தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் !

0

நீர் நிலைகளின் புனிதம் பாதுகாக்கப் படனுமுன்னு சொல்லி தாமிரபரணி புஷ்பகர விழா (புனித நீராடலாம்) தமிழ்நாட்டுல கோலாகலமா கொண்டாடப்படுது. நாலாயிரம் போலீசுக்கு மேல பலத்த பாதுகாப்போட சிறப்பு பயண வசதிகளோட தடபுடலா நடந்துட்டு இருக்கு. நம்ம கவர்னர் கூட காவி வேட்டி கட்டிக்கிட்டு போகப்போறாராம்.

தண்ணிய மையமா வச்சு புஷ்பகரம் புனிதமுன்னு தீவிரமா நடக்குற இந்த கூத்துக்கு மத்தியில அதே தண்ணியால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாது கையறு நிலையில் நிக்கிறாங்க தஞ்சை டெல்டா விவசாயிகள்.

ஒரத்தநாடு பக்கத்துல உள்ள மேல உளூர் என்ற கிராமத்துல கல்லணை கால்வாயின் பிரிவான கல்யாண ஓடை ஆற்றின் இடது புற கரையில் நேற்று (8.10.2018) உடைப்பு ஏற்பட்டது. சுமார் பத்து மீட்டர் அளவுல ஏற்பட்ட உடைப்பினால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

 

உடைப்பு ஏற்பட்ட மேல உளூர் கிராமத்தைச் சுற்றி உள்ள மற்ற கிராமங்களான பருத்திக்கோட்டை, தும்பத்திக்கோட்டை, கீழஉளூர், பொண்ணாப்பூர், ஒரத்தநாடு மேலும் சில கிராமங்களின் நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.

காலதாமதமாக காவிரியில் தண்ணீர் வந்ததாலும் நீர் நிலைகளின் பராமரிப்பு சரியில்லாததாலும் சம்மா பயிர் சாகுபடி பின்தங்கிப் போனது. ஏறக்குறைய நடவுப்பணிகள் இந்த ஒரு மாத இடைவெளியில் தான் நடந்துள்ளது. பயிர் வேர் பிடிக்க தொடங்கும் இந்த நேரத்தில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

படிக்க:
♦ சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு
♦ வாழ வழி காட்டுயான்னா பேள வழி காட்டுறாரு மோடி!

ஒரு மாதம் கடந்துவிட்ட பயிர்களுக்கு போடப்பட்ட உரம் மருந்தும் தண்ணீரோடு கலந்துவிட்டது. உடைப்பு சரிசெய்யப்பட்டு வயல்களில் தண்ணீர் வடிந்த பின் மிஞ்சியுள்ள பயிர்களுக்கு மீண்டும் உரம் போட்டு சற்றேனும் பயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கவலையில் உள்ளனர் சில விவசாயிகள்.

ஆற்றின் கரையில் நின்ற மரம் சாய்ந்து இருந்ததாகவும் தொடர்ந்து ஒரு வாரம் மழை பெய்த காரணத்தால் மரம் விழுந்து விட்டது. மண் அரிப்பு ஏற்பட்டு கறை உடைந்து விட்டது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

ஆனால் நீர்நிலைகளின் பராமரிப்பு செலவுகளுக்கு ஒதுக்கும் நிதியில் இருந்து தஞ்சாவூர் கல்லணை கால்வாயின் குடிமராமத்து பணிக்காக ரூ 2.78 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் எந்த நிர்வாகச் சீர்கேட்டையும் அறியாத அப்பாவி விவசாயிகள் உயிரைக் கொடுத்து விவசாயம் செய்துள்ளனர். நடவு நட்டு சில தினங்களே ஆன பயிர்கள் மட்டும் பாதிக்கவில்லை. ஆள்துளை கிணற்று தண்ணீரை கொண்டு நடவு பணி செய்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தரையோடு சாய்ந்துள்ள நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி முளைத்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த உடைப்பு ஏற்பட்டதால் ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதியையும் தாண்டி மதுக்கூர் வரை பல ஊர்களுக்கு இந்த கல்யாண ஓடை ஆற்றில் இருந்துதான் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்கிறது. ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் உயிர் விட்டு துளிர்க்கும் நிலையில் இருக்கும் சம்பா பயிர்கள் பாதிக்கப்படும். பயிர் வேர் விடாத நிலையில் மழை பெய்தால் பயிர் சாய்ந்துவிடும். இந்த நேரத்தில் ஆற்றுத் தண்ணீர் கட்டாயம் தேவைப்படும்.

இதனால் உடைப்பு ஏற்பட்ட பகுதி நிலங்களுக்கு மட்டும் பாதிப்படைவதோடு அல்லாமல் கல்யாண ஓடை ஆற்றின் கடைசி எல்லை வரை பாதிப்பு இருக்கும். இந்த ஆற்றின் தண்ணீரை நம்பி நடவுப்பணி செய்த விவசாயிகளின் நிலை என்ன? ஆற்றில் தண்ணிவந்த உற்சாகத்தில் கடன வாங்கி நடவு வேலைகளை செய்தவர்கள் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க பணத்துக்கு எங்கேப் போவது, ஏற்பட்ட இழப்பை எப்படி சரிகட்டுவது என புலம்புகின்றனர்.

படிக்க:
♦ காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? நேரடி ரிப்போர்ட்
♦ மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் !

காவிரி பிரச்சனை அதையும் தாண்டி தண்ணீர் வந்தால் பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. உரம் விலை உயர்வு. விவசாய கடன்கள் கிடைப்பதில் முறைகேடு. விளைந்த நெல்லை விற்க முடியவில்லை. வறட்சி நிவாரணம் வெள்ள நிவாரணம் எதை எடுத்தாலும் துன்பத்தில் உழல்கிறான் விவசாயி.

thanks to : vinavu.com

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions