புகைப்பவர்களை மட்டுமல்ல சுவாசிப்பவர்களையும் பாதிக்கும் புகைப்பழக்கம்

0
புகைப்பவர்களை மட்டுமல்ல சுவாசிப்பவர்களையும் பாதிக்கும் புகைப்பழக்கம்

புகைப்பழக்கம்
உலகில் எக்குத்தப்பாக எகிறிக்கொண்டிருக்கிறது புகைக்கும் பழக்கம். இதனால் வரும் நோய்கள் காலம்காலமாக உயிரை காவு வாங்கிக்கொண்டிருக்கின்றன. இது ஒரு புறம் இருக்க, புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசித்து பாதிப்புகளுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெண்கள் பலரும் புகைக்க ஆரம்பித்திருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருமாறி வருகிறது. புகைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள், நோய்கள் பற்றி உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டு உள்ளது.

சிகரெட் மட்டும்தான் என்றில்லை, பீடி, பான் பொருட்கள், புகையிலை என அனைத்து வகை போதை பொருட்களும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் புகைக்கும் பழக்கம் 60 லட்சம் பேரை கொல்கின்றது. இதில் 50 லட்சம் பேர் நேரடியாக புகைப்பவர்கள். 6 லட்சம் பேர் புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசிப்பதால் இறப்பவர்கள்.

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும் என்றும் கூறுகிறார்கள். புகைக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழை, வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள். உலக அளவில் 10 சதவீத வருவாய் புகையிலை சார்ந்த பொருட்கள் மூலம்தான் கிடைக்கிறது.

பொருளாதார ரீதியில் இது நல்லதாகப் பார்க்கப்பட்டாலும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம், தேவையற்ற மருத்துவச் செலவு, மனித உழைப்பு வீணடிப்பு ஆகியவற்றையும் சேர்த்தே இந்த பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும். புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய் இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு வருகிறது. புகையிலையால் உருவாகும் புற்றுநோய்களில் இதுவே அதிகம்.

புகைப்பவர்கள் புகையை மட்டும் விடுவதில்லை. அதோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான நச்சுகளையும் வெளியிடுகின்றனர். இந்த நச்சுகளில் 250 நச்சுகள் அதிக தீங்கு விளைவிப்பவை. 69 நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. சிகரெட்டில் நோயை உண்டாக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. தொடர்ந்து புகைப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப்பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்று நோய் ஏற்படலாம். மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காச நோய், மலட்டுத் தன்மை என மற்ற பாதிப்புகளும் உருவாகலாம்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions