நீட் என்னும் அரக்கன்..

0

மூக்குத்திதானே என்று விட்டுவிடாதீர்கள்!
முப்பது மதிப்பெண்களுக்கான விடைகள்
முடங்கியிருக்கலாம் அதனுள்!
முழுதாகக் கழற்றிவிடுங்கள்
முடிந்தால் மூக்கையும் சேர்த்து!

காதில் என்ன கம்மல்தானே?
கண்டிப்பாக கழற்றிவிடுங்கள்!
கடைசியிரண்டு கேள்விகளுக்கான
விடைகள் கட்டிவைக்கப்பட்டிருக்கலாம்
அதனுள்!

என்ன அக்கிரமம் இது?
முழுக்கைச் சட்டையுடன்
முன்னால் ஒருவன்…
முழங்கையே போனாலும் சரி
முடிந்தவரை வெட்டி எறியுங்கள்!

பின்னால் யாரது
பின்னல் ஜடையுடன்?
பிரித்துத் தேடுங்கள்!
இல்லையேல் பிடுங்கி வீசுங்கள்!

உலகமே பார்த்தாலும் சரி
உள்ளாடைகளை உதறிப் பாருங்கள்!
உயிரியல் வினாக்களுக்கு
உள்ளுக்குள் விடைகளிருக்கலாம்!

இது என்ன நீட்டிற்கு வந்த சோதனை?
நீட்டச் சொல்லுங்கள் கரங்களை!
கத்தரித்து வீசுங்கள்
கட்டியிருக்கும் கயிறுகளை!
கணித விடைகள்
கயிற்றினுள் ஒளிந்திருக்கலாம்!

புல்லரிக்க வைக்கிறது உங்களின்
புலனாய்வு அறிவு!
கென்ய இராணுவமும் மிரள்கிறது உங்கள்
கெடுபிடிகள் கண்டு!

பயங்கரமாய்த் தேடியும்
பாராட்ட வார்த்தைகள் இல்லை!
பார்க்கும்போதே நினைவில் வருகிறது
பாக்கிஸ்தான் எல்லை!

பார்த்துக்கொண்டிருந்த ஒருவர்
பதறியபடி கேட்டார்!
இவர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்தானே?
இல்லை மாணவர்கள் என்றேன்!

இவர்கள் தேடப்படும் குற்றவாளிகளா? என்றார்!
இல்லை தேர்வெழுத வந்தவர்கள் என்றேன்!

இது வெடிகுண்டு சோதனைதானே? என்றார்
சிலருக்கு வெறி பிடித்திருப்பதால் வந்த
சோதனை என்றேன்!

மதக்கலவரம் செய்தவர்களா? என்றார்!
அவர்களையெல்லாம் மந்திரிகளாக்கிவிட்டோம்,
இவர்கள் மருத்துவம் படிக்க
ஆசைப்பட்டவர்கள் என்றேன்!

ஆட்சியா இது என்று
அசிங்கமாகத் திட்டினார்!
‘ஆன்டி இந்தியன்’ என்ற சத்தத்தோடு
ஆறேழு கற்கள் வந்து விழுந்தன!

கலங்கிப்போன மனிதர்
காப்பாற்றுங்கள் என்றார்!

– நிலவை.பார்த்திபன்

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions