ஐபிஎல் கிரிக்கெட் டி20 லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக 8 அணி வீரர்களும் துபாய், அபு தாபி, சார்ஜா சென்றுள்ளனர். வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் தற்போது ஒரு வாரக்கால தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.
இந்நிலையில் விளையாடும் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்வதற்காக தேசிய ஊக்கமருத்து எதிர்ப்பு அமைப்பின் மூன்று உயர் அதிகாரிகள் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இருக்கின்றனர். அவர்களுடன் ஆறு ஊக்கமருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் செல்கின்றனர்.
விளையாட்டு போட்டியின்போதும், விளையாட்டு போட்டி இல்லாத நிலையிலும் 50 மாதிரிகளை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும் அதிகாரிகள் தேவைப்படும் பட்சத்தில் ஐக்கிய அரசு அமீரகத்தின் ஊக்கமருத்து தடுப்பு அமைப்பிடம் இருந்து அழைத்துக் கொள்வார்கள்.
பிசிசிஐ-யின் ஐந்து ஊக்கமருந்து தடுப்பு நிலையத்தை அமைக்கும்படி தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.