தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி

0

பெரும் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்த பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் குழுமியுள்ளனர். இரண்டாவது நாளாக டெல்லியில் அவர்களது போராட்டம் இன்றும் தொடர்ந்தது. விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகள் தவிர்த்து, பிற கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று விவசாயிகளுடன் கலந்தாலோசித்து அவர்களுக்கு ஆதரவாக பேசி திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் மதியம் 3.45 மணி அளவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார். விவசாயிகள் நடுவே அவர் பேசும்போது “பெருமுதலாளிகளின் கடன்களை நரேந்திர மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. அப்படி இருக்கும்போது விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் இலவசத்தையோ, பரிசையோ, எதிர்பார்க்கவில்லை. இது விவசாயிகளின் அடிப்படை உரிமை. இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புவது.. காங்கிரஸ் கட்சி உங்களோடு உள்ளது. நீங்கள் பயப்பட தேவையில்லை. இந்த நாடு இப்பொழுது மிகப்பெரும் இரு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதில் ஒன்று விவசாயிகளின் எதிர்காலம் குறித்த கேள்வி, மற்றொன்று இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு. விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான போராட்டம் இது. தொழிலதிபர்களுக்காக நரேந்திர மோடி அரசு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்

thanks to : tamil.oneindia.com

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions