ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்… 

0

தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்… 

இது சத்தியமாக விளம்பரம் அல்ல. ஒரு மனிதநேய பண்பாளரைப் பற்றிய கட்டுரை

இன்று நான் இந்தப் பதிவின் மூலம் ஆதிகால அசோகரையோ அல்லது குறு நில மன்னர்களியோ அறிமுகம் செய்ய முன்வரவில்லை.

கடந்த 1980-90 களில் தஞ்சாவூரில் தனி மனிதராக மனிதநேய பண்பாளராக நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஒரு வள்ளலை இங்கு தஞ்சையின் மைந்தன் என்ற முறையில் மிகப் பெருமையுடன் இங்கு சொல்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

அன்னாரைப் பற்றி முழுமையாக எனக்குத் தெரியாது எனினும் எனக்குத் தெரிந்த விடயங்களை இங்கு பகிர்கின்றேன்.

தஞ்சாவூர் மக்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியா ஒரு மாமனிதர்.

ஏழ்மையில் பிறந்து தஞ்சாவூர் கீழவாசல் ரஹிம் பலசரக்கு கடையில் தனது வாலிப வயதில் வேலை செய்து அதன் பின் சிங்கப்பூர் சென்று தனது கடின உழைப்பால் சிறுது சிறிதாக முன்னேற்றம் கண்டவர்.

தஞ்சாவூர் ஸ்ரீனிவாசபுரம் கிரி சாலையில் வெங்கடேஸ்வரா பள்ளிக்கு அருகில் வசித்து வந்தவர் சிங்கப்பூரில் பாரீஸ் புக் செண்டர் எனும் புத்தக வெளியீடு மற்றும் புத்தக விற்பனையில் பொருளீட்டி தஞ்சையில் அன்னீ ஹால். கவிதா மன்றம்,  கவிதாலயா திருமண மண்டபங்களை நடத்தி வந்தார்.

1990 களில் தனி மனிதராக தஞ்சையின் அனைத்து சாலைகளிலும் சாலை ஓரங்களில் இரு புறங்களிலும் மரங்களை நட்டு இரும்புக் கூண்டு அமைத்தது மட்டுமல்லாமல் அதற்கென பார்வையாளர்களை நியமித்து தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் தண்ணீர் ஊற்றி மரங்களை வளர்த்தார்.

அதற்கு முன் நான் சரித்திர பாடங்களில் தான் அசோக சக்கரவர்த்தி சாலை ஓரங்களில் மரங்களி நட்டார் என்பதை படித்து இருக்கின்றேன். இவரை அதற்கும் மேலாக நான் பார்த்தேன்.

இன்று அவர் நட்டு வளர்த்த மரங்கள்தான் இன்றும் வானுயர நின்று நிழல் தருவதுடன் மழையைக் கொண்டு வருகின்றது. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என விழிப்புணவை தூண்டுக்கின்ற
பல இயக்கங்கள் பெயரளவில் இருப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் இவர் தனி ஒருவராக இத்திட்டத்தை செயல்படுத்தினார். அதில் வெற்றியும் கண்டார்.

யார் இவர்களின் அறக்கட்டளை நிர்வாகிகளை அனுகினாலும் அவர்கள் சொல்லும் இடங்களில் மரங்களை நட்டு கூண்டுகள் அமைத்து பராமரித்து தருவார்கள். தனியார் இடங்களிலும் மரம் நட்டு வந்தார். இன்று தஞ்சையில் முக்கிய வீதிகளிலும், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலக வளாகங்கள் அனைத்திலும் இவர் நட்ட மரங்கல மக்களுக்கு பயன் தருகின்றன.

ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் உதவிகளை செய்யும் கர்ணன் இவர். கல்வி உதவி தொகைகளை வழங்கி பல ஏழை எளியோரை படிக்க வைத்தவர்.

தஞ்சாவூர் இராமசாமி பேட்டைத்தெருவில் ஒரு பிள்ளையார் கோவிலையும் கட்டித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை ஜும்மா பள்ளி வாசலில் உள்ள ஒலு செய்யும் (தண்ணீர் தொட்டி) இவரின் சொந்த சிலவில் உருவானது என்பதில் மிகையில்லை. இவரின் மனைவி காலம் சென்ற திருமதி உம்மா சல்மா அவர்களின் பெயரில் அறக்கட்டளை நடத்தி உதவிகளி மழையென தஞ்சை மக்களுக்கு பொழிந்தார். இன்றும் அவர்கள் குடும்பம் உதவிகள் பல செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் கடந்த இரு தினங்களாக இவருடைய படத்தையும் செய்தியையும் தேடி வருகின்றேன்.. ஆனால் கிடைக்கவில்லை. ஒரு நல்லவரின் மனைதநேயரின் செயலை உலகுக்கு தெரிவிக்கவே இங்கே இதைப் பதிகின்றேன். அவரால் பல முறை பாராட்டப்ட்டவன் நான். மிக எளிமையை கடைபிடிப்பார்.

எத்தனை வசதிகள் இருப்பினும், எத்தனை நபர்கள் இவரிடம் வேலை செய்தாலும் ஊருக்கு வரும் சமயங்களில் இறைச்சி, காய்கறிகள் வாங்க இவரே நேரிடையாக வருவார் என்பதும் மகிழ்ச்சிக்குறியது. அவ்வளவு எளிமைக்குச் சொந்தக்காரர். மகிழ்வுந்தில் சந்தைக்கு வரும் இவர் எங்கள் கடைக்கு வந்து முகவர்களோடு கலந்து முகம் மலர்வார். என் தந்தைக்கு சிறிய வயதிலிருந்தே மிகவும் நெருங்கிய பழக்கம் உள்ளவர்.

உரிமையுடன் தேநீர் வாங்கி வரச்சொல் என்று சொல்வார். உடன் நான் கல்லாவில் இருந்து இறங்கி கடைக்கு செல்ல முற்படுகையில் தம்பி நீ இரு என்று கடை ஊழியரை அனுப்பி சர்க்கரை இல்லாமல் சொல் என சொல்லி வரும் தேநீரை சாதாரண சாலை ஓரக்கடை தேநீரை பருகி எங்களுக்கு இன்பத்தை கூட்டுவார். மேலும் விடை பெறும்பொழுது பையில் கைவிட்டி கையில் கிடைப்பதை எங்கள் கடை ஊழியர் அனைவருக்கும் கொடுத்துவிட்டு இன்முகத்துடன் செல்வார்.

அரசியல் வாதிகளும் இன்னும் பிறரும் மறந்த நிலையில்…
நண்பர்களே இதை ஒரு விழிப்புணர்வு கட்டுரையாக கருதி அன்னாரின் புகழ் பரவவும், மற்றோரும் அதன்படி நடக்க தூண்டும் வகையில் அதிகம் அதிகம் பகிரவும்…

#Credit – தகவல் – Lion Zahir Hussain Pmjf

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions