துபாய் டாக்சி கார்ப்பரேசனின் வர்த்தக விவகாரம் மற்றும் செயல்பாட்டு இயக்குனர் மர்வான் அல் ஜரூணி கூறியதாவது:-
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் செயல்படும் துபாய் டாக்சி கார்ப்பரேசன் சார்பில் பள்ளிக்கூட பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் அந்த துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ள துபாயில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்கு பஸ் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சேவையில் தற்போது 21 பள்ளிக்கூடங்கள் பதிவு செய்துள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் இருந்து பஸ் மூலமாக 18 ஆயிரத்து 608 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். இதற்காக மொத்தம் 400 பள்ளிக்கூட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ்களை இயக்குவதற்காக நன்கு தேர்ச்சி பெற்ற டிரைவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 129 பெண் ஊழியர்கள் பஸ்களில் பணியமர்த்தப்பட்டு மாணவர்கள் கவனித்துக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது கொரோனா பாதிப்பை தடுக்க அவர்களுக்கும் சுகாதார பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்கள் முககவசம் அணிவது, கிருமி நாசினிகளை கைகளில் பூசிக்கொள்வது, சமூக இடைவெளியை பராமரிப்பது ஆகியவற்றை கண்காணிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
குறிப்பாக தற்போது 2020-2021 ஆம் கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில் பள்ளிக்கூடங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் முழுவதும் கிருமி நாசினி நீக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கிருமி நாசினியானது பஸ்களின் உள்ளே தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் அமரும் இருக்கைகளில் இடைவெளிவிட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அனைத்து பஸ்களிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே பஸ்களில் அனுமதிக்கப்படுவர். மாணவர்களுக்கு சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.