குர்ஆனிய தத்துவங்கள்தான் எக்காலமும் நிலைத்து நிற்கக்கூடியவை

0

தமிழகத்தில் திருக்குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் பள்ளிகொண்டா மத்ரஸே ஜியாவுல் உலூம் பட்டமளிப்பு விழாவில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேச்சு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மதரஸே ஜியாவுல் உலூம் 12ம் ஆண்டு ஹாபிஸ் பட்டமளிப்பு விழா 29.04.2018 அன்று குடியாத்தம் தாருல் உலூம் தைபிய்யா மதரஸாவில் நிறுவனர் மவ்லானா முஹம்மது அய்யூப் ரஹ்மானி தலைமையில் நடைபெற்றது.

வேலூர் ஜாமிஆ பாக்கியாத்துல் சாலிஹாத் மதரஸா பேராசிரியர் மவ்லானா அப்துல் ஹமீது பாகவி, ஆம்பூர் முஹையித்தீன் புரா மஸ்ஜித் இமாம் மவ்லானா முஹம்மது ஜியாவுதீன் மதனீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்புரையாற்றும் போது கூறியதாவது:-

வராற்றுச்சிறப்புக்குரிய வேலூர் மாவட்டத்தில் மத்திய பகுதியில் நெஞ்சத் தாமரையாக இருக்கக்கூடிய பள்ளிகொண்டா நகரில் ஆன்மீக பேரொழியாக விளங்கிய மறைந்த முப்தி மவ்லானா ஜியாவுதீன் அஹ்மது சாகிப் அமானி ஹஜ்ரத் பெயரில் இயங்கும் இச்சிறப்புயர் மதரஸா பட்டளிப்பு விழாவில் பங்கேற்கக்கூடிய நல் வாய்ப்பினை தந்தமைக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமானி ஹஜ்ரத்

அமானி ஹஜ்ரத் அவர்கள் ஆன்மீகத்திலும், அரசியலிலும் தெளிர்ந்த நீரோடையாக தீன் மனம் பரப்பியுள்ளார்கள். சுதந்திர இந்தியாவில் இந்திய முஸ்லிம்களின் அரசியல் பணிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கு பொறுப்பேற்றபின் 1958ம் ஆண்டு திருச்சியில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் ஊழியர் மாநாடு நடத்தினார்கள். முஸ்லிம் லீக் பேரியக்கம் அரசியல் பணிகளோடு ஆன்மீகத்தெளிவையும் பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு கண்ணியத்திற்குரிய உலமாக்களின் அமைப்பு தேவை என உறுதி பூண்டு ஜமாஅத்துல் உலமா சபையை உருவாக்க முடிவு செய்து முஸ்லிம் லீக் ஊழியர் மாநாட்டிலேயே அறிவிப்பு செய்து அதன் முதல் அமைப்பாளராக இந்த ஊர் பள்ளிகொண்டாவை சேர்ந்த அமானி ஹஜ்ரத் அவர்கள்தான் பொறுப்பேற்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.

ஆன்மீக-அரசியல் பணி

அமானி ஹஜ்ரத் அவர்களின் வழிநின்று அவர்களுடைய மருமகனார் கர்நாடக அமீரே ஷரீஅத்தாக இருந்த மவ்லானா அபூ சுவூது அஹ்மது சாகிபும், அவர் மகனார் அமீரே ஷரீஅத்தாக விளங்கிய மவ்லானா அஷ்ரப் அலி சாகிப் ஆகியோர் ஆன்மீக அரசியல் பணிகளில் தெளிர்ந்த நீரோடையாக விளங்கியதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அனைத்து மாநாடுகளிலும் மிகவும் ஈடுபாட்டோடு பங்கேற்றதை இங்கே நினைவு கூற விரும்புகின்றேன். இவர்களைப்போல் இன்று நம்மிடையே முஹம்மது அய்யூப் ரஹ்மானி சாகிபும் செயலாற்றி வருகின்றார்கள். உலமாக்களினுடைய ஆன்மீக வழிகாட்டுதலோடு நாம் அரசியல் பணிகள் மேற்கொள்ளும் காலமெல்லாம் நமக்கு வெற்றிதான்.

பள்ளிகொண்டா தேர்தல் பணி எம்.எல்.ஏ.வாக துணை நின்றது

பள்ளிகொண்டா நகரை என் வாழ்நாளில் மறக்க முடியாது. சென்ற பாராளுமன்ற தேர்தலில் தலைவரின் அறிவுரையேற்று இந்த தொகுதிக்கு நான் வந்தபோது எந்த ஊரிலிருந்து பணியாற்றலாம் என்று சிந்தித்தபோது வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் , குடியாத்தம் போன்ற பெரு நகரங்கள் இருந்தாலும் அமைதியாக இருந்து தொகுதியின் நடுப்பகுதியாக இருக்கக்கூடிய பள்ளிகொண்டா ஊரிலிருந்து பணியாற்றுவது சிறந்தது என நாங்கள் முடிவு செய்து இவ்வூரில் 40 நாட்கள் தொடர்ந்து தேர்தல் பணியாற்றக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பினை பெற்றேன். எனவே இவ்வூரையும், இவ்வூரிலுள்ள மக்களையும் நன்கு அறிவேன். இங்கு பெற்ற தேர்தல் அனுபவங்கள் சென்ற 2016 சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் நான் வேட்பாளராக களம்கண்டு உங்கள் அனைவர்களுடைய துஆவோடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கு துணை நின்றதை இங்கே நன்றி உணர்வோடு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாய் மதரஸா

மதரஸா கல்விமுறை என்பது தமிழகத்திற்கு இந்த மாவட்டத்தின் தலைநகர் வேலூரில் இருக்கக்கூடிய ஜாமிஆ பாக்கியத்துல் சாலிஹாத் மதரஸாதான் அனைத்து மதரஸாக்களுக்கும் தாய் மதரஸாவாகும். அதை நிறுவிய ஆலா ஹஜ்ரத்தான் மதரஸா பாடத்திட்டங்களை முன்வடிவம் செய்து சமுதாய மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதே காலக்கட்டத்திலேயே லால்பேட்டையில் இருக்கும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் மதரஸாவும் துவங்கப்பட்டு சமுதாய பணிகளாற்றி வருகின்றது.

தமிழக மதரஸாக்களின் நிலை

இவ்வருடம் இந்த மதரஸாவில் 24 ஹாபிழ்கள் பட்டம் பெறுகின்றனர். அவர்களில் 6 பேர்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள். நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 25 சதவீத ஹாபிழ்கள்தான் படித்திருக்கின்றார்கள். இம்மதரஸாவின் நிலைதான் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மதரஸாக்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது என்பதை வேதனையோடு இங்கே பதிவு செய்கின்றேன்.
தமிழகத்திலுள்ள மிகுதியான மதரஸாக்களில் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்தான் வரவழைக்கப்பட்டு மாhக்கக் கல்வியை பயிலும் நிலை தற்போது உள்ளது. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் படிக்கக் கூடாது என்பது நம்முடைய நோக்கமல்ல. ஆனால் தமிழகத்தில் நம் சமுதாய மக்கள் மத்தியிலே மதரஸா கல்விக்கு நாம் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய உண்மையாகும். இப்படியே சென்றால் நாளை தமிழகத்தை சேர்ந்த உலமாக்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். இவ்விஷயத்தில் அனைத்து ஜமாஅத்தினரும் சிந்தித்து செயலாற்றுவது காலத்தின் கடமையாகும்.

பரக்கத்தான வியாபாரம்

ஒரு காலம் இருந்தது. அப்போது ஒரு குடும்பத்தில் ஒருவர் ஆலிமாக, ஹாபிழ்களாக இருப்பார்கள். குடும்ப வியாபாரங்களில் உடன் பிறந்தவர்களோடு ஆலிம், ஹாபிழ்களையும் பங்குதாரர்களாக இணைத்து குடும்ப வியாபாரங்களை வெற்றிகரமாக பரக்கத்தோடு நடத்தி வந்திருக்கின்றனர். இன்று இந்த நிலை இல்லாத காரணத்தால் நம் சமுதாயத்திற்கென்றே இருந்த தோல் வியாபாரம் உள்ளிட்ட வணிகங்கள் இன்று நம்மிடத்திலிருந்து சென்று கொண்டிருக்கின்றது.
ஹாபிழ்கள் – தலைசிறந்த அறிஞர்கள்
ஹாபிழ், ஆலிம் பட்டம் பெற்றவர்கள் உலகக் கல்வி படிப்பதற்கு எந்த தடையுமில்லை. 10, 12 வயதில் ஹாபிழ் திருக்குர்ஆனை மனணம் செய்தவர்கள் இறைவேதத்தின் ஞானத்தால் ஞாபக சக்தி அதிகரித்து உயர்படிப்புக்களை படிக்க முடியும் என்பது எதார்த்த உண்மையாகும். என் சொந்த ஊர் காயல்பட்டினத்தில் மட்டும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் பி.இ., எம்.இ., எம்.பி.பி.எஸ்., எம்.டி., உள்ளிட்ட உயர் படிப்புக்களை படித்த அறிஞர்களாக உருவாகியிருப்பதை இங்கே தெளிவுப்படுத்த விரும்புகின்றேன்.

பார்வையற்ற சகோதரரின் ஞானம்

என் உடன்பிறந்த இளைய சகோதரர் முஹம்மது உதுமான் பிறவிலேயே கண்பார்வையற்றவர். அண்மையில் மறைந்த என் தந்தையாரின் பெரும் முயற்சியால் அவர்களுடனேயே தொழில் செய்து வந்த கொல்கத்தாவுக்கு என் சகோதரரை சிறு வயதிலேயே அழைத்து சென்று திருக்குர்ஆன் மனணம் செய்த ஹாபிழ் ஆக்கினார்கள். தொடர்ந்து சென்னையில் இருந்த காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு படிக்க வைத்தார்கள். கண்பார்வையற்ற என் சகோதரர் முஹம்மது உதுமான் இன்று திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழாகவும், பி.ஏ. வரலாறு படித்த பட்டதாரியாகவும் விளங்குகின்றார் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருவதோடு என் தந்தை ஹக்கிலும் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்.

பட்டயப்படிப்பு படித்து ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள்

இப்படியாக திருக்குர்ஆன மனனம் செய்த ஹாபிழ்களும், மார்க்க கல்வி பயின்ற ஆலிம்களும் உலகக் கல்வியில் உயர்ந்த நிலை அடைய முடியும். தற்போது ஜமாஅத்துல் உலமா சபையினுடைய மாநில பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளில் பலர் மார்க்கக் கல்வியோடு, உலகக் கல்வியிலும் பி.எச்.டி., எம்.பில். உள்ளிட்ட பட்டய படிப்புக்களை படித்த அறிஞர்களாக விளங்கி வருகின்றார்.
எனவே சமுதாயத்தினுடைய பெருமக்கள் மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

அருள் மருந்து – திருக்குர்ஆன்

திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களுடைய நிலை மிக உயர்ந்த இடமாகும். திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலக மாந்தர்கள் அனைவர்களுக்கும் வழிகாட்டக்குடிய திருநெறியாக “”””திக்ரூல் ஆலமீன்””னாக இருக்கின்றது. திருக்குர்ஆன் கிராஅத்தை கேட்டால் மனதிற்கு இதமாக இருக்கும். ஓதினால் நம் இதயத்தில் ஒளியூட்டுவதாக இருக்கும். அதையே அர்த்தத்தோடு ஓதினால் அன்றாட நம் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடிய அருள் மருந்தாக திருக்குர்ஆன் விளங்குகின்றது.
திருக்குர்ஆன் பல்கலைக்கழகம்
திருக்குர்ஆனின் தத்துவங்களை (குரானோ கிராபி) உலக மக்களுக்கு பரப்புரை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் குர்ஆன் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் பல்லாண்டு காலமாக வலியுறுத்தி வருகின்றார்கள். குர்ஆனிய தத்துவங்கள்தான் எக்காலமும் நிலைத்து நிற்கக் கூடியவை.

எனவே தமிழகத்தில் திருக்குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாகும் முயற்சிக்கு கண்ணியத்திற்குரிய உலமா பெருமக்கள் குறிப்பாக இவ்விழாவுக்கு தலைமையேற்றிருக்கக்கூடிய மவ்லானா முஹம்மது அய்யூப் ரஹ்மானி போன்றவர்கள் வழிகாட்ட வேண்டும்.

மனிதநேயம் செத்து விட்டது!

நம் தாய்நாடு இந்தியா தற்போது பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகின்றோம். சிறுபான்மை முஸ்லிம்கள் , தாழ்த்தப்பட்ட மக்கள் நாளும் சொல்லெனா துயத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். கற்பு என்றால் என்ன என்று தெரியாத கஷ்மீர் சிறுமி ஆஷிபா பானு 8 நாட்கள் 8 கொடியவர்களால் மானபங்கப்படுத்தப் பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த படுகொலை செய்தவர்கள் முஸ்லிம் என்பதற்காகவே சிறுமி ஆஷிபா பானுவை அக்கொடுமைகளுக்கு உள்ளாக்கினோம் என்பதை தெரிவிக்கும் அளவுக்கு நாட்டில் மனிதநேயமும், மத நல்லிணக்கமும் செத்துவிட்டது. நீதி நியாயத்திற்கு இந்நாட்டில் இடமுண்டா? என்று கேட்கும் அளவுக்கு நாடு கெட்டுக் கொண்டிருக்கிறது.

பலவீனப்படுத்துவோரை புறம்தள்ள வேண்டும்
உலகத்திற்கு வழிகாட்டும் திருநெறியாக திருக்குர்ஆனும் சிறந்த முன்மாதிரி தலைவராக முஹம்மது நபி (ஸல்) அவர்களை பெற்றிருக்கக்கூடிய நாம் முஸ்லிம் தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன? என்பதை நாம் சிந்தனைக்கு எடுத்து கொள்ள வேண்டும். ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்திற்கும் முன்னுதாரனமாக இருக்கக்கூடிய இஸ்லாமிய சமுதாயத்தில் சிலர் செய்யக்கூடிய தவறின் காரணமாக நம் சமுதாயம் தவறாக பரப்புரை செய்யப்படுகின்றது. கேவலம் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய ஈத் பெருநாட்கள் இரண்டு, மூன்று தினங்கள் கொண்டாடப் படுவதை யாராவது கவலைப்படு கின்றார்களா? பொங்கல், தீபாவளி, கிறுஸ்துமஸ் பெருநாட்களை இரண்டு, மூன்று தினங்கள் கொண்டாடினால் அந்த சமுதாயத்தினர் சும்மா இருப்பார்களா? பலவீனமான செயல்களில் யார் ஈடுபட்டாலும் நம் சமுதாயம் புறம் தள்ள வேண்டும்.

மஹல்லா ஜமாஅத் கட்டுக்கோப்பு

முஸ்லிம் சமுதாயத்தின் இயற்கையான அமைப்பு பள்ளிவாசலை மையமாக கொண்ட மஹல்லா ஜமாஅத்துக்கள் மட்டுமே. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கபிலாக்கள் என்ற முறை இருந்தது. இன்று தமிழகத்தில் மஹல்லா ஜமாஅத்துக்கள் இருக்கின்றது. ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்களிலும் முஸ்லிம்களுடைய பிறப்பு, இறப்பு பராமரிக்கப்பட வேண்டும். நம் சமுதாய மக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்டால் காவல்நிலையம், நீதிமன்றம் செல்வதை தவிர்த்து மஹல்லா ஜமாஅத்களிலேயே உலமாக்கள், உமராக்களை கொண்ட ஷரீஅத் பஞ்சாயத்கள் மூலம் நம் பிரச்சினைகளை நாமே தீர்த்து கொள்ள வேண்டும். நம் சமூகத்திற்கென்று நபிகள் நாயகம் வழிகட்டிருக்கக்கூடிய இஸ்லாமிய சமுதாயத்திக் கடமைகளில் ஒன்றான சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை செலுத்தும் ஜகாத் என்னும் ஏழை வரியை பைத்துல்மால் மூலமாக வசூல் செய்து, மஹல்லா ஜமாஅத்களிலுள்ள ஏழைகளுக்கு கல்வி உதவி, தொழில் உதவி உள்ளிட்ட உதவிகள் செய்வதன் மூலம் வட்டியின் கொடுமையிலிருந்தும், பசி, பட்டினியிலிருந்தும் நம் சமுதாயத்தை பாதுகாக்க முடியும். நம் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொண்டால் காவல்நிலையம், நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. முத்தலாக் பிரச்சினையை கொண்டுவந்து சிறைச்சாலைக்கு அனுப்புவோம் என்று சொல்லக்கூடிய இன்றைய ஆட்சியாளர்களுக்கு நமது அறிவுப்பூர்வமான நடவடிக்கையினால் அவர்களின் அவசரகதி சட்டங்களை நாம் புறக்கணித்து விடலாம். நம்மில் யாராவது காவல்நிலையம், நீதிமன்றங்கள் சென்றால் தானே அரசின் சட்டங்கள் நம்மை கேள்வி கேட்க முடியும். நாம் அங்கு செல்லவில்லை என்று சொன்னால் அவர்களின் சட்டங்களால் நமக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்க முடியாது.

எனவே இதை உணர்ந்த வகையிலே மஹல்லா ஜமாஅத்தை கட்டுக்கோப்போடு வைப்பது நம் அனைவர்கள் மீதும் காலத்தால் செய்ய வேண்டிய பணியாக இருக்கின்றது.

ஹக் அல்லாஹ் – நூர் முஹம்மது (ஸல்)
இஸ்லாமியர்களுக்கு முன் மாதிரியாக முஸ்லிம் நாடுகளோ, தேச தலைவர்களோ கிடையாது. அவை அனைத்தும் காலத்தால் மாற்றப்பட்டுவிடும். நான்கூட சென்ற மாதம் சவூதி அரேபியா நாட்டிற்கு உம்ரா, நபிகளார் ஜியாரத் செய்ய சென்றிருந்தேன். சவூதி அரேபியாவின் இன்றைய ஆட்சியாளர்கள் சினிமா தியேட்டர்கள் திறந்து வருகின்றார்கள். பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி, கேளிக்கை விடுதிக்கு அனுமதி என பல்வேறு தடாலடி அறிவிப்புகளை செய்து இஸ்லாத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற பல்வேறு முஸ்லிம் நாடுகள் இருப்பதை நாம் அறிவோம்.
எனவே என்றும் நமக்கே வழிகாட்டக்கூடியதாக இருப்பது திருக்குர்ஆனும், நபிகள் நாயக்கத்தின் வாழ்க்கை முறைகள் மட்டுமே. இங்கே பெங்களூரிலிருந்து வந்திருந்த மாணவர் பாடிய வார்த்தைகளில் சொல்வதுபோல் ஹக் அல்லாஹ் – இறை உண்மை, நூர் முஹம்மது ஸல்லல்லாஹா-இறைத்தூதரின் ஒளிமிக்க வாழ்க்கை இவ்விரண்டையும் உறுதியாக நாம் கடைபிடிப்பதின் மூலம் நாம் வாழ்க்கையில் எக்காலத்திற்கும் சிறந்தவர்களாக விளங்குவோம்.

இவ்வாறு கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய துணைச்செயலாளர் எச். அப்துல் பாசித், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சான்பாஷா, மேற்கு மாவட்ட செயலாளர் குடியாத்தம் ரஹ்மத்துல்லாகான், தலைமை நிலைய பேச்சாளர் குடியாத்தம் கவிஞர் பஸ்லுல்லாஹ், முஸ்லிம் மாணவர் பேரவை வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹிம், மேற்கு மாவட்ட செயலாளர் பள்ளிகொண்டா அபூபக்கர் சித்தீக், எஸ்.டி.யூ. மாநில தலைவர் என்.பி. வாகித், முன்னாள் கவுன்சிலர் ரபிக் அஹமது, மாவட்ட துணைச்செயலாளர் பள்ளிகொண்டா அக்பர் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதரஸா நிர்வாகிகளும், நகர முஸ்லிம் லீக் தலைவர் ஆரிப் பாஷா, செயலாளர் ஜாபர், மூத்த தலைவர் அக்பர் பாஷா, சாலார் முஹம்மது அர்ஷத் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions