தாஜ் மஹாலில் பாசி எப்படி படிகிறது? நீதிபதியின் கேள்விக்கு நச்சென்று பதிலளித்த தொல்லியல்துறை

0

முகலாயர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக விளங்கும் தாஜ் மஹாலை பாதுகாப்பதில் தொல்லியல் துறை கவனம் செலுத்தாததற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தாஜ் மஹாலை சுற்றிலும் இருக்கும் வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாலும், காற்று மாசுபடுதல் காரணமாகவும், அந்தக் கட்டடம் பாதிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தாஜ் மஹால் பழுப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறத்துக்கு மாறுவதற்கு, பூச்சி இனங்களும், பாசி படிவதுமே காரணம். யமுனை ஆற்றங்கரையோரம் தாஜ் மஹால் இருப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படுவதாக தொல்லியல் துறை கூறியது.

இதைக் கேட்ட நீதிபதிகள், உயர்ந்து நிற்கும் தாஜ் மஹால் கட்டடத்தில் பாசி எப்படி படிகிறது என்று கேட்டனர். அதற்கு தொல்லியல் துறை தரப்பில், பாசிகள் பறந்து வந்து கட்டடத்தில் படிந்து விடுகின்றன என பதில் கூறப்பட்டது.

என்ன? பாசிகளால் பறக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த தொல்லியல்துறை, தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க வரும் பயணிகள் அழுக்கான கால்களோடு வருவதால் தாஜ் மஹாலின் தரைப் பகுதி மிகவும் மோசமான மாசடைவதாகவும், விஐபிகளுக்கு மட்டுமே பிரத்யேகமான சாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் அவர்களது சாக்ஸ்களையே பயன்படுத்தி வருகின்றனர் என்று கூறியது.

இதனைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தாஜ் மஹாலின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் பிரச்னை இருக்கிறது என்பதை தொல்லியல் துறை ஏற்றுக் கொள்ளாததே முக்கியப் பிரச்னை. தொல்லியல் துறை தனது பணியை சரியாக செய்திருந்தால் இந்த பிரச்னையே எழுந்திருக்காது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தொல்லியல் துறை அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகள் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று கருத்துக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, தொல்லியல் துறையைத் தவிர்த்து தாஜ் மஹாலின் பாதுகாப்புக்கு வேறு என்ன வழி இருக்கிறது என்பதை ஆராய வேண்டும் என்றும் கூறினர்.

இதற்கு, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல், ஏ.என்.எஸ்.நட்கர்னி, தாஜ் மஹாலை பாதுகாக்க உள்நாட்டில் இருந்தோ அல்லது வெளி நாடுகளில் இருந்தோ நிபுணர்களை பணியமர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையை ஏற்று, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

முன்னதாக இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல், ஏ.என்.எஸ்.நட்கர்னி ஆஜரானார். அப்போது, மனுதாரர் சார்பில் தாஜ் மஹாலின் தற்போதைய நிலையை காட்டும் புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றை பார்த்த பிறகு நீதிபதிகள் கூறியதாவது:
தாஜ் மஹால் முதலில் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்கிறது. தற்போது அரக்கு நிறமாகவும், பச்சை நிறமாகவும் மாறி வருகிறது.

மத்திய அரசிடம் நிபுணர்கள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஒருவேளை, நிபுணர்கள் இருந்தாலும், அவர்களை அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை அல்லது தாஜ் மஹாலைப் பற்றி கவலைப்படவில்லை என்றே தோன்றுகிறது. தாஜ் மஹாலை அப்படியே விட்டுவிடலாம்(!) போல.

உள்நாட்டில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ நிபுணர்களை பணியமர்த்தி, முதலில் பாதிப்புகளை ஆய்வு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கலாம். பின்னர் அதை சரி செய்யும் பணிகளை செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

உலக பாரம்பரிய சின்னங்களை அடையாளப்படுத்தும் யுனெஸ்கோவின் பட்டியலில் தாஜ் மஹால் இருப்பது குறிப்பிடத்தக்கது

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions