இன்டர்நெட் உபயோக சீர்குலைவு

0
இன்டர்நெட் உபயோக சீர்குலைவு

 இன்டர்நெட்டை எத்தனை பேர் தங்கள் முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? நல்ல வி‌ஷயங்களை விட அதிகமாய் கலாசார சீரழிவுக்கான வி‌ஷயங்களே இன்டர்நெட் மூலம் அதிகம் பார்க்கப்படுகின்றன. அதிலும் பெரும் அளவில் இளைஞர்கள் தான் இன்டர்நெட் உபயோகத்திற்கு அடிமையாகி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒரு நோயாக மாறி விட்டதாக அமெரிக்க உளவியல் கழகம் கூறி, அதற்கு இன்டர்நெட் உபயோக சீர்குலைவு என்றும் பெயரிட்டிருக்கிறது.
இன்டர்நெட் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது, இன்டர்நெட் இணைப்பு இல்லாத நேரங்களில் எதையோ இழந்தது போலத் தோன்றுவது, இன்டர்நெட் தடைப்படும்போது மற்றவர்களிடம் கோபித்துக் கொள்வது, ஒழுங்காக மற்ற வேலைகளைப் பார்க்க முடியாமல், அந்த வேலை நேரத்தையும் இன்டர்நெட்டிலேயே செலவழிப்பது, நிஜ மனிதர்களிடம் பழகும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு இன்டர்நெட்டில் அரட்டை, விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவது போன்றவை எல்லாம் அந்த நோய் உள்ளவர்களின் தன்மைகள் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

அதே போல் செல்போன் தகவல் தெரிவிக்கும் சாதனமாய் பயன்படுவது சிலருக்கு மட்டும் தான். இன்றைய பெண்கள் செல்போனை வெட்டிப் பேச்சுக்குத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்தும் டீக்கடையில் அமர்ந்தும் வெட்டிப் பேச்சு பேசிப் பொழுதைக் கழிக்கும் பெரிசுகளைப் பலரும் கிண்டல் செய்வதுண்டு. ஆனால் இன்று செல்போனில் அதையே இன்றைய இளைய தலைமுறையினர் செய்வது அவர்களுடைய எதிர்காலம் மட்டுமல்லாமல், அவர்களால் உருவாகப் போகும் சமூக எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகப்படுத்தி வருகிறது.

அறிய வேண்டியயை, செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்க, எந்நேரமும் செல்போனில் பேசிக் கொண்டும், மெசேஜ் அனுப்பிக்கொண்டும் தங்கள் நேரத்தை இளைய சமுதாயம் இழந்து கொண்டிருப்பது வேதனை தருகிறது. நேரடி வெட்டிப் பேச்சுகள் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைவது உண்டு. ஆனால் செல்போனில் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பேசும் வசதி இருப்பதால் இது முடிவுக்கு வருவதே இல்லை.

இளமைக்காலம் இனிமையானது. இது பொன்னான காலமும் கூட. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் விதைக்கும் காலமும் இதுதான். இந்தக் காலத்தை திருடிக் கொண்டு வீணடிக்க எதையும், யாரையும் அனுமதிக்காதீர்கள். இன்டர்நெட், செல்போன் வசதிகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்துங்கள். அதை ஆக்கபூர்வ வேலைகளுக்காக பயன்படுத்தி, அதில் உங்கள் கட்டுப்பாடு இருக்கட்டும்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions