுத்து ஒப்படைக்கத் திட்டம் இருக்கிறதா எனவும் தெரியவில்லை.

இந்திய தொல்லியத்துறையிடம் இந்தப் பணியை ஒப்படைக்கலாமே, ஏன் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

டெல்லி செங்கோட்டையை பராமரிக்கும் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இன்டிகோ ஏர்லைன்ஸ், ஜிஎம்ஆர் குழுமம், டால்மியா குழுமம் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி காணப்பட்டது. இறுதியாக தி டால்மியா பாரத் குரூப் ஒப்பந்தத்தைப் பெற்றது.

இந்த ஒப்பந்தத்தின்படி, டால்மியா நிறுவனம், அடுத்த 6 மாதங்களுக்குள், டெல்லி செங்கோட்டியில், குடிநீர்வசதிகள், சுற்றுலாப்பயணிகள் அமர்வதற்கான நாற்காலி வசதிகள், பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகைகள், கழிப்பறை வசதிகள், பாதைகள் சீரமைப்பு, புனரமைப்பு பணிகள் உள்ளிட்டவற்றைச் செய்ய உள்ளனர்.

மேலும், செங்கோட்டையின் முகப்பிலும், உள்பகுதியிலும் 3டி புரெஜெக்சன் அமைத்தல், பேட்டரி வாகனங்கள் இயக்குதல், அந்த வாகனங்களை சார்ஜிங் மையம் அமைத்தல், உள்ளிட்டவற்றை அந்த நிறுவனம் செய்ய இருக்கிறது.

இது குறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறுகையில், பாரம்பரியச் சின்னங்களை பராமரிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது கடந்த ஆண்டில் இருந்தே தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் பணம் ஏதும் ஈட்டப்போவதில்லை, மாறாகச் செலவுதான் செய்கின்றன. கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கட்சி பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பராமரிக்க என்ன நடவடிக்கை எடுத்தது. மிகவும் மோசமான நிலையில்தான் வைத்திருந்தது. ஆதலால், தனியார் அதைப் பராமரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதைத் தவறாக சித்தரிக்கத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions